Thursday, December 11, 2008

சாட்டை சும்மாயிருந்தாலும் பம்பரம் சும்மா விடாது...

ரசியலுக்கு வர நேரம் காலம் எதுவும் பாராமல், கொள்கைகள் எதுவுமின்றி சுற்றியிருப்போர் ஏத்திவிட்ட ஒரே காரணத்தால் அரசியல் பிரவேசம் செய்தார் விஜயகாந்த். அதனால் அவரை தைரியசாலி என்று அழைத்து மகிழ்கிறது ஒரு கூட்டம்.

இது குறித்து தற்போது கருத்து கூறியுள்ள நம் விருந்தினர் ஒருவர், "நாடு போகும் நிலை தற்போது சரியல்ல. கொஞ்சம் பொறுத்திருப்போம்" என்று ரசிகர் சந்திப்பில் ரஜினி கூறியதை மிகவும் தவறாக விமர்சனம் செய்துள்ளார். (கவனிக்க: ரசிகர்களுக்கு அவர்களுடனான சந்திப்பில் ரஜினி கூறியது இது. அழையா விருந்தாளிகள் அதை விமர்சிப்பது சரியான காமெடி!!)

சாட்டை சும்மாயிருந்தாலும் பம்பரம் சும்மா விடாது என்பது இது தான்.

மேலும் அவர் கூறியது தான் உச்சகட்ட காமடி. இப்போது இருக்கும் தலைவர்களிலேயே விஜயகாந்த் தான் மிகவும் நல்லவராம். ரஜினி தினமும் குழப்பிகொண்டிருக்கிறாராம். நான் தெரியாமல் தான் கேட்கிறேன், அரசியலுக்கு வருவது தொடர்பாக ரஜினி தினமும்.... அட விடுங்கள் .... அட்லீஸ்ட் வாராவாரம் பேட்டி கொடுத்துகொண்டிருக்கிறாரா? போங்கடாங்.... அவர் கூறியது எங்களுக்காக. எங்களுக்கு விளங்கிவிட்டது. விளங்காதவர்கள் தலையில் எலுமிச்சம்பழத்தை தேய்த்து வரவும். அப்போதாவது புரிகிறதா என்று பார்க்கலாம். தங்கள் அரிப்புக்கு ரஜினியையோ அவரது ரசிகர்களையோ பிடித்து யாரும் தயவுசெய்து சொறியவேண்டாம்.

ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்காக காத்திருந்து, பின்னர் வெறுத்துபோய் அவரை விமர்சனம் செய்த லேனா தமிழ்வாணன் தற்போது என்ன கூறுகிறார் தெரியுமா? படியுங்கள்.

…………………………………………………………………………………………………………………

லேனாவின் பார்வையிலே...

rajinikanth.jpg

ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!

இவர் மனத்தில் என்னதான் இருக்கிறது என்று ரஜினியைப் பார்ப்பவர்களுக்கெல்லாம் ஒரு நினைப்பு ஏற்பட்டபடி இருந்தது. இதற்கு இப்போது விடை கிடைத்துவிட்டது.

தம் இரசிகர் மன்றப் பொறுப்பாளர்களை இராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்தையே இப்படிக் குறிப்பிடுகிறேன். ரஜினி பாணியிலேயே சொல்வது என்றால் லேட்டானாலும் லேட்டஸ்டாக வந்துவிட்டார்.

மனிதர் திருவாய் மட்டுமா மலர்ந்தருளினார்? உள்ளத்தையல்லவா திறந்து கொட்டிவிட்டார்.

இரசிகர்களைச் சந்திக்காமல் தவிர்த்து வந்த ரஜினி, இனி அவர்களுக்கு அடிக்கடி தரிசனம் தருவார் என்கிற நம்பிக்கை பிறந்திருக்கிறது. இரசிகர்களின் ஒரு சிறு விருப்பத்தைக்கூட நிறைவேற்றாமல் ஒரு நாயகர் நடந்துகொண்டது முறை அல்ல.

ரஜினியிடம் அவரது ரசிகர்கள் இரசிக்கும் விஷயங்கள் பல. இவரது ஒவ்வோர் அசைவையும் இரசிப்பார்கள். ஆனால் வெளிமனிதர்கள் பலரும் இரசிப்பது, ரஜினியின் போலித்தனமில்லாத வெளிப்படையான பேச்சு.

இதுதான் ராகவேந்திரா மண்டபத்திலும் நிகழ்ந்திருக்கிறது. எவரும் கண்டதையும் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக முன்பே கேள்விகளை எழுதி வாங்கி அவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து இந்தச் சந்திப்பு மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

தன் பிறந்தநாளின்போது ஏன் இரசிகர்களைச் சந்திப்பதில்லை என்பதற்கான விளக்கம் அவ்வளவாக ஏற்கும்படி இல்லாவிட்டாலும் இது ஒரு தனி மனித விருப்பம் என்ற வகையில் இதனை நாம் அதிகம் விமர்சிப்பதற்கில்லை.

அரசியலைப் பொறுத்தவரை விடை கிடைத்துவிட்டது. ரஜினிக்கு நாட்டை ஆளும் ஆசை இருக்கிறது. அதற்கான சந்தர்ப்பத்திற்காகக் கைகட்டிக் கொண்டு காத்திருக்கிறார். தமிழகத்தில் அரசியலில் பெரிய வெற்றிடம் ஒன்று வரப்போகிறது. அப்போது அந்த இடத்தை நிரப்ப முன்வருவார் என்பது அவர் பதிலுக்குள் அடங்கியிருக்கும் விளக்கமாகப் படுகிறது.

பண உதவிகளை எதிர்பார்த்த இரசிகர்களுக்கு ரஜினி நன்கு குட்டு வைத்திருக்கிறார். தியாக உணர்வும் தன்னலமற்ற போக்கும் தம் இரசிகர்களுக்கு வேண்டும் என்கிற மறைமுகச் செய்தியைப் பதித்து இந்தச் செய்தியை அழகுறச் சொல்லியிருக்கிறார். ரஜினி இரசிகர்களின் சந்திப்பிலேயே அடிக்கோடிட வேண்டிய இரண்டு செய்திகள், என்னைப் பொறுத்த அளவில் மிகப் பிடித்திருக்கின்றன.

கேள்வி நேரத்தின்போதும் சரி, கேள்வி நேரத்திற்குப் பிறகு ரஜினி ஆற்றிய உரையின்போதும் சரி, ரஜினி வலியுறுத்தியும் வற்புறுத்தியும் சொல்லியிருக்கும் கனமான இரு விஷயங்கள், ‘கடமையைப் பாருங்கள். உங்கள் தாய் தந்தை குடும்பத்தைக் கவனியுங்கள்’ என்பதுதான்.

தமிழக இரசிக மன்றங்கள் எப்போதுமே ரொம்ப ஓவர். நடிகைக்குக் கோயில், கட்-அவுட்டுக்குப் பால் அது இது என்று ரொம்பத்தான் அலட்டிக் கொள்வார்கள்.

தேவையற்ற நடவடிக்கைகளுக்குத் தடை போட்டு, அவசியமான விஷயங்களை வலியுறுத்தியிருக்கும் இந்தச் சந்திப்பு, ரஜினி போட்டுக்கொடுத்திருக்கும் தங்கத் தடம் என்பேன்!

http://www.tamilvanan.com/content/2008/11/14/20081114-lenavin-parvayil/

…………………………………………………………………………………………………………………

ரஜினி பற்றி இப்படி கூறியவர் விஜயகாந்த் பற்றி என்ன கூறுகிறார் தெரியுமா?

படியுங்கள்....... ஒருகணம் சிந்தியுங்கள்!!

(குறிப்பு: விஜயகாந்த்தை கேள்வி-பதில் முதற்கொண்டு அனைத்திலும் புகழ்ந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த் மீது எந்த காழ்புணர்ச்சியும் அற்றவர் லேனா என்று நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதால் இதை கூறுகிறேன். )

விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

கருணாநிதி, ஜெயலலிதாவின் வரிசையில் வைத்து எண்ணப்படும் தமிழக அரசியலின் புதிய விடிவெள்ளியான விஜயகாந்த் மிகவும் தரம் தாழ்ந்து பேசியிருப்பது ஏமாற்றம் தருவதாக உள்ளது.

இவரது பேச்சின் சில பகுதிகளை உங்களுக்கு அப்படியே தந்திருக்கிறேன்.

”கலைஞர் இன்றைக்குத் தன்னோட டி.வி.யில் என்ன சொல்றாரு? ‘தமிழர்களே… தமிழர்களே… நீங்கள் என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாக மிதப்பேன். அதில் நீங்கள் பயணம் செய்யலாம். கவிழ்ந்துவிட மாட்டேன்’னு பேசறாரு… யோவ் நீ கவிழமாட்டே… மக்கள்தான் கவுந்து போவாங்க. இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் தமிழ், தமிழர்கள்னு சொல்லி மக்களை ஏமாத்திக்கிட்டு இருக்கப்போறே? நான்கு முறை முதல்வரா இருந்து கொள்ளையடிச்சது போதாதா? வயசான காலத்துலேயும் இன்னும் பதவிவெறி, பணவெறியோடு ஏன் அலையிறே? போகும்போது எல்லாத்தையும் கொண்டா போகப்போறே? செத்துட்டா இடுப்புல கட்டியிருக்கிற அரணாகயிறு கூட மிஞ்சாது.

‘மதுரை தினகரன் அலுவலகத்தில் நடந்த மூன்று கொலைக்குக் காரணம் உன் மகன் தானாமே?’ என்று டெல்லியில் ஒரு பத்திரிகையாளர் கேட்ட போது அவர் மீது கோபப்பட்டு எழுந்து போனே. ஏன்யா, உன் பிள்ளை உயிருன்னா உனக்கு அவ்வளவு முக்கியம். இங்கே நடுக்கடல்ல சாகுற மீனவர்கள்னா அவ்வளவு இளப்பமா?”- தம் ஆதரவாளர்களையே நெளிய வைக்கும் பேச்சு இது.

பாதிக்கப்பட்ட மீனவர்கள் மத்தியில் ஆறுதலாகவும் அரவணைப்பாகவும் பேசியிருந்தால் அதை யாரும் குறை சொல்லிவிட முடியாது.

ஆனால் இந்தப் பேச்சோ இரத்த நாளங்களைச் சூடேற்றுகிற பேச்சு.

இப்பேச்சு இவரது அரசியல் வெண்சட்டையில் வீசப்பட்ட அப்பட்டமான கறை என்பதை எவரும் மறுத்துவிட முடியாது.

இந்தப் பேச்சினை ஆதாரமாகக் கொண்டு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க இயலும். ஆனால் ஆட்சியில் இருப்பவர் கெட்டிக்காரர். யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்கிறது என்றால் அந்தப் பாதிப்பே போதும்; நாம் வேறு ஏன் கைது செய்து இவரை மேலும் பிரபலமாக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய புத்திசாலி.

அரசியலில் முதன்மை பெற எத்துணையோ வழிமுறைகள் உண்டு. இவற்றுள் முக்கியமானது மேடைக் கண்ணியம்.

எம்.ஜி.ஆரைப் பின்பற்றுவதாகச் சொல்லும் விஜயகாந்த் எம்.ஜி.ஆரால் பேசப்பட்ட இப்படிப்பட்ட கண்ணியக் குறைவான பேச்சிற்கு ஒரு முனனுதாரணத்தையாவது காட்ட முடியுமா?

ஒரு 86 வயதுப் பெரியவரை ‘நீ’ ‘வா’ ‘போ’ என்று பேசுவது எந்த வகையில் சரி? அவரது மறைவைப் பற்றி விமரிசிப்பதையும் எப்படி நியாயப்படுத்த இயலும்.

மேலும் ”நடுக்கடலுக்குச் சென்று கடல் உள்ளிருப்புப் போராட்டம் ஒன்றைத் தொடங்குங்கள். உங்களோடு நானும் ஒரு படகில் ஏறி சாகும்வரை நடுக்கடலில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தத் தயாராக இருக்கிறேன். தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க. அரசை மட்டும் அல்ல… இலங்கையை ஆளும் அராஜக ராஜபக்சே அரசையும் நம் போராட்டத்தால் ஸ்தம்பிக்க வைப்போம்” என்றும் விஜயகாந்த் பேசியுள்ளார்.

அது சரி, இலங்கை அரசை எப்படி ஸ்தம்பிக்கச் செய்யப் போகிறாராம்? நடுக்கடலில் முகாமிட்டுப் போராட்டம் நடத்தினால் இலங்கை அரசு ஸ்தம்பித்துவிடுமா? எப்படி?

விஜயகாந்த் அரசியலில் வெற்றி பெறவும், பக்குவப்படவும் இன்னும் வெகுகாலம் ஆகும் போலிருக்கிறது!

http://www.tamilvanan.com/content/2008/07/25/20080725-lenavin-parvayil/

[END]