Wednesday, November 26, 2008

"தலைவரிடம் நான் கற்றுக்கொண்டது என்ன...?" - மனம் திறக்கிறார் நயன்தாரா!

லைப்பை பார்த்தவுடன் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்குமே....? பிரபல வார இதழ் ஒன்றில் சூப்பர் ஸ்டாரை இப்படித்தான் கூறியிருந்தார் நயன்தாரா.

என்ன விஷேஷமாக இருந்துவிடப் போகிறது இந்த கட்டுரையில் என்று நான் ஸ்கிப் செய்ய நினைத்து பக்கத்தை புரட்ட எத்தனிக்கையில் "என்ன தான் சொல்லியிருக்கிறார் நயன்தாரா என்று தான் பார்போமே.." என்று படிக்கத் துவங்கிய எனக்கு இன்ப அதிர்ச்சி.

திரையுலகில் தான் படித்த பாடங்களை நயன்தாரா அதில் சுவையாக கூறியிருந்தார். அந்த கட்டுரை முழுதும் அவர் சூப்பர் ஸ்டாரை 'தலைவர்' என்று தான் விளித்திருந்தார். (அவரை பெயர் சொல்லி விளிக்கும் சில ரசிகர்கள் கவனிக்க!!)

"நான் தலைவருன்னு சொல்றது..." - நயன்தாரா

"தலைவரிடம் நான் நிறைய விஷயங்களை கத்துகிட்டேன். ஆனா எனக்கு அவர் எந்த அட்வைஸும் பண்ணல. அவரோட செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளிலிருந்து நானாகவே நிறைய கத்துகிட்டேன். நான் தலைவருன்னு சொல்றது சூப்பர் ஸ்டார் ரஜினி சாரை.

"இப்போல்லாம் நடிகர் நடிகைங்களுக்கு கேரவன் என்பது அத்தியாவசியமாப் போச்சு. அது அவசியம் என்பதைவிட கௌரவ சின்னமாப் போச்சு. முன்னெல்லாம் நான் ஒரு ஷாட் முடிஞ்சதும் ஓடிபோய் கேரவனுக்குள்ள உக்காந்துக்குவேன். அடுத்த ஷாட் ரெடின்னு அசிஸ்டன்ட் வந்து கூப்பிட்டதுக்கபுரம்தான் வெளிய வருவேன். ஆனால் தலைவர் அப்படி செய்யமாட்டார்.

அவர் இந்தளவு உயரத்திற்கு வந்ததற்கான காரணம்...

"அவருடன் நான் நடித்த மூன்று படங்களின் படப்பிடிப்புகளிலும் அவரது எளிமையை பார்த்து நான் வியந்தேன். அது தவிர அவர் இந்தளவு உச்சத்திற்கு வந்ததற்கான காரணம் அவரோட தொழில் பக்தி மற்றும் அர்பணிப்புதான் என்பதையும் நான் புரிஞ்சிக்கிட்டேன்.

"ஷூட்டிங் சமயத்துல அவரோட ஷாட் முடிஞ்சதுன்னா கூட கேரவனுக்கு போகாம அப்படியேதான் உக்காந்திருப்பார். லன்ச்சை கூட யூனிட் ஆட்கள் கூட சேர்ந்து தான் பெரும்பாலும் சாப்பிடுவார். டைரக்டரே வந்து, "உங்க அடுத்த ஷாட்டுக்கு ரொம்ப நேரம் ஆகும்"னா தான் கேரவனுக்கு போவார். டைரக்டர் கட்டுன்னு சொன்ன அடுத்த செகண்ட் கேரவனுக்குள்ள ஓடுற எனக்கு ரஜினி சாரின் செயல் ரொம்ப விசித்திரமாப்பட்டுச்சு.ஒரு வேளை சும்மா எளிமையா இருக்கிற மாதிரி சீன் போடுராரோன்னு கூட எனக்கு தோணிச்சு.

"ஒரு நாள் ஷூடிங்கின்போது சொன்னார், "நடிப்பு நமது தொழில். அது நமக்கு சோறு போடுது. அதை நாம் சின்சியரா செய்யனும். ஒரு ஆபீஸ்ல வேலைக்கு போறவன், பைலை புரட்டி கையெழுத்து போட்டதும் உடனே ரெஸ்ட் ரூமுக்கு போய் ஓடிப் போய் உட்கார்ந்துக்க முடியுமா? மார்னிங் 9 முதல் ஈவ்னிங் 6 வரைக்கும் ஒரு கால்ஷீட். இந்த கால்ஷீட் நேரம் நம்மோட சொந்த நேரம் கிடையாது. பணத்தை வாங்கிகிட்டு அந்த நேரத்தை நாம் படம் எடுக்குறவங்ககிட்ட கொடுத்துட்டோம். அந்த நேரங்கள்ல அவங்க சௌகரியப்படிதான் நாம் நடந்துக்கணும். நம்ம சொந்த வேலைகளை அந்த நேரத்துல கண்டிப்பா பார்க்ககூடாது. நம்மளை யாரு கேப்பாங்கன்னு நினைக்கூடாது. அது தான் என்னோட பாலிசி."

அன்றிலிருந்து தலைவர் பாணியில ஷாட் முடிஞ்சதும் செட்டில் போய் உக்காந்துடுவேன். அவசியம் ஏற்பாட்டாலோழிய கேரவனுக்குள்ள எட்டிகூட பார்க்க மாட்டேன். இந்த விஷயத்துல தலைவர் வழி என் வழி. இப்படி அவர் கிட்ட நான் கத்துகிட்ட விஷயங்களை பத்தி சொல்லிக்கிட்டே போகலாம். அதுக்கு ஒரு நாள் ரெண்டு நாள் போதாது," என்று முடித்தார் நயன்தாரா.

…………………………………………………………………………………………………………………

பெரும்பாலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் அவருடன் படம் எடுத்துக்கொள்ளவதை தலைவர் விரும்புவதில்லை. காரணத்தை தான் பார்த்துவிட்டோமே. மேலும் அப்படி தவிர்க்க இயலாமல் எடுக்க நேர்ந்தால், இயக்குனரிடம் அனுமதி பெற்றுவிட்டு தான் எடுத்துக்கொள்வார். இப்படி ஒரு தொழில் பக்தி மிக்க நட்சத்திரத்தை இந்த காலத்தில், சினிமா உலகில் பார்ப்பது அரிது. நிஜ வாழ்கையிலும் பார்ப்பது அரிது.

அவர் வழி நடுத்தும் மக்களுக்கு?

உடன் நடிப்பவர்களுக்கே எப்படி உதாரணமாய் திகழ்கிறார் நம் தலைவர் பார்த்தீர்களா? அப்போ அவர் வழி நடுத்தும் மக்களுக்கு?

இதை தான் அவர் ரசிகர் சந்திப்பில் கூறியிருந்தார், "ஒரு பொறுப்புள்ள நடிகனா, மனைவிக்கு நல்ல கணவனா, குழந்தைகளுக்கு அப்பாவா, இந்த நாட்டுக்கு ஒரு நல்ல குடிமகனா - நான் என் கடமைகளை கரெக்டா செய்துட்டு வர்றேன். நீங்களும் உங்க கடமைகளை சரியா செய்யுங்க."

[END]