Tuesday, December 16, 2008

ரஜினி வெப் டி.வி. - ஏன், எதற்காக, யாரால்?

டந்த சில தினங்களுக்கு முன்பு மீடியாவில் "ரஜினி பெயரில் Rajnitv.in என்னும் வெப் டி.வி. தொடக்கம்" என்ற செய்தியை பார்த்துவிட்டு, வியப்புற்று, என்ன இது, யார் நடத்துகிறார்கள், வெப் டி.வி. என்றால் என்ன? இது மற்றுமொரு வெப்சைட்டா? போன்ற விபரங்களை கேட்டு நமக்கு கமென்ட் மற்றும் இ-மெயில் அனுப்பினார்கள் நம் நண்பர்கள் சிலர்.

இதோ உங்களுக்காக தொகுக்கப்பட்ட முழு விபரங்கள்.

தேனாம்பேட்டையில் ராஜ் டி.வி. அலுவலகம் அருகே உள்ள ரஜினி டி.வி. அலுவலகத்தில் அதன் உரிமையாளர் திரு. ஆர்செல்.ஆறுமுகம் அவர்களை சந்தித்து அவர்களிடமே விபரங்கள் கேட்டோம்.

(அவரைப் பற்றியும், வெப் டி.வி. பற்றியும் தொழில் நேசன் என்ற பத்திரிகையில் வந்த விரிவான தகவல் கடைசியில் இடம்பெற்றுள்ளது.)

உங்களுடைய பெயர் வித்தியாசமாக உள்ளதே? ஆர்செல் ஆறுமுகம்...?

ஆர்செல் என்றால் நிறைய பேர் நான் ஏதோ Aircel நிறுவனத்தில் பணிபுரிவதாக நினைத்துகொண்டிருக்கிறார்கள். அப்படியல்ல. ஆர்செல் என்பது எனது பெற்றோரின் பெயர் ராமசாமி-செல்லம்மாள் (Ramasamy-Sellammal) எனபதன் சுருக்கமாகும். (வாவ்.... தாய்-தந்தையரின் பெயர்கள் இனிஷியலா...? சூப்பர்!! )

வெப் டி.வி. என்றால் என்ன? மற்ற வெப்சைட்டுகளுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

பொதுவாக ஒரு வெப்சைட் என்பது ஒரு நபருடைய அல்லது ஒரு நிறுவனத்தினுடைய அடையாளத்தை கூறுவதற்கு பயன்படுத்துகிறோம். நம் ரஜினி வெப் டி.வி. என்பது என்ன என்றால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை சாட்டிலைட் மூலமாக பார்ப்பது போல இன்டர்நெட் மூலமாக வெப்சைட்டில் தொலைக்காட்சியை பார்ப்பது தான்.

ஒரு டி.வி பார்ப்பது போல feel உங்களுக்கு வரும். வீடியோ, அல்லது டி.வி.டி.யை play செய்து பார்ப்பது போல இது இருக்கும்.

ரஜினி.டி.வி.யின் சிறப்பு என்னவென்றால்: உலக அளவில் வெப்.டி.வி.க்கள் நிறைய உள்ளன. இந்திய அளவில் வெப் டி.வி நமக்கு தெரிந்த வரை இல்லை. ஒரு சிலர் ஆங்காங்கே தமது தயாரிப்புகளுக்காக நடத்திவரலாம். ஆனால் அவை நமது சிறப்பு என்னவென்றால் முழுமையான, 24 மணிநேர, தங்குதடையற்ற வெப் டி.வி.யாக இது இருக்கும். இது 24 மணிநேரமும் ரேடியோ போல செயல்படும். இதை பார்த்துகொண்டே நம் அன்றாட வேலைகளை செய்யலாம். இதற்க்கு Buffer அதிகம் தேவைப்படாது. குறைந்த பட்சம் 64 KPBS ஸ்பீட் உள்ள இன்டர்நெட் இருந்தாலே போதும். அதிகபட்சம் 100 KPBS தான் தேவைப்படும். பிராட்பேன்ட் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கிராமப்புறங்களில் உள்ளவர்கள் கூட இதை கண்டு களிக்கலாம். அவர்களையும் கருத்தில் கொண்டு தான் Zero Buffer வைத்து இதை தயார் செய்தோம். அது பாட்டுக்கு play ஆகிக்கொண்டே இருக்கும். மற்ற வெப்.டி.வி.க்களை அது போல பார்க்க இயலாது.

இதில் முழுக்க முழுக்க ரஜினி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் தான் பார்க்க முடியுமா?

ரஜினி பற்றி உங்களுக்கு தெரியும். உலகாளாவிய சூப்பர் ஸ்டார். மிகப் பெரிய நடிகர். ஒரு சாதரண குடும்பத்தில் பிறந்து கண்டக்டராக வேலை பார்த்து இன்று மிகப்பெரிய ஒரு இடத்தை அடைந்திருப்பவர். அவர் இன்று சேர்த்து வைத்திருக்கும் நற்பெயர் மற்றும் மக்கள் சக்தி மகத்தான ஒன்று. அதை கணக்கிட யாராலும் முடியாது. அவரால் மட்டும் எப்படி இது சாத்தியமாயிற்று என்று எவராலும் கூறமுடியாது.

அப்படிப்பட்ட ஒரு மாபெரும் நடிகரின் பெயரில் ஒரு வெப் டி.வி. ஆராம்பிக்கும் விஷயத்தை நான் மிக பொறுப்பாக செய்யவேண்டும் என்பதற்காக நான் ஒரு உறுதி பூண்டேன். அதாவது, இந்த ரஜினி.டி.வி.யில். காணப்படும் விஷயங்கள் அனைத்தும் சமுதாயத்திற்கு பயன் தரக்கூடிய விஷயமாக இருக்கவேண்டும். ரஜினி ரசிகர்கள் நிறைய நற்பணிகள் செய்து வருகிறார்கள்.

இது பிரத்யேகமாக ரஜினிக்கேன்றே இயங்கும். கலை, ஆன்மீக,இலக்கியம் உள்ளிட்ட மற்ற நிகழ்ச்சிகளும் ஓரளவு இருக்கும். ஆனால் பெரும்பான்மையானவை ரஜினி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளாக தான் இருக்கும். அவரது படத்திலிருந்து க்ளிப்பிங்குகள், பாடல் காட்சிகள், ரசிகர் மன்றங்கள் செய்யும் நற்பணிகள், அந்தந்த மாவட்ட மன்ற பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள் ஆகியவை இதில் இருக்கும்.

தவிர தனி மனிதர்களாக சமூக சேவை செய்பவர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இது ஒரு மீடியமாக செயல்படும்.

ரஜினி வெப் டி.வி. தோன்றியது எப்படி?

முதலில் நான் ஒரு தீவிர ரஜினி ரசிகன் அல்ல. அவரை ஜஸ்ட் பிடிக்கும் அவ்வளவுதான். 2005 வாக்கில் ராஜ் டி.வி.க்காக "சிவாஜி ராவ் முதல் சிவாஜி வரை" என்னும் Biography Programme செய்ய நேரிட்டது. அதற்காக நான் தமிழகம் மற்றும் பெங்களூர் உட்பட பல இடங்களுக்கு சுற்றுப் பயணம் செய்தேன். அப்போது அவரது பிறப்பு முதல் வளர்ந்து சூப்பர் ஸ்டார் ஆனது வரை அவருடன் இருந்த பல நபர்களை சந்திக்கும் வாய்ப்பை பெற்றேன். ரஜினி சாரின் அண்ணன், அவரது பெங்களூர் நண்பர்கள் ஆகியோரை சந்தித்தேன். அவர் படித்த பள்ளி, அவர் விளையாடிய இடம், பணிபுரிந்த இடங்கள், வேலை செய்த பஸ் ரூட், உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்றேன். அதே போல இங்கு Film Institute இல் அவருடன் படித்தவர்கள், அவர் அறிமுகமான காலகட்டங்களில் அவருடன் நடித்தவர்கள் இப்படி பலரை சந்தித்தேன். நிகழ்ச்சி தயாரித்து முடிக்கும்போது எனக்கு மிகவும் பிரமிப்பாக இருந்தது. ஒரு சாதரண குடும்பத்தில் எங்கோ பிறந்து, இன்று இங்கு ஒரு பெரிய மக்கள் சொத்தாக அவர் உருவெடுத்திருந்த அவர் வரலாறு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் அவர் இதை சாதித்தாரென்றால் அடிப்படையில் அவருக்கிருக்கும் நற்குணங்களால் தான் என்றால் மிகையாகாது. அவருடைய மனிதாபிமானம், மனிதர்களை மதிக்க கூடிய குணம் ஆகியவை என்னை வியப்பிலாழ்த்தியது. என்னையறியாமலே அவரது ரசிகராக மாறினேன்.

இதற்க்கு பிறகு, எதிர்பாராத விதமாக இந்த ஆண்டு முற்பகுதியில் கலைஞர் டி.வி.காக 'ரசிகன்' என்ற நிகழ்ச்சியை நடத்தும் வாய்ப்பை பெற்றேன். அதற்காக பல தரப்பட்ட ரஜினி ரசிகர்களை சந்தித்தேன். தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் செய்து பல ரசிகர் மன்றத்து பிரமுகர்களை சந்தித்தேன். அவர்கள் எப்படி இருப்பார்கள்? என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று தெரிந்துகொள்வது ஏன் நோக்கம். பொதுவாக ரசிகர்கள் என்றால் பிறர் நினைப்பது விசிலடிப்பார்கள் போஸ்டர் ஓட்டுவார்கள் என்பதுதான். ஆனால் ரஜினி ரசிகர்களது நெட்வொர்க்கை கண்டு நான் பிரமித்தேன். அவர்களுக்குள் அவர்கள் இணைந்து செயல்படும் பாங்கு, மன்றத்தை வைத்து ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் பண்பு, ரசிகர்களுக்கு மட்டுமல்லாது சமூகத்தில் மற்றவர்களுக்கும் உதவுவது, ஒருவருக்கு பிரச்னை என்றால் முன் நிற்பது, கல்விப் பனியோ, விவசாயிகளுக்கு தேவையானவற்றை செய்வது என்று ரசிகர்கள் என்னை திக்குமுக்காடச் செய்தனர். ரஜினி பற்றிய நிகழி செய்யும் ஒரு நிகழ்ச்சி இயக்குனர் ஏன் மீது அவர்கள் பொழிந்த அன்பு என்னை நெகிழச் செய்தது. அவர்களுடன் நான் சில நாட்கள் பழகினாலும் அதோ பல வருடங்கள் பழகியது போன்ற உணர்வை எனக்கு ஏற்படுத்திவிட்டனர்.

இவர்கள் அன்பு இப்படியிருக்க, ஏன் நாம் ரஜினி சாரை அடிப்படையாக வைத்து தொடர்ந்து ஒரு விஷயத்தை செய்யக்கூடாது என்று நான் சிந்தித்ததன் விளைவுதான் இந்த ரஜினி வெப் டி.வி.

இதற்காக உங்கள் பின்புலத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட யாராவது உதவினார்களா? அல்லது இருக்கிறார்களா? இல்லை முழுக்க முழுக்க உங்களுடையது தானா?

முதல் முதலில் இந்த மாதிரி ஒரு கான்செப்ட்டை நான் கையில் எடுத்துக்கொண்டு செய்ய எனக்கு பயம் இருந்தது. காரணம் எனக்கு பெரிய பொருளாதாரப் பின்புலம் கிடையாது. மீடியாவில் சுமார் 15 ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறேன். பல்வேறு தொலைக்காட்சிகளில் பணிபுரிந்திருக்கிறேன். அவ்வாளவுதான். நாம் ரஜினி சாரின் பெயரை பயன்படுத்துகிறோமே... அவரிடமிருந்து ஏதாவது எதிர்ப்பு வருமோ? அவர் பார்த்துவிட்டு ஏதாவது சொல்லிவிடப்போகிறார் என்பதால் அவரை சந்தித்து அவர் அனுமதி பெற்றுவிட முடிவு செய்தேன். அதற்கேற்றார்போல ரசிகன் நிகழ்ச்சியை நான் கலைஞர் டி.வி.யில் நடத்திகொண்டிருந்தபோது ரஜினி சாரை நேரடியா சந்திக்கும் வாய்ப்பை பெற்றேன். இருப்பினும் என்னால் நிறைய விஷயம் பேசமுடியவில்லை. முதல் சந்திப்பில் என்னை அடையாளபடுத்திக்கொள்ள சிரமமாக இருந்தது. இருப்பினும் அவரிடம் முறைப்படி ஒரு வேண்டுகோளாக இதை கொண்டு சென்றேன். இது குறித்து அவரிடம் என்னால் பேசமுடியவில்லை. அடுத்ததுத்து அவர் படப்பிடிப்பு, ரசிகர்கள் சந்திப்பு என்று பிசியாகிவிட்டார். இருப்பினும் எனது வேண்டுகோளை கடிதமாக அனுப்பியிருந்தனே. அவர் கடிதத்தை படித்துவிட்டு, அவருக்கு வாழ்த்துக்களை சொல்லுங்கள், சிறப்பாக செய்ய சொல்லுங்கள் என்று கூறினார். இதன் மூலம் எனக்கு ஒரு பாசிட்டிவான சிக்னல் கிடைத்தது. உடனே மளமளவென்று இதற்கான வேலைகளை ஆரம்பித்தேன்.

ஓரளவு வெப்சைட்டை நிர்மாணித்த பிறகு - சில நாட்களுக்கு முன்பு - திரு.கலைஞானம், செல்வி மீனா, இயக்குனர் ஆர்.சி. சக்தி, பிரபல வர்ணனையாளர் அப்துல் ஹமீது ஆகியோரை வைத்து ஏ.வி.எம். ப்ரீவியூ தியேட்டரில் வெப் டி.வி. துவக்க விழாவை நடத்தினேன். ரியாஸ் என்பவர் இந்த வெப் டி.வி.க்கு P.R.O. வாக இருப்பார். ரசிகர் மன்ற பிரமுகர்கள் பல மாவட்டங்களிலிருந்து வந்திருந்தனர். ரஜினி சாரின் அண்ணன் திரு.சத்தியநாராயண ராவுடன் பேசினேன். அவர் எனக்கு வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார். அதே போல அவர் நண்பர் ராஜ் பகதூருடனும் பேசினேன். அவரும் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ரஜினி சாருடன் நேரடியாக பேச முடியவில்லைஎன்றாலும் அவருடன் இருப்பவர்களுக்கு நடப்பவற்றை அப்டேட் செய்துவிடவேண்டும் என்று விழா உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளையும் தெரிவித்து வருகிறேன்.

ரஜினி சாரை நீங்கள் நேரடியாக சந்தித்த அனுபவத்தை கொஞ்சம் கூறுங்களேன்...

கலைஞர் டி.வி.யின் ரசிகன் நிகழ்ச்சிக்காக அவரை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை பெற்றேன். ராஜ் டி.வி.க்காக "சிவாஜி ராவ் முதல் சிவாஜி வரை" செய்தபோதே அவரை சந்திக்கவேண்டும் என்ற ஆவல் என்னுள் பலமடங்கு எழுந்தது. ரசிகன் நிகழ்ச்சி துவக்கியபிறகு அது இனனும் பலமடங்கு ஆனது. அவரை 10 அல்லது 15 நிமிடங்கள் தான் சந்திக்க முடிந்தது. ரசிகன் நிகழ்ச்சி குறித்து அவரிடம் கூறினேன்.

"நல்ல விஷயம். யாரும் தொடாத சப்ஜெக்ட் அது. நன்றாக செய்யுங்கள். நிகழ்ச்சி முழு வெற்றியடைய என் வாழ்த்துக்கள்" என்றார்.

"எல்லாம் அவன் செய்யுறான்!!"

பிறகு அவரிடம் நான், "சார் பல தரப்பட்ட ரசிகர்களை நான் சந்தித்து வருகிறேன். உங்கள் ரசிகர்களின் நெட்வொர்க், அவர்கள் செயல்படும் விதம், ஒருவருக்கொருவர் செலுத்தும் அன்பு, அவர்கள் சமுதாயத்திற்கு செய்யும் பணிகள் எல்லாம் என்னை பிரமிக்க வைக்கிறது." என்றேன்.

எல்லாம் கேட்டுக்கொண்ட அவர் மேலே கையை காட்டி, "எல்லாம் அவன் செய்யுறான்!" என்றார் நெகிழ்ச்சியுடன்.

வெப் டி.வி. ஆரம்பித்துள்ள உங்கள் நோக்கம் தான் என்ன?

உலகம் முழுதும் உள்ள அவரது ரசிகர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கவேண்டும். அதற்க்கு பிறகு ரஜினி சாருக்காக பாடுபடக்கூடிய மீடியா நண்பர்கள், வலைத்தளம் நடத்துபவர்கள் உள்ளிட்ட அனைவருக்குள்ளும் ஒரு நல்லுறவை ஏற்படுத்தி ஒரு மிகப்பெரிய சக்தியாக அதை மாற்றவேண்டும். இதற்க்கு அனைவரும் ஒத்துழைக்கவேன்டும். அவர்களுக்கு தேவையான Visual கிளிப்பிங்குகள் சம்பந்தமான விஷயங்களில் நான் பெரும் உதவியாக இருப்பேன். அதே போல், ஒவ்வொரு மீடியா நண்பர்கள் செய்துகொண்டிருக்கும் நல்ல செயல்பாடுகளைஎல்லாம் அடையாளம் கண்டு அவர்களையெல்லாம் கௌரவிக்க இந்த ரஜினி டி.வி. எப்பொழுதும் தயாராக இருக்கும்.

மேலும், ரஜினி சாருக்காக அவரது புகழுக்காக எத்தனையோ சக்திகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அந்த சக்திகளையெல்லாம் ஒருங்கிணைக்க நான் பாடுபடுவேன். ரஜினி சாருக்கு நமக்காக இத்தனை பேர் இந்த வெப் மீடியாவில் துடிப்புடன் இயங்குகிறார்கள் என்று இதன் மூலம் தெரியப்படுத்தவேண்டும்.

எண்ணற்ற ரசிகர்கள் அவர் பெயரில் நற்பணிகள் செய்துவருகிறார்கள். அவர்கள் யாராக இருந்தாலும் பதிவு பெற்றவர்களோ அல்லது பெறாதவர்களோ யாராக இருந்தாலும் அவர்கள் செய்யும் நல்ல விஷயங்களை நிச்சயம் இந்த வெப் டி.வி.யில். பதிவுசெய்வோம்.

ரஜினி டி.வி.யை பார்ப்பதற்கு கட்டணம் வசூலிப்பீர்களா? அல்லது இலவசமா?

இது முழுக்க முழுக்க இலவசம்தான். கட்டணம் எதுவும் கிடையாது. Software Testing பொருட்டு சில வார்த்தைகள் இப்போது சைட்டில் உள்ளனர். அதை விரைவில் எடுத்துவிடுவோம். சைட்டில் நிறைய மாறுதல்கள் செய்ய்யவேண்டியுள்ள்ளது. வரும் ஜனவரி மாதம் வெப் சைட் பக்காவாக ரெடியாகிவிடும்.

ரசிகர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

ரசிகர்கள் மற்றும் அவருக்காக பாடுபடும் எல்லாரும் இதற்க்கு மிகவும் சப்போர்டிவாக இருக்கவேண்டும். அது போல தனிப்பட்ட முறையில் அவருக்காக பாடுபடும் யாராவது என்னை சந்திக்க வேண்டுமென்றால் அதற்க்கு முக்கியத்துவம் கொடுப்பேன்.

கமெர்ஷியல் என்பதற்காக கண்டதையெல்லாம் போட மாட்டேன். இதை நடத்தும் காஸ்ட் எனக்கு வந்தாலே போதும். இதை நான் ஒரு கேரீராக செய்யவில்லை. அவருடைய ஒரு ரசிகனாக இதை என் ஆயுள் முழுக்க பண்ணக்கூடிய ஒரு விஷயமாக இதை உருவாக்கியிருக்கிறேன். என் அல்டிமேட் லட்சியம் என்றால் திரைப்படம் இயக்குவது தான். அதற்கும் நேரத்தை ஒதுக்குவேன். இரு கண்களில் ஒரு கண் இந்த ரஜினி டி.வி., இன்னொரு கண் என் இயக்குனர் லட்சியம்.

அவரது லட்சியம் நிறைவேற நம் வலைத்தளம் சார்பாக நம் வாழ்த்துக்களை தெரிவித்தோம்.

www.rajnitv.in பார்ப்பதில் உங்களுக்கு எதேனும் சிரமம் இருந்தாலோ அல்லது இது தொடர்பாக உங்களுக்கு சந்தேகம் இருந்தாலோ நீங்கள் தாராளமாக திரு.ஆர்செல்.ஆறுமுகத்தை கீழ்கண்ட மொபைல் என்னில் தொடர்புகொள்ளலாம். திரு.ஆர்செல் ஆறுமுகம்: +91-9841466812

…………………………………………………………………………………………………………………

முக்கிய குறிப்பு:

எனது யாஹூ முகவரிக்கு (simple_sundar@yahoo.com) இ.மெயில்கள் அனுப்புவது சிரமாமாக இருப்பதாக நண்பர்கள் கூறியதையடுத்து என் இ.மெயில் முகவரியை மாற்றியிருக்கிறேன். இனி வலைத்தளம் மற்றும் சொந்த விஷயமாக என்னை தொடர்பு கொள்பவர்கள் simplesundar@gmail.com என்னும் முகவரியில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

நன்றி.

- சுந்தர்
simplesundar@gmail.com

…………………………………………………………………………………………………………………

[END]