தற்போது எந்திரன் வேலூருக்கு சென்றுவிட்டார். வேலூரில் உள்ள VIT (Vellore Institute of Technology) யில் இன்று படப்பிடிப்பு நடைபெற்றது. சூப்பர் ஸ்டார் மற்றும் ஐஸ்வர்யா ராய் சம்பந்தப்பட்ட காட்சிகளை படம்பிடித்தார் ஷங்கர்.
படப்பிடிப்புக்காக தேர்வு செய்யப்பட்ட லொக்கேஷனை பார்வையிட நேற்று VIT க்கு வந்தார் இயக்குனர் ஷங்கர். பல்கலைக்கழக கட்டிடத்தில் அமைந்துள்ள பிரம்மாண்டமான வளாகம் மற்றும் டெக்னாலஜி டவர் ஆகியவற்றை ஷங்கர் பார்வையிட்டார்.
பசுமையான கேம்பஸ்
பச்சைபசேலென்று பசுமையாக இருக்கும் கேம்பஸ், மற்றும் நேர்த்தியான அதன் கட்டிடங்கள் VIT யின் சிறப்பம்சமாகும். (இணைக்கப்பட்டுள்ள படங்களை பாருங்களேன், நீங்களே சொல்வீர்கள்.) எந்திரன் போன்ற சயன்ஸ் ஃபிக்க்ஷன் படங்களை ஷூட் செய்ய VIT ஏற்றதொரு இடமாகும். மேலும் இது விடுமுறைக்காலம் என்பதால் ஷங்கர் உடனடியாக இந்த லொக்கேஷனை டிக் செய்துவிட்டார்.
விறுவிறுப்பான படப்பிடிப்பு
இதையடுத்து சூப்பர் ஸ்டாரும் ஐஸ்வர்யா ராயும் தனிதனி கார்களில் இன்று அதிகாலை வேலூர் வந்தனர். பல்கலைக்கழக வளாகத்திலேயே அவர்கள் தங்கியுள்ளனர். இது விடுமுறை காலம் என்பதால் எந்த வித இடையூறும் இன்றி படப்பிடிப்பு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. (நமது நண்பர் ரோபோ சத்யா கமென்ட் மூலம் இதை நமக்கு தெரிவித்துள்ளார். இன்று மாலை தமிழ் முரசு இதழில் கூட இது குறித்து சிறிய செய்தி வந்துள்ளது).
பல்கலைக்கழக வேந்தராக இருக்கும் முன்னாள் அமைச்சர் திரு. ஜி.விஸ்வநாதன் சூப்பர் ஸ்டாரை சந்தித்திருக்கலாம் என்று தெரிகிறது. அது குறித்து சரியான தகவல்கள் கிடைத்தவுடன் விரிவாக உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
ஷங்கருக்கு நன்றி
தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு மிக அரிதாகவே சென்றிருக்கும் சூப்பர் ஸ்டாரை வேலூர் மாவட்டத்திற்கு வரவழைத்துள்ள இயக்குனர் ஷங்கருக்கு வேலூர் ரசிகர்கள் நன்றி கூறலாம்!
[END]