சூப்பர் ஸ்டார் எந்திரன் படப்பிடிப்பிற்காக செல்கையில் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு பிறகு பைக்கில் சென்று உரிய நேரத்தில் படப்பிடிப்பில் கலந்துகொண்டதாக நேற்று ஒரு செய்தி கேள்விப்பட்டோம். இன்றைய தந்தி அது குறித்து ஒரு விரிவான தகவலை வெளியிட்டுள்ளது.
நேற்றைய செய்தியில் ஸ்டண்ட் நடிகர்கள் நான்கு பேர் இயக்குனர் ஷங்கருடன் வந்து சூப்பர் ஸ்டாரை அழைத்து சென்றதாகவும், அவர்களுடன் அவர் பைக்கில் சென்றதாகவும் கூறப்பட்டது. நேற்றைய மாலை மலரில் இந்த செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் உண்மையில் சூப்பர் ஸ்டார் தாமாகவே சிரத்தை எடுத்து அந்த வழியில் சென்ற போலீஸ்காரர் ஒருவரின் பைக்கில் லிப்ட் கேட்டு பயணம் செய்து உரிய நேரத்தில் படப்பிடிப்பில் கலந்துகொண்டதாக இன்று தினத்தந்தி கூறியிருக்கிறது.
தமது தொழிலில் போட்டியாக உள்ள நிறுவனம் 'எந்திரன்' படத்தை வாங்கியிருந்த போதும், சூப்பர் ஸ்டார் சம்பந்தப்பட்ட செய்தியை பாரபட்சமின்றி வெளியிட்ட தந்தி குழுமத்திற்கு நம் நெஞ்சார்ந்த நன்றி. நல்லது செய்து நடுவழியே போனால், பொல்லாதது போகிற வழியே போகும் என்பது போல, சூப்பர் ஸ்டாரின் நல்ல உள்ளத்திற்கு இதெல்லாம் தானாக் நடக்கும்.
சரி, இதே நிலை (போக்குவரத்தில் சிக்கி படப்பிடிப்பிற்க்கு தாமதமானால்) வேறு நடிகர்களுக்கு ஏற்பட்டால் என்ன செய்வார்கள்? ஒரு சிறு கற்பனை.
கேப்டன்:
இந்த போக்குவரத்தை நெரிசலை தீர்க்க என்கிட்டே அருமையான திட்டம் இருக்கு. ஆனா அதை நான் வெளியே சொல்லமாட்டேன். ஆங்...!
கேப்டன் படப்பிடிப்பிற்கு செல்கையில் இதே போல போக்குவரத்து நெரிசல் ஏற்பட, உடனே காரிலிருந்து இறங்கி அங்கேயே உரையாற்றுகிறார்.
"இது தி.மு.க.வின் திட்டமிட்ட சதி. அந்தாளு (முதல்வரை அவர் இப்படி தான் அழைக்கிறார் இப்போதெல்லாம்) நான் எங்கே ஷூட்டிங் கரெக்ட் டயத்துக்கு போய் கலந்துகிட்டா, படம் எலெக்க்ஷனுக்குள்ள ரிலீசாகி அது பெரிய ஹிட்டாயிடும்னு போலீஸ்காரங்களை வைத்து இப்படி ட்ராபிக் பண்றார். நேத்து அவர் இந்த வழியாதான் போனாரு. அப்போ ட்ராபிக் ஆகலையே."
"சென்னையில இந்த மாதிரி நிறைய இடங்களல்ல போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தாய்குலங்க தங்களோட குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்ப முடியாம கஷ்டப்படுறாங்க. பெண்கள் வேலைக்கு சரியான் நேரத்துல போக முடியாம கஷ்டப்படுறாங்க. தொழிலாளிகள் உரிய நேரத்துல வேலைக்கு போக முடியாததுனால சரியா கூலி வாங்க முடியாம கஷ்டப்படுறாங்க. அதுக்கெல்லாம் இந்த ஆட்சி தான் காரணம். இன்னொன்னும் சொல்லிக்கிறேன். இதுக்கு முன்னாடி இருந்த அ.தி.மு.க. அரசாங்கம் போக்குவரத்து நெரிசலை தீர்க்க சரியான திட்டம் போட்டிருந்தா இன்னிக்கி இப்படி அவதிப்பட வேண்டிய நிலை வந்திருக்காது."
"இந்த போக்குவரத்தை நெரிசலை தீர்க்க என்கிட்டே அருமையான திட்டம் கையில இருக்கு. நான் ஆட்சிக்கு வரும்போது அதை செயல்படுத்துவேன். என்னாது......துதுது? அதை நான் வெளியே சொல்லனுமா? அஸ்கு...புஸ்கு.... இவரு காப்பியடிச்சிடுவாறு... நான் சொல்ல மாட்டேன்... "
(அவரது அடிப்பொடி ஒருவர் ஓடிவந்து, 'தலைவா ரோட்டுக்கு குறுக்கே நாம கட்டியிருக்கிற டிஜிட்டல் பேனரால தான் டிராஃபிக்கேவாம் ... அதை எடுத்துடலாமா?' என்று கேட்க, அதற்க்கு கேப்டன் "நீ யாரு? தி.மு.க. ஆளு தானே? என்னோட தொண்டர்கள் தங்கள் நரம்புகளை கம்பிகளாக முறுக்கி கட்டி வெச்சிருக்கிற பேனர் அது. அதைஎடுக்க நான் விடமாட்டேன். இதுவே ஸ்டாலின் பேனராயிருந்தா என்ன பண்ணுவீங்க? போக்குவரத்தையே மாத்தி விடமாட்டீங்க... அதே மாதிரி இப்ப பண்ணுங்க.... ஆங்...."
தொண்டர் தலையிலடித்துகொண்டு அங்கிருந்து செல்கிறார். இப்படி பேசியே மொத்த நேரத்தையும் கடத்திவிட்டபடியால் அன்றைய படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுவிடுகிறது.
விரல் நடிகர் :
நான் லிட்டில் சூப்பர் ஸ்டார் பேசுறேன். உடனே நான் மாட்டிக்கிட்டுருக்கிற இடத்துக்கு ஹெலிகாப்டர் அனுப்புங்க..
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிட, அந்த வழியில் செல்லும் பெண்களை காரில் உட்கார்ந்துகொண்டே சிறிது நேரம் சைட் அடித்துகொண்டிருக்கிறார் அவர். நேரம் செல்ல செல்ல நெரிசல் அதிகமாக அவர் தயாரிப்பாளருக்கு போன் போடுகிறார். "நான் லிட்டில் சூப்பர் ஸ்டார் பேசுறேன். ஷூட்டிங்குக்கு வரணும்னா உடனே நான் மாட்டிக்கிட்டுருக்கிற இடத்துக்கு ஹெலிகாப்டர் அனுப்புங்க. இல்லாட்டி நான் வரமுடியாது. முதல்ல யாரு ஷூட்டிங் வர்ராங்கங்க்றது முக்கியம் இல்லை. கடைசியா யாரு முதல்ல வர்ராங்கங்க்றதுதான் முக்கியம்."
தயாரிப்பாளர் மறுத்துவிட்டு, உடனே திருப்பதி போய்விடுகிறார்.
தனது தந்தை கரடியார்க்கு அவர் போனை போட, உடனே அவர் எப்படியோ அந்த இடத்துக்கு வந்துவிடுகிறார்.
"டேய்... என் பையன் பேரு சொம்பு. அவன் கிட்ட வெச்சுக்காதீங்க வம்பு.
ஆகிடுவீங்க நீங்க பம்பு. அவன் முன்னால நீங்க எல்லாம் ஒரு துரும்பு.
நான் அடிக்கிறதுல இரும்பு. தயாரிப்பாளர்களுக்கு அவன் ஒரு கரும்பு..." என்று பன்ச் டைலாக்கை எடுத்துவிட...
"நீ இப்போ திரும்பு" என்று போலீஸார் அவரை எச்சரித்து அனுப்பிவிடுகிறார்கள்.
ஜெராக்ஸ் நடிகர் :
வருங்கால முதல்வர் இளைய தளபதி அஜய் சாரோட அப்பா பேசுறேன். சார் ஷூட்டிங் வரனும்னா அவர் கேக்குறதை உடனே செஞ்சுகொடுக்கணும். அப்போ தான் அவர் வருவார்.
சூப்பர் ஸ்டாரின் ஜெராக்ஸ் புகழ் அஜய் இதேபோல நெரிசலில் சிக்கிக்கொள்ள, இதற்க்கு முன்பு சூப்பர் ஸ்டார் இந்த மாதிரி நெரிசல் ஏற்பட்டபோது, பைக்கில் சென்ற விஷயத்தை அவருக்கு யாரோ எடுத்துக் கூற, உடனே தாம் அது போல செல்ல ஒரு இம்போர்டட் பைக் கேட்க்கிறார். ஓட்டிச் செல்லும் நபர் சாதரண போக்குவரத்து எஸ்.ஐ.யாக இருக்ககூடாது, ஒரு புகழ் பெற்ற IPS அதிகாரியாக இருக்கவேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார்.
அவரது தந்தைக்குலம் உடனே தயாரிப்பாளருக்கு போன் செய்கிறார். "வருங்கால முதல்வர் இளைய தளபதி அஜய் சாரோட அப்பா பேசுறேன். சார் ஷூட்டிங் வரனும்னா அவர் கேக்குறதை உடனே செஞ்சுகொடுக்கணும். அப்போ தான் அவர் வருவார். அவரோட படத்துக்கு நல்ல எதிர்ப்பார்ப்பு இருக்கு. மக்கள் அவர் அரசியலுக்கு வரணும்னு நினைக்கிறாங்க. நீங்க இந்த ஏற்பாடெல்லாம் கண்டிப்பா செய்யனும்."
"சார் படத்தையே நான் பேசாம டிராப் பண்ணிடுறேன். இத்தோட நான் தப்பிசிகுவேன்...
புரட்சி தமிழன்:
அறிவுகெட்ட கே... கூ.. பூ....அதிகமா சம்பளம் வாங்குரவநேல்லாம் அதிக நேரம் வெயிட் பண்ணனும்
உடனே காரிலிருந்து இறங்கிவிடுகிறார். "டே.... கே.. கூ. ங்களா, தமிழன் இப்படி சொரணையே இல்லாம இருக்கிறதாலதான் மத்த மாநிலத்து லாரி டிரைவருங்க எல்லாம் இப்படி நம்ம மாநிலத்துல வந்து ட்ராபிக் பண்றாங்க. இவனுங்களை நிக்க வெச்சு....
நீங்க போய் அங்க ட்ராபிக் பண்ணுங்கடா. ஆனா எவ்ளோ ட்ராபிக் வந்தாலும் ஷூடிங்குக்கு கரெக்ட் டயத்துக்கு போய் ப்ரொட்யூசர்ஸை வாழவைக்கிறதுல நம்ம புரட்சி தலைவருக்கு பிறகு, இளைய தளபதிதான். அவர் அரசியல்ல இறங்கி முதல்வர் ஆனா இதுக்கெல்லாம் கிடைக்கும் ஒரு விடிவுகாலம்.
உடனே அவரது உதவியாளர், "அண்ணே ஆளுங்கட்சி கூட்டம் ஒன்னு நடக்குது. அதுனால தான் போக்குவரத்து நெரிசலாம்."
திடுக்கிட்ட புரட்சி தமிழன் உடனே, "அடே க...கூ..ங்களா கொஞ்ச நேரம் ட்ராபிக் ஆனாதான் என்ன? உங்களுக்கு பொறுமையே இல்லியா? வந்தாரை வாழவைக்கும் தமிழனுக்கு பொறுமையே இல்லியா? டேய் ... ரோட்டுல போறது நீ. அதுவும் உன் வண்டியில போற. நீ வெயிட் பண்ணாமா உனக்கு பதிலா பக்கத்து வீட்டுக்காரனா வந்து வெயிட் பண்ணுவான்...? அறிவுகெட்ட கூ... அதிகமா சம்பளம் வாங்குரவநேல்லாம் அதிக நேரம் வெயிட் பண்ணனும். எனக்கும் அதிகமா சம்பளம் வாங்கி அதிக நேரம் வெயிட் பண்ண தெரியும். ஆனா யாரு கொடுக்குறாங்க? தமிழனுக்கு தமிழ் நாட்ட்டுல மரியாதையே கிடையாதுடா.... ஏன்னா நீங்க எல்லாம் ஒரு கே... கூ.. பூ...
வீட்டிலிருந்து அவரது மகன் போன் செய்கிறார் அப்பாவுக்கு. "அப்பா உனக்கு தான் படமும் இல்லை. ஷூட்டிங்கும் இல்லை. நீ எதுக்கு அந்த பக்கம் போனே?"
"நோ மை சன். ஆக்சுவலி நான் என் ஷூடிங்குக்கு போகலே. நம்ம favourite பூ நடிகையோட ஷூட்டிங்கை சும்மா வேடிக்கை பார்க்கத்தான் போய்கிட்டிருக்கேன்..."
"அப்படின்னா நானும் வர்றேன் டாடி. வீட்டுல ரொம்ப போர் அடிக்குது!!"
சுப்ரீம் ஸ்டார்:
நடிகர் சங்க ஒரு நபர் மீட்டிங் இருப்பதால் உடனே நான் அங்கு செல்லவேண்டியிருப்பதால் படப்பிடிப்பை ரத்து செய்கிறேன்
உடனே காரிலிருந்து இறங்கிவிடுகிறார். இதே சூழல் ஏற்பட்டபோது ரஜினியும், கேப்டனும் என்ன செய்தார்கள் என்று தெரிந்துகொள்கிறார். பிறகு அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்கிறார்.
'அடுத்த தேர்தலில் என் கட்சி ஆட்சியை பிடிக்கும். துணை முதல்வராக எனது மனைவி பொறுப்பேர்ப்பார். அப்போது இது குறித்து ஒரு முடிவு செய்யப்படும். இங்கே யார் வந்தார்கள்... உடனே படப்பிடிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஷூட்டிங்கிர்க்கு பைக்கில் போனார்கள் என்ற விபரம் எனக்கு தெரியும் இன்னொருவர் ஷூட்டிங்கே போகாமல் பேசிய டபாய்த்துவிட்டாராம். அதுவும் எனக்கு தெரியும். நான் இது போன்ற சூழ்நிலைகளில் ஒபாமாவுடன் காரிலேயே போயிருக்கிறேன். வேண்டுமானால் அமெரிக்க தூதரகத்திற்கு சென்று ஆவணங்களை பாருங்க. (நெசமாவே இதே தொனியில் சமீபத்திய ரிப்போர்டரில் ஒரு பேட்டியை கொடுத்திருக்கிறார் அண்ணன் சுப்ரீம் ஸ்டார்.)
இது போல நடிகர் நடிகையர் ஷூட்டிங் செல்லும் வழியில் போக்குவரத்தில் சிக்கிகொண்டால், அன்றைய படப்பிடிப்பிற்கே செல்ல தேவையில்லை என நடிகர் சங்கம் சார்பாக தீர்மானம் நிறைவேற்ற போகிறோம். இது தொடர்பாக வரும் ஞாயிறு சங்க கூட்டம் நடைபெறும். ஷூட்டிங் இல்லாத பெருவாரியான நடிகர்கள் அதில் கலந்துகொள்ளவேண்டும்.
இது போன்ற இடங்களில் சிக்னல்கள் அமைக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டது. அது என்ன ஆனது என்று நான் கேட்டுகொண்டிருக்கிறேன். தமிழக முதல்வர் அவர்கள் பதில் கூற மறுக்கிறார்.
உடன அவரது கட்சி தொண்டர் (??!!) ஒருவர் அருகே வந்து கிசுகிசுக்கிறார். "அண்ணே, அப்படி நிதி ஒதுக்கியது ஆந்திரா அரசாங்கம் அவங்க மாநில பட்ஜெட்லன்னே.... இங்க இல்ல."
'ஒ... அப்படியா? அப்போ தமிழக முதல்வர் அவர்கள் ஆந்திராவை பின்பற்றி சிக்னல்களுக்கு போதிய நிதி ஒதுக்கவேண்டும். அதை முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்று நம் கட்சி கண்காணிக்கும். நடிகர் சங்க ஒரு நபர் மீட்டிங் இருப்பதால் உடனே நான் அங்கு செல்லவேண்டியிருப்பதால் படப்பிடிப்பை ரத்து செய்கிறேன்."
உடனே தயாரிப்பாளரிடமிருந்து போன், "நீங்க ஷூடிங்கிர்க்கே வரவேண்டாம் சார். உங்களை தூக்கிட்டு வேற ஹீரோவை போட்டு படத்தையே கிட்ட தட்ட நாங்க முடிச்சிட்டோம்!"
[END]