Sunday, November 30, 2008

தன்னை வருத்திக்கொள்பவனே சிறந்த தலைவன்; தூண்டிவிடுபவன் தேசத் துரோகி!!

கோவை குண்டுவெடிப்பு பற்றிய சர்ச்சைக்குரிய டி.வி. உரைக்கு ரஜினி அளித்த விளக்கம் என்ன?

பாட்ஷா வெள்ளி விழாவில் (1995) தீவிரவாதிகளை கண்டித்து ரஜினி பேசிய ஆவேச உரையை முந்தைய பதிவு ஒன்றில் நாம் வெளியிட்டது நினைவிருக்கலாம்.

ஏன் அப்படி ஒரு உரை நிகழ்த்தினார் ரஜினி...

அந்த பதிவில் பின்னூட்டமளித்த நம் Guest ஒருவர், பாட்ஷா வெள்ளி விழாவிற்கு பிறகு - அதாவது மூன்றாண்டுகள் கழித்து - Feb 14, 1998 அன்று நடந்த கோவை குண்டுவெடிப்பின் போது ரஜினி நிகழ்த்திய டி.வி. உரையை பற்றி குறிப்பிட்டு, அது பக்குவமற்ற ஒன்று எனவும், அன்றைய தி.மு.க. - த .மா.கா. கூட்டணியின் நிர்ப்பந்தம் காரணமாக பின்விளைவுகளைப் பற்றி கவலையின்றி அவர் ஏன் அப்படி ஒரு உரை நிகழ்த்தினார் என்றும், என்னை அதற்க்கு தகுந்த விளக்கம் அளிக்கும்படியும் கேட்டிருந்தார்.

அவர் கூறியதை போல ரஜினியின் அந்த டி,வி. உரை மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது உண்மைதான். அந்த சர்ச்சைக்குரிய டி.வி. உரை பற்றி மக்களுக்கும் ரசிகர்களுக்கும் தகுந்த விளக்கமளிக்க, அடுத்த சில தினங்களில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினி. அதில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கம் அளித்தார். அளித்ததோடல்லாமல் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியையும் அறிவித்தார். ஏன் ரஜினி அப்படி பேசினார் என்று பதிலளிக்க நான் முனைந்தபோது, எனக்கு கிடைத்த தகவல் இது. (என்னிடம் இப்படி ஒரு கேள்வி கேட்டு இந்த பதிவை நாள் அளிக்க தூண்டுகோலாய் திகழ்ந்த அந்த நண்பருக்கு என் நன்றி.)

சூப்பர் ஸ்டாரின் இந்த விளக்கத்தை படித்தவுடன் சொந்த லாபத்துக்காக மக்களை பலிகடாவாக்கும் தலைவர்களுக்கு மத்தியில் நம் தலைவர் ஒரு பத்தரை மாற்று தங்கம் என்பது நமக்கு தெளிவாகும்.

அந்த பதட்டமான சூழ்நிலையில் ரஜினியை போல ஒரு சுயநலமற்ற மனிதரிடமிருந்து அப்படி ஒரு பேட்டியைத் தான் எதிர்ப்பார்க்கமுடியும். சிறுபான்மை சமுதாயத்திற்கு ஆதரவாக அவர் அப்படி பேசியது எப்படி பார்த்தாலும் அன்றைய சூழலில் சரியே. அதன் மூலம் ரத்த ஆறு மேலும் பரவாது தடுக்கப்பட்டது. தான் தோற்றாலும் தனது நோக்கத்தில் ரஜினி வெற்றி பெற்றார். அவர் அப்படி கூறியதால் தான் சிறுபான்மை சமூகத்தை விட்டுவிட்டு ரஜினியின் மீது மத வெறியர்கள் தங்கள் கவனத்தை திருப்பினர். பதட்டத்தை தணிக்க அது ஓரளவு உதவியது.

செல்வாக்கா அல்லது பொது அமைதியா?

தனது செல்வாக்கா அல்லது பொது அமைதியா - இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் நிர்ப்பந்தம் ரஜினிக்கு ஏற்படும்போதெல்லாம் அவர் தனது செல்வாக்கை துச்சமாக மதித்து அமைதியைத்தான் தேர்ந்தெடுப்பார். கோவை குண்டுவெடிப்பு முதல் தற்போதைய "வருத்தம்" சர்ச்சை வரை அமைதியின் பொருட்டு தான் அவர் எந்த முடிவும் எடுக்கிறார். இப்போது படியுங்கள் இந்த கட்டுரைக்கு நான் இட்டிருக்கும் தலைப்பை... சரியான தலைப்பு தான் அல்லவா?

அவரை இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளாதவர்களே (அவரது சில ரசிகர்கள் உட்பட) அவரது ஒவ்வொரு செயலிலும் சுயநலத்தை காண்கின்றனர்.

இந்த மேற்கூறிய பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரஜினி சில கேள்விகளுக்கு கூறிய பதிலை உன்னிப்பாக பார்க்கவும்.

நான் எதையும் மெதுவாக செய்வேன். ஆனால் சரியாக செய்வேன்!!

"நான் எப்போவும் எதையும் மெதுவாக செய்வேன். ஆனால் கரெக்டாக செய்வேன். நான் ஆன்மீக வாதி. மதவாதி அல்ல. எனக்கு எல்லா மதமும் சம்மதம். நான் எல்லா மதத்திற்கும் பொதுவானவன். எரிகிற தீயில் தண்ணீர் விட்டு அணைக்க வேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன். அதில் என்னை ஊற்றி தீயை எரிய விட நான் விரும்பவில்லை. கோவை குண்டுவெடிப்பை வைத்து சிலர் கலவரத்தை தூண்டிவிட முயல்வார்கள். அந்த தூண்டுதலுக்கு ரசிகர்களும் மற்ற யாரும் ஆளாகிவிடக்கூடாது என்று கேட்டுகொள்கிறேன்.

இந்த குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவரது குடும்பத்தினர்களுக்கு என் அனுதாபம் நூறு சதவீதம் இருக்கிறது. இந்த சமயத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பண ரீதியாக அதிக பட்சம் எவ்வளவு உதவலாம் என்று தான் நான் யோசிக்கிறேன்."

இவ்வாறு கூறிய ரஜினி சொன்னதைப் போல அடுத்த சில தினங்களில் குண்டுவெடிப்பில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கும் காயமுற்றவர்களுக்கும் எந்தவித பப்ளிசிட்டியும் இல்லாமல் தாராளமாக நிதியுதவி அளித்தார். சத்தியநாராயணா மூலம் கோவையிலேயே நேரடியாக அளிக்கப்பட்ட அந்த உதவி பற்றிய விபரம் பத்திரிக்கைகளுக்கு கூட தெரிவிக்கப்படவில்லை. நிதியுதவி பெற்றவர்களே விஷயத்தை கூறிய பின்பு தான் வெளியுலகிற்கு தெரிந்தது.

குறிப்பு:

இந்த மாதிரி ஒரு சூழலில் ரஜினியின் புகழ் பாடுவது எங்கள் நோக்கம் அல்ல. அதற்கான அவசியமும் எங்களுக்கு இல்லை. நாடு இன்று இருக்கும் இக்கட்டான தருணத்தில் சுயலாபத்திற்காக மற்றவர்களை தூண்டிவிடும் தலைவர்களுக்கு 'ஒரு நல்ல தலைவன் எப்படியிருக்க வேண்டும்?' என்று சுட்டிக்காட்டவே இந்த பதிவு. நாட்டின் தற்போதைய தேவையும் இத்தகு தன்னலமற்ற தலைவன் ஒருவன் தான். அது யாராக இருப்பினும் நாம் வரவேற்க தயார்....!!

[END]