Friday, December 19, 2008

எந்திரன் - சில சந்தேகங்களும் சில விளக்கங்களும்!!

ந்திரன் படத்தை பொறுத்த வரை, சில சிக்கல்கள் வந்த போதும் படப்பிடிப்பு, அது பாட்டுக்கு போய்க்கொண்டிருந்தது. ஷங்கரை பொறுத்தவரை, கடுமையான ஷெட்யூலுக்கு பின்பு ஒரு வாரமோ அல்லது பத்து நாட்களோ யூனிட்டாருக்கு விடுமுறை அளித்துவிடுவார். யூனிட் ஆட்கள் புத்துணர்ச்சியுடன் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இது பேருதவியாக இருக்கும். இப்படி விடுமுறையில் இருந்ததை தான் சிலர் படம் நீண்ட நாட்களாக நின்றுவிட்டது என்று கதை கட்டிவிட்டனர். சிவாஜியில் கூட ஷங்கர் இதையே தான் கடைபிடித்துவந்தார்.

சரி பிரச்னை துவங்கியது எங்கே?

கடந்த சில ஆண்டுகளாக ஐங்கரன் நிறுவனம் பல படங்களை தயாரித்தும், வாங்கி குவித்தும் வந்தது. கடந்த தீபாவளிக்கு வெளியான சேவல், ஏகன் உள்ளிட்ட படங்களும், அது தவிர 2008 இல் வெளியான எண்ணற்ற பல படங்களை இவர்கள் வாங்கி வெளியிட்டனர். ஓரிரண்டு படங்கள் தவிர அனைத்தும் இவர்களுக்கு நஷ்டத்தையே ஏற்படுத்தின. (இந்த ஆண்டு துவக்கம் முதல் பத்திரிக்கைகளில் வெளியான சினிமா விளம்பரங்களை எடுத்து பாருங்கள் இவர்கள் எத்தனை படங்களை வெளியிட்டிருக்கிறார்கள் என்று தெரியும்.) அது தவிர மீடியம் பட்ஜெட், மற்றும் ஹை பட்ஜெட் என்று பல படங்களை தற்போது தயாரித்து வருகின்றனர். (www.ayngaran.com சென்று பாருங்கள் புரியும்). இவை அனைத்திற்கும் நிதி தேவையல்லவா? ஏற்கனவே வெளியிட்ட பல படங்கள் நஷ்டத்தை ஏற்படுத்திய நிலையில், புதிதாக நிதிக்கு அவர்கள் எங்கே செல்வார்கள்? இந்த சூழ்நிலையில் சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக இவர்களின் கூட்டு நிறுவனமான Eros International திடீரென படத்தயாரிப்பிலிருந்து விலகிக்கொண்டது. இந்த காரணங்களினால் பணப்பற்றாக்குரையில் சிக்கி தவித்தது ஐங்கரன். எந்திரனுக்கு ஏற்கனவே 25 கோடிகளுக்கும் மேல் செலவழித்துவிட்ட நிலையில் அடுத்த ஷெட்யூலுக்கு பணத்தை தயார் செய்ய அவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

"பீலி பெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்"

பொருள்: மயிலிறகே ஆனாலும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துவிடும்.

என்னும் குறளுக்கு ஏற்ப ஏற்கனவே பல படங்களின் வெளியீட்டில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக பொருளாதார நெருக்கடி முற்றியிருக்க, ஒரு சிறு செலவை கூட அவர்கள் தாங்க இயலாமல் போகும் சூழ்நிலையில் எந்திரன் என்னும் டினோசாருக்கு எப்படி தீனி போடுவார்களாம்?

அதே சமயம் சூப்பர் ஸ்டாரை வைத்து படத்தை (பணத்தை) தயாரிக்கும் பொன்னான வாய்ப்பை அவர்கள் எந்த சூழ்நிலையிலும் இழக்க விரும்பவில்லை. ஆகையால் எங்களால் படத்தை இனி தொடரமுடியாது என்று அவர்கள் கூறவில்லை. அதற்க்கு பதில் தேவையான பணத்தை புரட்டும் வழிமுறைகளில் இறங்கினர். இதனால் படப்பிடிப்பு சில நாட்கள் தாமதமாகியது.

இந்த விஷயங்களை கேள்விப்பட்ட சூப்பர் ஸ்டார், நம் படத்தை தயாரிப்பவர்கள் கஷ்டப்பட்டு தயாரிக்க கூடாது. முழு மன மகிழ்ச்சியுடன் எந்த வித பிரச்னையும் இன்றி அவர்கள் அந்த பணியில் ஈடுபடவேண்டும். அப்போது தான் எனக்கும் நடிப்பதில் ஈடுபாடு இருக்கும். வேண்டுமானால், வேறு தயாரிப்பாளரை பார்த்துக்கொள்ளலாமா என்று அவர்களிடம் கேளுங்கள் என்று ஷங்கரிடம் கூற, ஷங்கரும், ஐங்கரனிடம் இது தொடர்பாக பேசினார். இது வரை படத்தை தயாரிக்க ஆனா முழு தொகையும் ப்ளஸ் கூடுதலாக படத்தை கைமாற்றிவிட ஒரு தொகையும் பெற்று தருவதாகவும் கூறினார். படத்தை இப்படி கைமாற்றிவிட ஐங்கரன் நிறுவனம் விரும்பவில்லையென்றாலும், படத்தில் நடிப்பது சூப்பர் ஸ்டாராயிற்றே. நாளை இன்னும் கடுமையான பொருளாதார சிக்கல் தோன்றி படத்தை தொடரமுடியவில்லைஎன்றால் என்ன செய்வது? எனவே இந்த ஏற்பாட்டிற்கு உடனிடயாக ஒப்புக்கொண்டனர்.

ஏற்கனவே சூப்பர் ஸ்டாரை வைத்து படத்தை தயாரிக்க தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்த சன் குழுமம், எந்திரனை தயாரிக்க முன்வந்தது. சன் டி.வி. நிகழ்ச்சி இயக்குனர் ஹன்ஸ்ராஜ் சக்சேனாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று இறுதியில் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. (இது தொடர்பாக கை மாறிய தொகை எவ்வளவு என்று சரியாக தெரியவில்லை. தெரிந்த பின் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.)

ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும், ஐங்கரன் நிறுவனம் இது வரை இது குறித்து எந்த கருத்தும், புகாரும் கூறவில்லை என்பது தான். ஏனென்றால் அவர்களை பொறுத்தவரை ஒரு பொன்னான வாய்ப்பு அவர்களை விட்டு நழுவி செல்கிறது என்பதை அவர்கள் உணர்ந்தேயிருக்கின்றனர். இன்றளவும் சூப்பர் ஸ்டாருடனும் ஷங்கருடனும் அவர்கள் நல்லுறவையே கொண்டிருக்கின்றனர்.

இந்த ஒப்பந்தம் தொடர்பாகவும், அதன் விளைவுகளை பற்றியும் உங்களுக்கு இருக்கும் சில சந்தேகங்களும் அவற்றிக்கு நம் அறிவுக்கு எட்டிய சில விளக்கங்களும்.

சில சந்தேகங்களும் சில விளக்கங்களும்

இதுவரை நீங்கள் சன்.டி.வி. மீதும் மாறன் சகோதரர்கள் மீதும் நீங்கள் கூறிய குற்றச்சாட்டுகளின் நிலை என்ன?

அத்தகைய குற்றசாட்டுகளுக்கும் அவர்களின் கடந்த கால செயல்பாடுகளுக்கும் இப்போது அவர்கள் உரிய பிராயச்சித்தம் தேடிக்கொண்டனர் என்று - நான் மட்டுமல்ல - பெரும்பாலான ரசிகர்களும் கருதுகின்றனர்.

இதனால் எந்திரனுக்கு கிடைக்கப்போகும் சாதகங்கள் என்ன?

படத்தை பற்றியோ அதன் விளம்பரத்தை பற்றியோ நாம் இனி கவலைப்படவேண்டியதில்லை. படத்தை பற்றி வரும் எதிர் மறையான செய்திகளை எதிர்கொள்வதை கூட இனி சன் குழுமம் பார்த்துக்கொள்ளும். பொருளாதார சிக்கல் என்ற கேள்விக்கே இனி இடமில்லை. படப்பிடிப்பு தங்கு தடையின்றி தொடரும். சன் குழுமம் பரந்து விரிந்துள்ள தென்னிந்தியா மற்றும் உலக நாடுகள் முழுதும் படம் நன்கு மார்க்கெட் செய்யப்படும். தென்னிந்தியாவில் அனைத்து மொழிகளிலும் சன் குழுமத்திற்கு இருபதுக்கும் மேற்பட்ட சேனல்கள் உள்ளன. இது தவிர அரை டஜன் சானல்கள் புதிதாக வெளிவரவிருக்கின்றன. இந்தியா முழுதும் சன் குழுமத்திற்கு இருக்கும் FM Stations மட்டும் 45 க்கும் மேல்.

பாதகங்கள் என்ன?

ரஜினி மீது தி.மு.க. ஆதரவு நடிகர் என்று முத்திரை குத்த அவரது எதிரிகள் முயற்சிக்கலாம். ஆனால் அவர் பிசினஸ் வேறு, நடிப்பு வேறு, அரசியல் வேறு என்பதை தெளிவாக புரிந்து வைத்திருப்பவர். இதை எப்படி எதிர் கொள்ளவேண்டும் என்று அவருக்கு தெரியும்.

மற்ற பத்திரிக்கைகள், மீடியா சக்திகள் எந்திரனை எப்படி இனி கையாளும்?

ஆங்கில பத்திரிகைகளை பொறுத்தவரை அவர்கள் போக்கில் எந்த மாற்றமுமிருக்காது. இப்போது உள்ள நிலையே தொடரும். ஏனெனில் சன் குழுமம் அவர்களுக்கு எந்த விதத்திலும் நேரடி போட்டியை அளிக்கவில்லை. (தினகரன் மற்றும் தமிழ் முரசு, குங்குமம் ஆகியவை தமிழில் வெளியாகும் பத்திரிக்கைகள்).

மற்றபடி தமிழ் தினசரிகள் மற்றும் பத்திரிக்கைகள் எந்திரனை பற்றிய செய்திகளை தவிர்க்கும் வாய்ப்பிருக்கிறது. தந்தி குழும வெளியீடுகளான தினத் தந்தி மற்றும் மாலை மலரில் எந்திரன் பற்றிய செய்திகளை இனி அதிகம் பார்க்க முடியாது. அதே சமயம் தந்தி குழுமம் எதிர் மறை செய்திகளையும் வெளியிடாது.

தினமலரில் நிச்சயம் எதிர்மறை செய்திகள் எதிர்பார்க்கலாம். ஏற்கனவே ரஜினி எதிர்ப்பு செய்திகளென்றால் அவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல. இப்போது கேட்கவேண்டுமா?

விகடனின் ரஜினி எதிர்ப்பு செய்திகளில் எந்த மாறுபாடும் இருக்காது என்பது ஒரு ஆச்சரியமான விஷயம். (ஆமாம் இவன் ஆதரிச்சு என்ன ஆகபோகுது? மக்கள் முற்றிலும் புறக்கணித்துவிட்ட ஒரு பத்திரிகை நம்மை ஆதரித்தால் என்ன எதிர்த்தால் என்ன? எல்லாம் ஒன்று தான்!!)

மற்றபடி குமுதம், குமுதம் ரிப்போர்டர் மற்றும் இன்ன பிற பத்திரிக்கைகளிலும் இப்போதுள்ள நிலைப்பாடே தொடரும். (பரபரப்புக்கு அவை தங்கள் வாரமிருமுறையில் வெளியிடும் செய்திகளையோ கட்டுரைகளையோ கணக்கில் கொள்ளவேண்டாம்.)

கூட்டி கழித்து பார்த்தால் தந்தி குழுமம் கூடுமானவரை எந்திரன் செய்திகளை தவிர்க்கும். தினமலர் தன்னுடைய குப்பண்ணா, குப்பைதொட்டி, இது நீங்க வாந்தியெடுக்கும் இடம் உள்ளிட்ட பகுதிகளில் எந்திரன் பற்றி எதிர்மறை செய்திகளை வெளியிட்டு வக்கிரத்தை தீர்த்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. மற்ற பத்திரிக்கைகளில் இப்போதுள்ள நிலையே தொடரும்.

எந்திரனை சன் குழுமம் தயாரிப்பது குறித்து ரசிகர்கள் ரீஆக்க்ஷன் என்ன?

"படம் நிச்சயம் சூப்பர் ஹிட்" - இது தான் பெரும்பாலான ரசிகர்கள் இந்த ஒப்பந்தம் குறித்து முதலில் தெரியவந்தவுடன் கூறியது.

ரஜினியின் நிலைப்பாடு என்ன?

இப்போதைக்கு இது முழுக்க முழுக்க ஒரு சினிமாவுக்கான Business Deal என்ற அளவில் தான் அவர் செயல்படுவார்.

இதன் மூலம் ரஜினிக்கு ப்ளஸ்ஸா மைனஸா?

சற்று தீவிரமாக யோசித்து பார்த்தால் இந்த ஒரு மூவ் மூலம் அவர் பல காய்களை அனாயசமாக அடித்திருக்கிறார் என்பது புரியும். அது என்ன என்று அவரவர் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன். ஆனால் இந்த ஒப்பந்தம் பற்றி கேள்விப்பட்டவுடன் கருப்பு எம்.ஜி.ஆர், சிவப்பு எம்.ஜி.ஆர், பச்சை தமிழன், சிவப்பு தமிழன், புர்ச்சி தமிழன், தகரத் தமிழன் உள்ளிட்ட பலர் தங்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டனர்.

ரஜினி கலாநிதி மாறனின் இல்லத்திற்கே சென்றது சரியா?

தன்னை நம்பி அனாயசமாக பல கோடிகளை கொட்டி தனது படத்தை வாங்கி தயாரிக்கபோகும் ஒரு தயாரிப்பாளரின் இல்லத்திற்கு சூப்பர் ஸ்டார் சென்றது எப்படி தவறாகும்? மேலும் குடும்ப நிகழ்ச்சிகள் தவிர இதுவரை வேறு எந்த நிகழ்ச்சியிலும் கலாநிதி மாறனின் புகைப்படம் வெளியானதில்லை. ஆனால் மேற்படி ஒப்பந்தத்திற்காக சூப்பர் ஸ்டாருடன் அவர் மிகவும் மகிழ்ச்சியாக போஸ் கொடுத்தது அரசியல் பார்வையாளர்கள் மத்தியிலேயே வியப்பை ஏற்படுத்தியது. மேலும் சூப்பர் ஸ்டார் மாறனின் இல்லத்திற்கு வந்தபோது காரிலிருந்து இறங்கியவுடன் போர்டிகோவிற்கே வந்து வரவேற்று அழைத்து சென்றார். அதே போல கிளம்பும் போது காரில் ஏறும் வரை வந்து வழியனுப்பிவைத்தார். இது மிகவும் அசாதரணமான ஒன்றாகும்.

சன்னிற்கு இதனால் கிடைக்கப்போகும் நன்மைகள் என்ன?

இந்த ஒப்பந்தத்தால் சன்னிற்கு தான் அதிகபட்ச நன்மைகள்.

அவர்களின் புதிய நிறுவனமான சன் பிக்சர்சுக்கு உலக அளவில் விளம்பரமும் அங்கீகாரமும் கிடைக்கும். எந்திரன் பட சாட்டிலைட் உரிமம் தடையின்றி அவர்கள் வசம். (குசேலனை இழந்ததால் அவர்கள் செய்தது இன்னும் நினைவிருக்குமே?). அவர்கள் 45 எப்.எம். ஸ்டேஷன்களில் (ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட) பாடல்களை ஒளிபரப்பிக்கொள்ளலாம். நம்பர் ஒன் நடிகர், நம்பர் ஒன் இயக்குனர், நம்பர் ஒன் இசையமைப்பாளர், ப்ளஸ் உலக அளவில் புகழ் பெற்ற நடிகை ஆகியோரை வைத்து படமெடுப்பது மிகப்பெரிய கௌரவம் ஆகும். எல்லவற்றிர்க்குமேல் சூப்பர் ஸ்டாருடன் நெருங்கி பழகும் வாய்ப்பை அவர்கள் பெற்றுள்ளது.

எத்தனையோ பேர் இருக்க சூப்பர் ஸ்டார் சன்னை டிக் செய்தது ஏன்?

எதிர்காலத்தில் ஷங்கரின் 'Grandeur' மற்றும் 'Perfection' காரணமாக படத்தின் பட்ஜெட் கொஞ்சம் அதிகரித்தாலும் அதை தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தி சன் குழுமத்திற்கு இருக்கிறது. மற்றவர்கள் நிலை அப்படியல்ல. அதையெல்லாம் யோசித்து தான் சன் குழுமத்தை சூப்பர் ஸ்டார் டிக் செய்தார்.

இது போல தயாரிப்பு சிக்கல்களை சந்திக்கும் வேறு சில மெகா-பட்ஜெட் படங்களையும் சன் குழுமம் தயாரிக்க முன் வருமா?

அத்தைக்கு மீசை முளைக்கட்டும். பிறகு பார்க்கலாம். ஓடும் குதிரையிலல்லவா பொதுவாக அனைவரும் பணத்தை கட்ட விரும்புவார்கள்..

சன்னிடம் ரஜினி தஞ்சமடைந்துவிட்டார் என்று கூறப்படும் கருத்து பற்றி?

இது குறித்து நம் நண்பர்கள் கூறிய கருத்தையே இங்கு பதிலாக தருகிறேன்.

கிரி:

தஞ்சம் அடையவில்லை, அவர்கள், நாங்கள் உங்கள் படத்தை தயாரிக்கிறோம் என்று முன் வந்து இருக்கிறார்கள். அவர்கள் ஒன்றும் சும்மா வந்து உதவி செய்ய உதவும் கரங்கள் கிடையாது. ரஜினியை வைத்து எத்தனை லாபம் பார்க்கலாம் என்று தான் பார்ப்பார்கள். அவர்கள் ஒன்றும் ஓசியில் செய்யவில்லை.

ரஜினியை வைத்து சன் தங்கள் சன் பிக்சர்சை உலகளவில் பிரபல படுத்த இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளும்.

சன் குழுமம் ஒன்றும் இளிச்சவாயர்கள் அல்ல அடுத்தவர்களுக்கு காரணமில்லாமல் உதவி செய்ய.

கணேஷ்:

முரட்டு குதிரைக்கு கடிவாளம் போடும் மாவீரன் தான் எங்கள் தலைவர். சன் குழுமத்தினரால் (தினகரன், சன் டிவி, போன்ற மிடியாக்கள்) பரப்பி வந்த விஷமத்தை தயாரிப்பாளர் என்ற கடிவாலத்தை மாட்டி தடுத்திருக்கிறார். மற்றபடி நீங்கள் கூறியது போல சன் குழுமத்திடம் தஞ்சம் எங்கள் தலைவர் தஞ்சமடையவில்லை.

சேகர்:

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே ரஜினியை வைத்து படம் தயாரிக்கவேண்டும் என்ற ஆசையை கலாநிதி மாறன் ரஜினியிடம் வெளிப்படுத்தியிருந்தார். சன் பிக்சர்சின் முதல் தயாரிப்பே ரஜினி படமாக இருக்கவேண்டும் என்று அவர்கள் விரும்பியது பற்றியும் செய்தித்தாள்களில் செய்தி வந்துள்ளது. (தெனாவட்டு, காதலில் விழுந்தேன் படத்தை அவர்கள் தயாரிக்கவில்லை. வாங்கி வெளியிட்டார்கள்.)

இதுபோல் இன்னும் பல கருத்துக்களை நம் நண்பர்கள் கூறியிருக்கிறார்கள். சும்மா சாம்பிளுக்கு மூன்று நண்பர்களின் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறேன். அனைவருக்கும் நன்றி.

[END]