Saturday, November 22, 2008

ரஜினி மீது ராஜபக்சே குற்றச்சாட்டு, ரஜினி வாழ்க்கை வரலாற்று நூலை கனிமொழி வெளியிடுகிறார்… - Titbits 8

1) ரஜினி வாழ்க்கை வரலாறு (தமிழ் பதிப்பு) - கனிமொழி எம்.பி. வெளியிடுகிறார்

சென்னையை சேர்ந்த டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கை வரலாற்றை The Name is Rajinikanth என்ற பெயரில் கடந்த ஏபரல் மாதம் வெளியிட்டார். நல்ல வரவேற்ப்பை பெற்று விற்பனையில் சாதனை படைத்தது அது.

http://onlysuperstar.blogspot.com/2008/03/best-seller-much-elated-creator.html

அநேகம் பேர் கேட்டுகொண்டதையடுத்து வாழ்க்கை வரலாற்றின் தமிழ் பதிப்பை வெளியிட முடிவு செய்து அதற்க்கான் முயற்சியில் காயத்ரி ஸ்ரீகாந்த் கடந்த பல மாதங்களாக ஈடுபட்டு வந்தார். தற்போது தமிழாக்கம் செய்யப்பட்டுளது அந்நூல். ஆங்கில பதிப்பில் காணப்பட்ட குறைபாடுகள் இதில் களையப்பட்டுளது. தவறுகளும் திருத்தப்பட்டுள்ளன.

தற்போது புத்தகம் தயாராகி வெளியீட்டிற்கும் தேதி குறிக்கப்பட்டுவிட்டது. வரும் 30 ஆம் தேதி கனிமொழி எம்.பி. அவர்கள் இந்நூலை சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் வெளியிடுகிறார். சவேரா ஹோட்டல் எம்.டி. திருமதி. நீனா ரெட்டி பெற்றுக்கொள்கிறார். கௌரவ விருந்தினர்களாக இயக்குனர் திரு. எஸ்.பி.முத்துராமன் மற்றும் கார்டூனிஸ்ட் மதன் ஆகியோர் கலந்துகொள்வார்கள். வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெறும்.

புத்தகத்திற்கான விலை Rs.250/- க்குள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த புத்தகமும் விற்பனையில் சாதனை படைக்க வாழ்த்துகிறோம்.

குசேலன் ரிலீஸ் சமயத்தின் போது, ஆதரவற்ற குழந்தைகளுக்காக சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் நடைபெற்ற குசேலன் சிறப்பு காட்சியை கூட கனிமொழி தனது மகனுடன் வந்திருந்து துவக்கி வைத்து சிறப்பு காட்சியை கண்டுகளித்தது குறிப்பிடத்தக்கது.

2) ஒரு தலைப் பட்சமாக பேசுகிறார் ரஜினி - இலங்கை அதிபர் ராஜ பக்சே குற்றச்சாட்டு

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து தமிழ் திரையுலகம் நடத்திய உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு பேசிய சூப்பர் ஸ்டார், தமிழர்கள் கொல்லபடுவதை கண்டித்ததோடு இலங்கை அரசையும் குறிப்பாக ராஜ பக்சேவையும் ஒரு பிடி பிடித்தார்.

அவரின் உரை தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ் ஆர்வலர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சில தினங்களுக்கு முன்பு கூட விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர், நடேசன் சூப்பர் ஸ்டாரின் இந்த உரையை வெகுவாக பாராட்டினார்.

இந்நிலையில் சிங்கள ஆதரவு பத்திரிகை ஒன்றிற்கு இலங்கை அதிபர் ராஜ பக்சே அளித்த பேட்டியில் இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

"முப்பது ஆண்டகளாக விடுதலைப் புலிகளுடன் போர் புரிந்து கூட அவர்களை இலங்கை அரசால் வீழ்த்த முடியவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறாரே?"

இதற்க்கு பதிலளித்த ராஜபக்சே, "தமிழ் நாட்டில் இருக்கிற பலரைப் போன்று ரஜினிகாந்த் அவர்களும், இலங்கைப் பிரச்னை பற்றிய ஒருதலைப் பட்சமான செய்திகளையே அறிந்துள்ளார். விடுதலைப் புலிகளின் சார்பான பிரச்சாரங்களை வைத்து முடிவெடுக்காமல், இந்த பிரச்னை குறித்து ஆழமாக ஆராய்ந்து அறிந்துகொள்ள முனையுமாறு அவரை கேட்டுகொள்கிறேன்."

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா ராஜபக்சே அவர்களே?

3) ரஜினிக்கும் சத்திக்கும் இடையே பிளவை ஏற்படுத்த முயற்சி

தளபதி சத்திக்கு உடல்நலக் குறைவு காரணமாக சூப்பர் ஸ்டார் ஒய்வு கொடுத்திருப்பதும் அந்த இடத்திற்கு தனது நெருங்கிய நண்பர் சுதாகர் என்பவரை ரஜினி நியமித்திருப்பதும் தெரிந்ததே. சுதாகர் அவர்களும் தனக்கிருக்கும் மாபெரும் பொறுப்பை உணர்ந்து பம்பரமாக சுழன்று வருகிறார். பொறுப்பான் ஒரு பாலமாக செயல்பட்டும் வருகிறார்.

இதற்கிடையே சத்தியின் ஒய்வு பற்றி எழுதும் நம் பத்திரிக்கைகள், பொய்களையும், புரட்டுகளையும் எழுதி குவித்து வருகின்றன. சத்தியே எதுவும் கூறாத நிலையில் அவர் அப்படி நினைக்கிறார், இப்படி நினைக்கிறார் என்று தங்கள் மனதில் தோன்றும் வக்கிர எண்ணங்களுக்காக சத்தியின் பெயரை வடிகாலாக்க துடிக்கின்றன மேற்படி பத்திரிக்கைகள். அதுமட்டுமாலாமல் ரசிகர்களை தூண்டிவிடும்படி தங்கள் எண்ணங்களை உண்மை என்று கூறி வெளிப்படுத்திவருகின்றன.

உண்மையில் ரஜினியின் எந்த முடிவுக்கும் தாம் கட்டுபடுவதாகவும், தான் தற்போது ஓய்வில் தான் இருப்பதாகவும் சத்தியே கூறிவிட்டார். "மன்றத்திற்கு எதிராகவோ, ரஜினிக்கெதிராகவோ நான் என்றுமே செயல்பட்டதில்லை. அது என் மனசாட்சிக்கு தெரியும். இன்றைக்கும் அவர் என்ன சொன்னாலும் தட்டாமல் செய்பவனாகத்தான் நான் இருக்கிறேன். மற்றபடி யார் மீதும் எனக்கு வருத்தம் இல்லை" என்று கூறிவிட்டார் சத்தி.

இருப்பினும் ரத்த வெறி பிடித்த இந்த ஓநாய்கள் பொய்களை மூட்டை கட்டுவதை மட்டும் நிறுத்தவில்லை. இது குறித்து செய்தி வெளியிட்ட ஜூ.வி. மற்றும் பக்கீரன் ஆகியவை கொஞ்சம் கூட வெட்கமேயில்லாமல் இட்டு கட்டிய செய்திகளை தந்திருக்கின்றன. ரிப்போர்டரும் அப்படியே. (அடிக்கடி முருங்கை மரம் இரு வேதாளம் இது!)

ஆனாலும் இவர்கள் நினைத்தபடி எந்த குழப்பத்தையும் ஏற்படுத்தமுடியவில்லை என்பது தான் நிஜம்.

4) சென்னையில் சத்தமின்றி நடந்துவரும் எந்திரன் படப்பிடிப்பு

சென்னையில் எந்திரன் படப்பிடிப்பு, அமைதியாக அதே சமயம் வேகமாகவும் நடந்து வருகிறது. ஷங்கர் ரகிசியமாக ப்ளான் செய்து திடீர் திடீரென்று படப்பிடிப்பை நடத்தி முடித்துவிடுகிறார்.

பாரதிராஜாவின் மகன் மனோஜ் இதில் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். சென்னை லோக்கேஷன்களை தேர்வு செய்வது அவர் பொறுப்பில் விடப்பட்டுள்ளது.

தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டி, தண்டையார்பேட்டை பாரத் பெற்றோலியம் கிடங்கு, ஈ.சி.ஆர் மற்றும் அடையாரில் உள்ள ஒரு பியூட்டி பார்லர் ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருகின்றன.

இதில் எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டியில் மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. அடையாரில் உள்ள ஜிம்மில் படப்பிடிப்பில் நடந்ததாக கூறப்பட்டது தவறு. அந்த ஜிம்மின் மேலே இயங்கிவந்த அனுஷ்கா பியூட்டி பார்லரில் தான் படப்பிடிப்பு நடந்தது.

இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு குழு குலுமனாலி கிளம்பவுள்ளது. ஐஸ்வர்யா ராய் அதில் கலந்துகொள்வார் என்று தெரிகிறது.

எல்லாம் திட்டமிட்டபடி சரியாக போய்கொண்டிருக்கிறது. ஐஸ்வர்யா ராய் மணிரத்னத்தின் படத்தில் நடிக்க ஒதுக்கிய தேதிகளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது குறித்து வரும் புருடாக்களை யாரும் பொருட்படுத்தவேண்டியதில்லை.

[END]