Friday, November 21, 2008

ரஜினி முன்பு அனைவரும் சமம். ரசிகர்களை அவர் என்றும் பிரித்து பார்ப்பது கிடையாது” - திரு.சுதாகர் கூறும் வைர வார்த்தைகள்!

“எனக்கு எதுக்குப்பா சால்வை மரியாதை இதெல்லாம். நான் ஒரு சாதரண ஆளு. இங்க நான் எந்த போஸ்டிங்குலயும் இல்ல. எந்திரன் முடிஞ்ச பிறகு ரஜினியே இறங்கி நேரடியா எல்லா விஷயத்தையும் கவனிப்பார். இப்போ ரஜினி சாருக்கும் உங்களுக்கும் இடையில நான் ஒரு போஸ்ட் மேன். அவ்வளவுதான்.”

தன்னை சந்திக்க படையெடுக்கும் ரசிகர்களிடம் திரு.சுதாகர் கூறுவது இதுதான்.

மீடியாவின் பார்வை இப்போ இவர் பக்கம்

ரஜினிக்கும் ரசிகர்களுக்குமிடையே பாலமாக செயல்படும் திரு.சுதாகர் தான் தற்போது மீடியாவின் ஹைலைட். உடல்நலக்குறைவு காரணமாக சத்தி தலைவரின் அறிவுறுத்தலுக்கேற்ப ஓய்வெடுத்துகொண்டிருப்பதால் அந்த இடத்துக்கு திரு.சுதாகர் வந்திருக்கிறார். தன் பொறுப்பை உணர்ந்து தலைவருக்கும் அவரது தொண்டர்களுக்குமிடையே ஒரு சிறந்த பாலமாக பணியாற்றியும் வருகிறார்.

தன்னை சந்திக்க வரும் ரசிகர்களிடம் சுதாகர் நடந்துகொள்ளும்விதமே அவரது பக்குவத்திற்கு சாட்சி.

கனிவாக…பொறுமையாக…

முதலில் மண்டபத்துக்கு வரும் ரசிகர்கள் உட்காரவைக்கப்படுகிறார்கள். பின்னர் யார் யார் எங்கிருந்து வருகிறார்கள், அவர்கள் முகவரி மற்றும் தொலைபேசி, செல் நம்பர் ஆகியவை குறித்துகொள்ளப்படுகின்றன. ஏற்கனவே அப்பாயின்ட்மென்ட் வாங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பின்னர் ரசிகர்கள் சுதாகரை சந்திக்கிறார்கள். அவர்களிடம் மிகவும் கனிவாக பொறுமையாக உரையாடுகிறார். சொல்பவற்றை கேட்டுகொள்கிறார். குறித்துகொள்கிறார்.

சுதாகர் ரசிகர்களிடம் கூறுபவற்றை அப்படியே இதோ தருகிறேன்…

ஒரே தலைவர் ரஜினி தான்

நான் உங்களுக்கு தலைவர் கிடையாது. ஒரே தலைவர் ரஜினி தான். அவர் எடுக்குறது தான் இறுதி முடிவு. என்னை பார்க்கவரும்போது பொன்னாடை போர்த்துறது, எனக்கு மாலை போடுறது இதெல்லாம் எனக்கு உடன்பாடு கிடையாது. அதே போல் நிறைய பேர் எனக்கு போன் பண்ணி வாழ்த்து சொல்றாங்க. வாழ்த்து சொல்றதுக்கும் நான் ஒன்னும் ரஜினிகாந்த் கிடையாது. நான் ஒரு போஸ்ட் மேன். ரஜினி என்றால் சூப்பர் ஸ்டார், அவர் அப்படி நினைப்பார், இப்படி இருப்பார் என்றெல்லாம் நினைக்காதீங்க. அவர் ரொம்ப சாதாரன ஆள். அன்னிக்கி ரசிகர் சந்திப்பின்போதே ரஜினி வந்தவுடன் என்னிடம் முதலில் கேட்ட கேள்வி, “பசங்க எல்லாம் வந்துட்டாங்களா? எல்லாருக்கும் சாப்பாடு அரேஞ் பண்ணிட்டீங்களா? நல்ல கவனிச்சீங்களான்னுதான்…?” அவர் ரொம்ப எளிமையானவரு. அவரை ஒரு மனிதனா மட்டும் பார்த்தீங்கன்னா அது போதும். அதைத்தான் அவரும் விரும்புராறு.

வேண்டாமே….

நீங்கள் செய்யும் பணிகளில் தலைவரின் படத்தை மட்டுமே உபயோகிக்கவும். லதா ரஜினி, மற்றும் சத்தி உள்ளிட்ட வேறு யார் படமும் உபயோகிக்கவேண்டியதில்லை. இது தலைவரே அறிவுறுத்துகிற விஷயம்.

ரசிகர்களை எப்போ ரஜினி சந்திப்பார்?


ரசிகர்களை ரஜினி எப்போது சந்திப்பார் என்று கேட்டால், “இப்போதைக்கு ரஜினி எந்திரன் ஷூடிங்கில் பிசியாக இருக்கிறார். ரசிகர்களை சந்திக்க எனக்கு அப்பாயின்ட்மென்ட் எதுவும் ஒதுக்கவில்லை. இப்போதைக்கு தினமும் எனக்கு வரும் கூறு விபரங்களை, தொலைபேசி தகவல்களை அப்படியே அவர்கிட்ட சொல்லிக்கிட்டு வர்றேன். எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பணியும் அதுதான்.

செய்யும் காரியங்களை சொல்லவேண்டாம்

அதே சமயம் நான் இதை செஞ்சிருக்கேன், அதை செஞ்சிருக்கேன் அப்படின்னு என்கிட்டே சொல்லாதீங்க. அப்படி சொன்ன நான் உங்களுக்கு முன்னுரிமை முக்கியத்துவம் தருவன்னேல்லாம் நினைக்காதீங்க. என்னக்கு எல்லா ரசிகர்களும் ஒண்ணுதான். தவிர நான் உங்களுக்கும் ரஜினிக்கும் இடையே ஒரு பாலம். அவ்வளவுதான். நீங்க என்கிட்டே சொல்ற விஷயத்தை நான் அவர் கிட்டே கனவே பண்ணுவேன்.

எல்லாத்தையும் ரஜினி சார் கவனிப்பாரு…

மன்றங்களுக்கிடையே உள்ள பூசல்கள், மற்றும் குளறுபடிகள் ஆகியவற்றை ரஜினி சாரே இனி நேரடியாக கவனிப்பார். எந்திரன் ஷூடிங்கிர்க்கு பிறகு அனைத்தையும் சீர் செய்து செம்மை படுத்துவார்.

ஒருவரிடம் இருக்கும் மற்றவரிடம் இருக்காது. எனவே….

நாங்க ரஜினிக்காக, மன்றத்துக்காக இதை செஞ்சிருக்கோம், அதை செஞ்சிருக்கோம் என்று சொல்லாதீர்கள். அது இரண்டாம் பட்சம் தான். ஏனெனில், ஒருவரிடம் பணம் இருக்கும் மற்றவரிடம் இருக்காது. கோடீஸ்வரர்கள் முதல் அன்றாடம் கூலிவேலை செய்யும் பாமரன் வரை அவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். இதில் பணம் இருப்பவர்கள் நினைக்கும் நற்பணிகளை செய்யமுடியும். ஆனால் அப்படி செய்ய வசதியற்றவர்கள்? பணமில்லாவிட்டாலும், ரஜினி சாரை உயிரினும் மேலாக நேசிப்பவர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள். அவர்காளால் எதுவும் செய்யமுடியாதல்லாவா? மேலும் தீவிர ரசிகர்கள் பலர் மன்றங்களில் உறுப்பினர்களாக இல்லை. ஆனால் அவர்களும் ரசிகர்கள் தானே. ரஜினியை பொறுத்தவரை அவர் முன் எல்லா ரசிகர்களும் சமம். உயர்ந்தவன், தாழ்ந்தவன், செய்தவன், செய்யாதவன் என்று அவர் யாரையும் பிரித்து பார்ப்பது கிடையாது.

நல்லதே நடக்கும்

நீங்கள் மனம் குளிரும்படி எல்லாம் நடக்கும். நல்லதே நடக்கும். நீங்கள் உங்கள் பணியை, கடமையை சரியாக குறைவின்றி செய்து வாருங்கள். சார் சொன்னது போல உங்கள் குடும்பத்தை நன்கு கவனியுங்கள். அது தான் அவர் உங்களிடம் எதிர்ப்பார்ப்பது.

அரசியல் வசனங்கள் கூடாது…

மன்றப்பணிகளை பொறுத்தவரையில் யாருக்கும் அஞ்சாமல், உங்களுக்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்து வாருங்கள். சர்ச்சைக்குரிய வார்த்தைகள், அரசியல் வசனங்கள் ஆகியவற்றை உபயோகப்படுத்தாதீர்கள். உண்மையான அன்பை மட்டுமே வெளிப்படுத்துங்கள். ரஜினி சாரைப் போல இறைவனை நம்புங்கள். ஆண்டவனை வேண்டிக்கொள்ளுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

அவர் அமைதியா சந்தோஷமா இருக்கணும்…

தேவையின்றி அவரை எதிலாவது வற்புறுத்தவது, போர்ஸ் பண்ணுறது இதெல்லாம் வேண்டாம். அவருக்கும் நிறைய ஸ்ட்ரெஸ் உண்டு. அவர் ஏதாவது வார்த்தையை விட்டால் அது எவ்வளவு பெரிய இஷ்யூ ஆவுதுன்னு உங்களுக்கே தெரியும். ஸோ அவர் அமைதியா சந்தோஷமா இருக்கணும். இப்போ நான் வந்தவுடனே பாருங்க என்னல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கும் சத்திக்கும் மனஸ்தாபம் அது இதுன்னு… இதெல்லாம் தேவையற்ற வார்த்தைகள். உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் சத்தி சாருக்கு ஒரு ஆறு மாத காலம் ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரை எதற்கு வீண் தொந்தரவு செய்வானேன்? அதனால் தான் அவர் படத்தை போடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்றபடி விஷேஷ காரணம் எதுவுமில்லை.

மனம் நிறைந்த ரசிகன்

பேசிமுடித்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள் மனம் நெகிழ்ந்து, நிறைந்து காணப்படுகிறார்கள். தங்கள் தலைவனுடன் இனி எப்போது வேண்டுமானால் நாம் பேசலாம். இதோ ஒரு தூதுவர் கிடைத்துவிட்டார். எங்களுக்கு கவலையில்லை என்று அவர்கள் முகம் சொல்கிறது.

தலைவர் ஒரு சரியான நபரைத்தான் பாலமாக அமைத்திருக்கிறார். நன்றி தலைவா…!!