ரசிகர் சந்திப்பில் ரஜினி தெளிவாக கூறிய ஒரு விஷயம், "குடும்பத்தை கவனிங்க. அப்பா அம்மாவை கவனிங்க. மத்ததெல்லாம் அதுக்கு பிறகு தான்." இந்த நிபந்தனை சத்திக்கும் பொருந்தும் தானே?
சிறுநீரக கோளாறால் இடையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று தற்போது "தேவையான ஓய்வை எடுத்துக் கொள்ளவேண்டும், அலைச்சல் கூடவே கூடாது" என்று மருத்துவர்களால் அறிவுறுத்தப் பட்டிருக்கிறார் சத்தி. இது தான் உண்மை. எனவே சத்தி தனது உடல் நலத்தை பார்த்துக் கொள்ளவேண்டும் அல்லவா? தவிர அவரது வயதான தந்தையையும் அவர் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. சத்தியை விட்டால் பார்த்துக் கொள்ள அவருக்கு வேறு யாரும் இல்லை.
சத்தி முன்பு போல மன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவேண்டும் என்று ரசிகர் ஒருவர் சமீபத்திய சந்திப்பில் சூப்பர் ஸ்டாரிடம் கேட்டுகொண்டபோது, அவரும் மேற் கூறியதை தான் கூறினார். எனவே அவருக்கு ஒய்வு கொடுத்திருப்பதில் என்ன தவறு?
மரமண்டைகளுக்கு எப்போது உறைக்கும்?
சத்தி நீக்கப்பட்டுவிட்டதாகவோ அந்த இடத்திற்கு வேறு ஒருவர் நியமிக்கப்பட்டுவிட்டதாகவோ இது வரை சூப்பர் ஸ்டார் எந்த வித அறிவிப்பும் வெளியிடவில்லை. தற்காலிகமாக ரசிகர்களுக்கும் ரஜினிக்கும் இடையே பாலமாக செயல் பட்டுவரும் சுதாகர் கூட தாம் எந்த பதவியிலும் இல்லை, தாம் ஒரு போஸ்ட் மேன் மட்டும் தான் என்று தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
உண்மை நிலை இப்படியிருக்கையில் இன்னும் இந்த விஷயத்தை வைத்து, சில விஷம சக்திகள் நம் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும்பொருட்டு செய்திகளை வெளியிடுவதை நினைத்தால், "இந்த மரமண்டைகள் என்றைக்கு தான் திருந்தி நடுநிலையான செய்திகளை தருவார்களோ?" என்ற ஆத்திரம் தான் வருகிறது.
சத்தியை ரஜினி கைவிட்டுவிட்டாரா?
ரஜினி ஏதோ சத்தியை நட்டாற்றில் விட்டுவிட்டதை போல அவர்கள் செய்தி எழுப்பிவருவதை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. சத்தியநாராயணாவின் வாழ்வில் ஒவ்வொரு முக்கிய கட்டத்திலும் சூப்பர் ஸ்டார் உடனிருந்துள்ளார். மேலும் படையப்பா படத்திலேயே அவர் பங்குதாரராக நியமிக்கப்பட்டு ஒரு பெருந்தொகை அவருக்கு அளிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது இன்றும் கூட அவர் சூப்பர் ஸ்டாரிடமிருந்து மாதாமாதம் தனக்குரிய ஊதியத்தை மண்டபத்தில் வந்து பெற்றுகொள்கிறார். இதை விட வேறு என்ன வேண்டும்?
சொந்தமாக கார் வைத்திருக்கும் அவர், சிக்கனம் கருதி, 'அருகில் இருக்கும் இடத்திற்கு நம் ஒருவருக்காக எதற்கு கார் பயணம்?' என்று நினைத்து நகரில் உள்ள பல இடங்களுக்கு செல்ல பெரும்பாலும் ஆட்டோவையே பயன்படுத்துவார். தவிர்க்க இயலாத சூழ்நிலைகளில் மட்டுமே காரை பயன்படுத்துவார். இதை கூட புரிந்துகொள்ளமுடியாத ஒரு இணையதளம் சில மாதங்களுக்கு முன்பு, "ரஜினியின் ரசிகர் மன்ற தலைவருக்கு இப்போது சொந்தமாக கார் இல்லை. பாவம் ஆட்டோவையே பயன்படுத்துகிறார்" என்று நீலிக்கண்ணீர் வடித்தது. உண்மை என்னன்னு விசாரிக்க கூட மாட்டீங்களா?
காரை திரும்ப ஒப்படைத்துவிட்டாரா?
இப்போது லேட்டஸ்டாக ஒரு செய்தி கிளம்பியிருக்கிறது. சத்திக்கு ரஜினி கொடுத்த காரை அவர் திரும்ப ரஜினியிடமே ஒப்படைத்துவிட்டதாக. இது குறித்து சத்தியநாராயணாவுக்கு நெருக்கமான நம் நண்பர் ஒருவரிடம் கேட்டோம். அவர் கூறியதாவது: சத்தி முதன் முதலில் வாங்கியது பிரபல பின்னணி பாடகர் டி.எம்.எஸ். வைத்திருந்த ஒரு காரை. பின்னர் சொந்தமாக ஒரு மாருதி எஸ்டீம் வாங்கினார். தற்போது வேறொரு காரை வாங்கியிருக்கிறார். (அதுவும் எஸ்டீம் தான் என்று கூறப்படுகிறது). ஆகையால் இரண்டாவதாக வாங்கிய மாருதி எஸ்டீமை விற்க அவர் முயற்சித்து வருவதாக தெரிகிறது. அவ்வளவுதான். மற்றபடி அவர் காரை சூப்பர் ஸ்டாரிடம் ரிடர்ன் செய்துவிட்டதாக கூறப்படுவதெல்லாம் வதந்தி தான் என்றும் அந்த நண்பர் தெரிவித்தார். சத்தியிடமே அந்த நண்பர் பேசி இது பற்றி நமக்கு கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது லேட்டஸ்டாக இந்த விஷம சக்திகள் ஒரு கயிறு திரித்திருக்கிறார்கள். சத்தி நீக்கத்தை கண்டித்து தினமும் மண்டபத்துக்கு நூற்றுக்கணக்கில் கடிதங்கள் வருகிறதாம். ரஜினிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லையாம். ஹா...ஹா...ஹா... அடப்பாவிகளா உங்க காமெடிக்கு அளவே இல்லையா?
அபத்தத்தின் உச்சம்
சரி இதெல்லாம் போகட்டும், அவர்கள் கூறியுள்ள இன்னொரு தகவல் தான் அபத்தத்தின் உச்சம். ரசிகர் மன்றத்தை கவனித்துக்கொள்ளவேண்டும் என்ற காரணத்தினாலேயே சத்தி திருமணமே செய்துகொள்ளவில்லையாம். உண்மையில் சூப்பர் ஸ்டார் எவ்வளவோ வற்புறுத்தியும் சத்தி ஏதோ சில காரணங்களினால் திருமணம் செய்துகொள்ளவில்லை. அது அவரது தனிப்பட்ட விருப்பம் என்று சூப்பர் ஸ்டாரும் விட்டுவிட்டார். இதற்க்கு கூட ரஜினி மீது பழி போடும் இவர்களையெல்லாம் பேசாமல் நிற்க வைத்து.....
அப்போது கூட திருந்த மாட்டார்கள் இந்த ஜென்மங்கள். திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்?
நல்லவேளை, "மன்றங்களை கவனித்துக்கொள்ளத்தான் தனது தாடியை கூட சத்தி ஷேவ் செய்துகொள்ளவில்லை" என்று சொல்லாமல் விட்டார்களே....அது வரைக்கும் சந்தோஷம்.
சத்தி ஏன் மௌனம் காக்கிறார்?
சரி இப்படி கிளம்பும் வதந்திகள் மற்றும் அவதூறுகளுக்கு எதிராக சத்தி ஏதாவது அறிக்கை விடக்கூடாதா? அல்லது பேட்டியாவது அளிக்ககூடாதா? அவர் ஏன் மௌனமாக இருக்கிறார்? என்று நீங்க கேட்க்கலாம்.
அப்படி அவர் பதில் கூற ஆரம்பித்தல் ஒவ்வொன்றுக்கும் பதில் கூற வேண்டியிருக்கும். இவரிடம் பதில் பெறுவதற்காகவே தேவையற்ற செய்திகளை கிளப்பிவிடுவார்கள். ஒன்றிற்கு பதிலளித்து, மற்றதிற்கு பதிலளிக்கவில்லைஎன்றால் அது உண்மையாக இருக்குமோ? அதனால் தான் அவர் மறுப்பு கூறவில்லையோ என்பது போன்ற சந்தேகங்கள் எழலாம். எனவே இந்த விஷயத்தில் சூப்பர் ஸ்டாரை கடைபிடிக்கிறார் சத்தி. இது போன்ற செய்திகளை பொருட்படுத்துவதேயில்லை என்று. சத்தியை பற்றி தலைவருக்கு தெரியும். தலைவரைப் பற்றி சத்திக்கு தெரியும். இருவரைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு எல்லாம் தெரியும். நம் ரசிகர்களுக்கும் இது தெரியும். இடையில் குழப்பம் விளைவிப்பவர்களை பற்றி நாம் ஏன் கவலைப்படுவானேன்?
சரி அவர்கள் நோக்கம் தான் என்ன?
ஒரு சாராரது நோக்கம் பரபரப்பு செய்திகள தரவேண்டும் (டிசம்பர் 12 பிறந்த நாள் பரிசாக சத்தி ஆதரவு ரஜினி மன்ற நிர்வாகிகள் மன்றத்திலிருந்து விலகி அ.தி.மு.க.வில் இணையப்போகிறார்கள் என்று ஒரு பத்திரிகை கடந்த வாரம் செய்தி வெளியிட்டதே, ஞாபகமிருக்கிறதா?) அது போல... ஜஸ்ட் பரபரப்புகளுக்காக கிளப்பிவிடப்படும் செய்திகள ஒரு வகை.
மற்றொரு சாராரது நோக்கம் வேறு வகை. நம் மன்றத்திற்குள் குழப்பம் விளைவிக்கவேண்டும். முடிந்தால் சில அல்லது பல ரசிகர்களை சூப்பர் ஸ்டாருக்கு எதிராக திருப்ப வேண்டும். அதன் மூலம் அந்த குறிப்பிட்ட நடிகர் ஆதாயம் பெற வேண்டும். இது தான் அவர்கள் லட்சியம். அது நிச்சயம் நடக்கப்போவதில்லை.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வரட்டும்டி. அதற்க்கு பிறகுதான் இருக்கு வேடிக்கையே... அது வரை பொறு மனமே!!
[END]