Thursday, December 11, 2008

சாட்டை சும்மாயிருந்தாலும் பம்பரம் சும்மா விடாது...

ரசியலுக்கு வர நேரம் காலம் எதுவும் பாராமல், கொள்கைகள் எதுவுமின்றி சுற்றியிருப்போர் ஏத்திவிட்ட ஒரே காரணத்தால் அரசியல் பிரவேசம் செய்தார் விஜயகாந்த். அதனால் அவரை தைரியசாலி என்று அழைத்து மகிழ்கிறது ஒரு கூட்டம்.

இது குறித்து தற்போது கருத்து கூறியுள்ள நம் விருந்தினர் ஒருவர், "நாடு போகும் நிலை தற்போது சரியல்ல. கொஞ்சம் பொறுத்திருப்போம்" என்று ரசிகர் சந்திப்பில் ரஜினி கூறியதை மிகவும் தவறாக விமர்சனம் செய்துள்ளார். (கவனிக்க: ரசிகர்களுக்கு அவர்களுடனான சந்திப்பில் ரஜினி கூறியது இது. அழையா விருந்தாளிகள் அதை விமர்சிப்பது சரியான காமெடி!!)

சாட்டை சும்மாயிருந்தாலும் பம்பரம் சும்மா விடாது என்பது இது தான்.

மேலும் அவர் கூறியது தான் உச்சகட்ட காமடி. இப்போது இருக்கும் தலைவர்களிலேயே விஜயகாந்த் தான் மிகவும் நல்லவராம். ரஜினி தினமும் குழப்பிகொண்டிருக்கிறாராம். நான் தெரியாமல் தான் கேட்கிறேன், அரசியலுக்கு வருவது தொடர்பாக ரஜினி தினமும்.... அட விடுங்கள் .... அட்லீஸ்ட் வாராவாரம் பேட்டி கொடுத்துகொண்டிருக்கிறாரா? போங்கடாங்.... அவர் கூறியது எங்களுக்காக. எங்களுக்கு விளங்கிவிட்டது. விளங்காதவர்கள் தலையில் எலுமிச்சம்பழத்தை தேய்த்து வரவும். அப்போதாவது புரிகிறதா என்று பார்க்கலாம். தங்கள் அரிப்புக்கு ரஜினியையோ அவரது ரசிகர்களையோ பிடித்து யாரும் தயவுசெய்து சொறியவேண்டாம்.

ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்காக காத்திருந்து, பின்னர் வெறுத்துபோய் அவரை விமர்சனம் செய்த லேனா தமிழ்வாணன் தற்போது என்ன கூறுகிறார் தெரியுமா? படியுங்கள்.

…………………………………………………………………………………………………………………

லேனாவின் பார்வையிலே...

rajinikanth.jpg

ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!

இவர் மனத்தில் என்னதான் இருக்கிறது என்று ரஜினியைப் பார்ப்பவர்களுக்கெல்லாம் ஒரு நினைப்பு ஏற்பட்டபடி இருந்தது. இதற்கு இப்போது விடை கிடைத்துவிட்டது.

தம் இரசிகர் மன்றப் பொறுப்பாளர்களை இராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்தையே இப்படிக் குறிப்பிடுகிறேன். ரஜினி பாணியிலேயே சொல்வது என்றால் லேட்டானாலும் லேட்டஸ்டாக வந்துவிட்டார்.

மனிதர் திருவாய் மட்டுமா மலர்ந்தருளினார்? உள்ளத்தையல்லவா திறந்து கொட்டிவிட்டார்.

இரசிகர்களைச் சந்திக்காமல் தவிர்த்து வந்த ரஜினி, இனி அவர்களுக்கு அடிக்கடி தரிசனம் தருவார் என்கிற நம்பிக்கை பிறந்திருக்கிறது. இரசிகர்களின் ஒரு சிறு விருப்பத்தைக்கூட நிறைவேற்றாமல் ஒரு நாயகர் நடந்துகொண்டது முறை அல்ல.

ரஜினியிடம் அவரது ரசிகர்கள் இரசிக்கும் விஷயங்கள் பல. இவரது ஒவ்வோர் அசைவையும் இரசிப்பார்கள். ஆனால் வெளிமனிதர்கள் பலரும் இரசிப்பது, ரஜினியின் போலித்தனமில்லாத வெளிப்படையான பேச்சு.

இதுதான் ராகவேந்திரா மண்டபத்திலும் நிகழ்ந்திருக்கிறது. எவரும் கண்டதையும் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக முன்பே கேள்விகளை எழுதி வாங்கி அவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து இந்தச் சந்திப்பு மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

தன் பிறந்தநாளின்போது ஏன் இரசிகர்களைச் சந்திப்பதில்லை என்பதற்கான விளக்கம் அவ்வளவாக ஏற்கும்படி இல்லாவிட்டாலும் இது ஒரு தனி மனித விருப்பம் என்ற வகையில் இதனை நாம் அதிகம் விமர்சிப்பதற்கில்லை.

அரசியலைப் பொறுத்தவரை விடை கிடைத்துவிட்டது. ரஜினிக்கு நாட்டை ஆளும் ஆசை இருக்கிறது. அதற்கான சந்தர்ப்பத்திற்காகக் கைகட்டிக் கொண்டு காத்திருக்கிறார். தமிழகத்தில் அரசியலில் பெரிய வெற்றிடம் ஒன்று வரப்போகிறது. அப்போது அந்த இடத்தை நிரப்ப முன்வருவார் என்பது அவர் பதிலுக்குள் அடங்கியிருக்கும் விளக்கமாகப் படுகிறது.

பண உதவிகளை எதிர்பார்த்த இரசிகர்களுக்கு ரஜினி நன்கு குட்டு வைத்திருக்கிறார். தியாக உணர்வும் தன்னலமற்ற போக்கும் தம் இரசிகர்களுக்கு வேண்டும் என்கிற மறைமுகச் செய்தியைப் பதித்து இந்தச் செய்தியை அழகுறச் சொல்லியிருக்கிறார். ரஜினி இரசிகர்களின் சந்திப்பிலேயே அடிக்கோடிட வேண்டிய இரண்டு செய்திகள், என்னைப் பொறுத்த அளவில் மிகப் பிடித்திருக்கின்றன.

கேள்வி நேரத்தின்போதும் சரி, கேள்வி நேரத்திற்குப் பிறகு ரஜினி ஆற்றிய உரையின்போதும் சரி, ரஜினி வலியுறுத்தியும் வற்புறுத்தியும் சொல்லியிருக்கும் கனமான இரு விஷயங்கள், ‘கடமையைப் பாருங்கள். உங்கள் தாய் தந்தை குடும்பத்தைக் கவனியுங்கள்’ என்பதுதான்.

தமிழக இரசிக மன்றங்கள் எப்போதுமே ரொம்ப ஓவர். நடிகைக்குக் கோயில், கட்-அவுட்டுக்குப் பால் அது இது என்று ரொம்பத்தான் அலட்டிக் கொள்வார்கள்.

தேவையற்ற நடவடிக்கைகளுக்குத் தடை போட்டு, அவசியமான விஷயங்களை வலியுறுத்தியிருக்கும் இந்தச் சந்திப்பு, ரஜினி போட்டுக்கொடுத்திருக்கும் தங்கத் தடம் என்பேன்!

http://www.tamilvanan.com/content/2008/11/14/20081114-lenavin-parvayil/

…………………………………………………………………………………………………………………

ரஜினி பற்றி இப்படி கூறியவர் விஜயகாந்த் பற்றி என்ன கூறுகிறார் தெரியுமா?

படியுங்கள்....... ஒருகணம் சிந்தியுங்கள்!!

(குறிப்பு: விஜயகாந்த்தை கேள்வி-பதில் முதற்கொண்டு அனைத்திலும் புகழ்ந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த் மீது எந்த காழ்புணர்ச்சியும் அற்றவர் லேனா என்று நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதால் இதை கூறுகிறேன். )

விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

கருணாநிதி, ஜெயலலிதாவின் வரிசையில் வைத்து எண்ணப்படும் தமிழக அரசியலின் புதிய விடிவெள்ளியான விஜயகாந்த் மிகவும் தரம் தாழ்ந்து பேசியிருப்பது ஏமாற்றம் தருவதாக உள்ளது.

இவரது பேச்சின் சில பகுதிகளை உங்களுக்கு அப்படியே தந்திருக்கிறேன்.

”கலைஞர் இன்றைக்குத் தன்னோட டி.வி.யில் என்ன சொல்றாரு? ‘தமிழர்களே… தமிழர்களே… நீங்கள் என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாக மிதப்பேன். அதில் நீங்கள் பயணம் செய்யலாம். கவிழ்ந்துவிட மாட்டேன்’னு பேசறாரு… யோவ் நீ கவிழமாட்டே… மக்கள்தான் கவுந்து போவாங்க. இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் தமிழ், தமிழர்கள்னு சொல்லி மக்களை ஏமாத்திக்கிட்டு இருக்கப்போறே? நான்கு முறை முதல்வரா இருந்து கொள்ளையடிச்சது போதாதா? வயசான காலத்துலேயும் இன்னும் பதவிவெறி, பணவெறியோடு ஏன் அலையிறே? போகும்போது எல்லாத்தையும் கொண்டா போகப்போறே? செத்துட்டா இடுப்புல கட்டியிருக்கிற அரணாகயிறு கூட மிஞ்சாது.

‘மதுரை தினகரன் அலுவலகத்தில் நடந்த மூன்று கொலைக்குக் காரணம் உன் மகன் தானாமே?’ என்று டெல்லியில் ஒரு பத்திரிகையாளர் கேட்ட போது அவர் மீது கோபப்பட்டு எழுந்து போனே. ஏன்யா, உன் பிள்ளை உயிருன்னா உனக்கு அவ்வளவு முக்கியம். இங்கே நடுக்கடல்ல சாகுற மீனவர்கள்னா அவ்வளவு இளப்பமா?”- தம் ஆதரவாளர்களையே நெளிய வைக்கும் பேச்சு இது.

பாதிக்கப்பட்ட மீனவர்கள் மத்தியில் ஆறுதலாகவும் அரவணைப்பாகவும் பேசியிருந்தால் அதை யாரும் குறை சொல்லிவிட முடியாது.

ஆனால் இந்தப் பேச்சோ இரத்த நாளங்களைச் சூடேற்றுகிற பேச்சு.

இப்பேச்சு இவரது அரசியல் வெண்சட்டையில் வீசப்பட்ட அப்பட்டமான கறை என்பதை எவரும் மறுத்துவிட முடியாது.

இந்தப் பேச்சினை ஆதாரமாகக் கொண்டு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க இயலும். ஆனால் ஆட்சியில் இருப்பவர் கெட்டிக்காரர். யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்கிறது என்றால் அந்தப் பாதிப்பே போதும்; நாம் வேறு ஏன் கைது செய்து இவரை மேலும் பிரபலமாக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய புத்திசாலி.

அரசியலில் முதன்மை பெற எத்துணையோ வழிமுறைகள் உண்டு. இவற்றுள் முக்கியமானது மேடைக் கண்ணியம்.

எம்.ஜி.ஆரைப் பின்பற்றுவதாகச் சொல்லும் விஜயகாந்த் எம்.ஜி.ஆரால் பேசப்பட்ட இப்படிப்பட்ட கண்ணியக் குறைவான பேச்சிற்கு ஒரு முனனுதாரணத்தையாவது காட்ட முடியுமா?

ஒரு 86 வயதுப் பெரியவரை ‘நீ’ ‘வா’ ‘போ’ என்று பேசுவது எந்த வகையில் சரி? அவரது மறைவைப் பற்றி விமரிசிப்பதையும் எப்படி நியாயப்படுத்த இயலும்.

மேலும் ”நடுக்கடலுக்குச் சென்று கடல் உள்ளிருப்புப் போராட்டம் ஒன்றைத் தொடங்குங்கள். உங்களோடு நானும் ஒரு படகில் ஏறி சாகும்வரை நடுக்கடலில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தத் தயாராக இருக்கிறேன். தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க. அரசை மட்டும் அல்ல… இலங்கையை ஆளும் அராஜக ராஜபக்சே அரசையும் நம் போராட்டத்தால் ஸ்தம்பிக்க வைப்போம்” என்றும் விஜயகாந்த் பேசியுள்ளார்.

அது சரி, இலங்கை அரசை எப்படி ஸ்தம்பிக்கச் செய்யப் போகிறாராம்? நடுக்கடலில் முகாமிட்டுப் போராட்டம் நடத்தினால் இலங்கை அரசு ஸ்தம்பித்துவிடுமா? எப்படி?

விஜயகாந்த் அரசியலில் வெற்றி பெறவும், பக்குவப்படவும் இன்னும் வெகுகாலம் ஆகும் போலிருக்கிறது!

http://www.tamilvanan.com/content/2008/07/25/20080725-lenavin-parvayil/

[END]

Titbits 8 : ரஜினியின் புதிய கீதை ஏற்படுத்தியுள்ள பாதிப்பு, சூப்பர் ஸ்டாரின் ஜாதகம் சொல்வது என்ன? etc.etc.,

1) ரஜினியின் புதிய கீதை ஏற்படுத்தியுள்ள பாதிப்பு

சூப்பர் ஸ்டார் தனது ரசிகர்களை சந்தித்தபோது கூறிய "கடமையை செய். பலனை எதிர்பார்" என்னும் வாக்கியம் ஏற்கனெவே சென்னை மற்றும் தமிழகத்தின் ஆட்டோக்களில் பல இடம்பிடித்துவிட்டது.

அதன் பாதிப்பு பல ரசிகர்களிடம் தென்பட ஆரம்பித்து விட்டது. மன்றப் பணிகளில் ஆர்வம் காட்டாமலிருந்த பல ரசிகர்கள் அவரவர் பெற்றோரின் ஆசீர்வாதத்தோடு களமிறங்கி விட்டனர். (ரசிகர் மன்றப் பணிகளுக்கே சூப்பர் ஸ்டாரின் அந்த பேட்டி கௌரவத்தை அளித்தது என்பதை யாராலும் மறுக்க இயலாது.)

ரசிகர்கள் அல்லாதவர் களிடமும் அந்த வாக்கியம் பாதிப்பு ஏற்படுத்தியது என்பதும் உண்மை. "கடமையை செய். பலனை எதிர் பார்." சரி தானே? ரஜினி சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என்று பலர் கருதுகிறார்கள்.

இவர்களை தவிர ஒரு அரசியல் கட்சி தலைவரை கூட இந்த வாக்கியம் பாதித்திருக்கிறது என்பது தான் ஆச்சரியம். (அப்படித்தான் நான் நினைக்கிறேன்). சமீபத்தில் தனது கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவரின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான செல்வி.ஜெயலலிதா மணமக்களை அங்கு தமது தொண்டர்களிடம் பேசுகையில் கூறியது இது.

"நீண்ட காலமாக கட்சிக்கு பாடுபட்டு வருகிறீர்கள். உங்களில் பலர் உழைப்பின் பலனை பெற்றிருப்பீர்கள். கழகத்திற்கு உழைத்து பலன் பெராதவர்களுக்கேல்லாம் நான் சொல்வது என்னவென்றால், நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள். அதற்குரிய பலன் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். அதற்க்கு நான் உத்தரவாதம் தருகிறேன்."

- இது எப்படி இருக்கு?

(அரசியல் அகராதியில் கடமையை செய்துவிட்டு பலனை எதிர்ப்பார்ப்பது என்றால் வேறு அர்த்தம் கூட இருக்கலாம். அது எனக்கு தெரியாது..!!)

ஒரு விஷயத்தை நீங்கள் நன்கு கவனிக்க வேண்டும். ரஜினி ஒன்றும் மேம்போக்காக அந்த வாக்கியத்தை கூறவில்லை. "கடமையை செய்தால் அதற்க்கு உரிய பலன் எப்போது கிடைக்கும் என்றால், அந்த கடமையை சரிவர குறைவின்றி செய்தால் தான்" என்று அதையும் ரஜினி அழுத்தம் திருத்தமாக கூறினார்.

ரஜினி கூறிய இந்த விளக்கம் கீதைக்கு எந்த வகையிலும் எதிரானது அல்ல. கீதையில் கூறப்பட்டிருப்பது அர்ஜுனன் போன்ற ஞானிகளுக்கே பொருந்தும். நாம் அதை போட்டு குழப்பிகொள்ளத் தேவையில்லை என்று தெளிவாக அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா அவர்களின் உரை பற்றிய தகவல் உதவி: எஸ்.ஆர்.வி.சேகர். (கவனிக்க எஸ்.வி.சேகர் அல்ல. எஸ்.ஆர்.வி.சேகர். இவர் நம் வலைத்தள நண்பர்.)

2) சூப்பர் ஸ்டாரின் ஜாதகம் சொல்வது என்ன?

ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும் இந்த செய்தி.

சூப்பர் ஸ்டாரின் அரசியல் பிரவேசத்திற்கான அசல் சாத்தியக்கூறுகள் பற்றி ஒரு புறம் ஒதுக்கி வைப்போம். இது குறித்து ஜோதிடம் என்ன கூறுகிறது என்று பார்ப்போமா?

இது சமீபத்திய கணிப்பு என்பதால் இங்கு தருகிறேன்.

"ஆயிரம் அதிசயம் அமைந்தது பாபா ஜாதகம்..." இது ஏதோ சினிமாவுக்காக எழுதப்பட்ட பாடல் அல்ல. நிஜ வாழ்க்கைக்கும் சேர்த்து தான் எழுதப்பட்டது. கவிஞன் வாக்கு பொய்க்காது. காவிஞர் வாலி கூறியது போல பல அற்புதங்கள் ஒருங்கே அமையபெற்றது ரஜினியின் ஜாதகம். அதன் பலன்களை துல்லியமாக கணித்து கூற ஜோதிடத்தின் தந்தை அகத்திய முனிவரால் மட்டுமே முடியும். இருப்பினும் நம் ஜோதிடர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம்.

சூப்பர் ஸ்டாரின் அரசியல் பிரவேசம் பற்றி பிரபல ஜோதிடர் வித்யாதரன் கூறுகிறார்:

ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி. அதில் மாற்றமே இல்லை. அவரது லக்னம்-சிம்மம், ராசி-மகரம், நட்சத்திரம்-திருவோணம். ஓணத்தில் பிறந்தவன் கோணத்தை ஆள்வான் என்ற ஒரு ஜோதிட பாடல் உண்டு. திருவோணம் நட்சத்திரத்திற்கென்று தனி நிர்வாக திறமை இருக்கும்.

சிம்ம லக்னம் (சூரியனின் லக்னம்), ராசி மகரம் (சனியின் ராசி), நட்சத்திரம் திருவோணம் (சந்திரனின் நட்சத்திரம்). இதில் ரஜினியின் உயிர் நெருப்பு (சூரியன்), உடல் தண்ணீர் (சனி). நீரும், நெருப்பும் எப்போதுமே மோதிக் கொண்டே இருக்கும். சூரியனுக்கும், சனிக்கும் பகையுண்டு.

இதன் காரணமாகவே அவர் விஷயத்தில் ஒரு ஊசலாட்டம் காணப்படுகிறது. ஆனால் சிம்ம லக்னம் ஸ்திர லக்னம் என்பதால், அவரது மனதில் நிலையான எண்ணங்கள் இருக்கும். எனவே அவரைக் குழப்பவாதி என்று கருதத் தேவையில்லை.

ஆனாலும், தற்போது அவருக்கு நடக்கும் அஷ்டமச் சனி 27/09/2009 அன்று முடிவடைவதால், அதன் பின்னர் அவர் சிறிது சிறிதாக அரசியலுக்குள் நுழையும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக 2010இல் வெளிப்படையாக சில விஷயங்களை அவர் தெரிவிக்கவும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன.

அவரது ஜாதகப்படி ரஜினி அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாகவே உள்ளது.

(நன்றி: tamil.webdunia.com, தகவல் உதவி: எம்.ராஜேஷ், செல்வராஜ்)

3) ஹைதரா பாத்தில் சூப்பர் ஸ்டார் - பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை

சூப்பர் ஸ்டார் எங்கு எப்போது செல்வார், இருப்பார் என்று யாராலுமே சரியாக கணித்து கூறிவிட முடியாது. காலையில் கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் நீச்சல் பயிற்சி செய்துகொண்டிருப்பார். மதியம் பெங்களூரில் நண்பர்களுடன் சாப்பிட்டுகொண்டிருப்பார். மாலை ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருப்பார். இது போல பல முறை நடந்திருக்கிறது. எனவே அவரது அசைவுகளை துல்லியமாக கூறுவது என்பது பெரிய பெரிய மீடியா ஜாம்பவாங்களுக்கே கூட சவால் தான்.

இதோ லேட்டஸ்ட்டாக சூப்பர் ஸ்டார் பிறந்த நாளை கொண்டாடாமல் சுல்தான் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றிருப்பது குறித்து தந்தி செய்தி வெளியிட்டிருக்கிறது.

சுல்தான் படப்பிடிப்பு ஏற்கனே முடிந்துவ்ட்டது. இது கரெக்க்ஷன்ஸ் உள்ள பகுதிகளின் படப்படிப்பு.

அனிமேஷன் படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு நடிக்கிற வேலை என்ன என்று கேட்ப்பவர்களுக்கு...

அனிமேஷனை அப்படியே செய்வதைவிட, அந்த அனிமேஷன் தோற்றத்தில் உள்ள நபரை நடிக்கவைத்துவிட்டு அதை அப்படியே ட்ரேஸ் செய்து அதன் மீது 3D மாடலிங் செய்தால் தத்ரூபமாக இருக்கும். அதற்காகத்தான் இந்த படப்பிடிப்பு. ஒ.கே. ?

[END]


Wednesday, December 10, 2008

ஆதாயம் தேடாதவர்களின் ஆகாயமே! -திருச்சி ரசிகர்களின் போஸ்டர்

ம் திருச்சி ரசிகர்கள் போஸ்டர்களுக்கு பெயர்பெற்றவர்கள். வேண்டுமானால் தலைவரின் படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் திருச்சி சென்று பாருங்களேன். திரும்பிய பக்கமெல்லாம் போஸ்டர்கள் தான். ஒவ்வொரு போஸ்டரும் ஒரு பெரிய செய்தியை தாங்கி கொண்டிருக்கும். கண் கொள்ளா காட்சி அது.


சொல்ல போனால் போஸ்டர்களில் புது புரட்சியை ஏற்படுத்தியவர்கள் அவர்கள்.

சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளையொட்டி திருச்சியின் ரஜினி தளம் எழுப்பியுள்ள போஸ்டர் இது. 'ஆதாயம் தேடாதவர்களின் ஆகாயமே!!' என்ன ஒரு அற்புதமான வரிகள்....

திருச்சி தவிர தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, மதுரை உள்ளிட்ட பிற இடங்களிலும் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

வழக்கமான் போஸ்டர்கள் தவிர பல்வேறு சமூக நலப் பணிகளை சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளுக்கு செய்யவிருக்கின்றனர் திருச்சி ரசிகர்கள். புகைப்படத்துடன் விபரங்கள் பின்னர் வெளியாகும்.

[END]






அனைத்திலும் உதாரணமாய் ஒரு தலைவன்

சூப்பர் ஸ்டாரின் நடவடிக்கைகளை கூர்ந்து பார்ப்பவர்களுக்கு ஒரு விஷயம் நன்கு புலப்படும். அவர் அனைத்து விஷயங்களிலும் நமக்கு உதாரணமாக திகழ்வது.

தான் அடுத்தவர்களுக்கு - அது திரைப்படத்திலாகட்டும் நிஜ வாழகையிலாகட்டும் - கூறுகின்ற அறிவுரைகளை தான் முதலில் பின்பற்றுகிறோமா என்று பார்த்துவிட்டு தான் அவர் அறிவுரையே கூறுவார். ஊருக்கு மட்டும் உபதேசம் என்று அவர் என்றுமே இருந்ததில்லை.

தனது உடலை பேணிக்காப்பதில், குடும்ப நலன், பணியாளர் நலன், தம்மில் எளியோரிடம் அவர் நடந்துகொள்ளும் முறை, அரசாள்பவர்களுடன் அவர் கடைப்பிடிக்கும் தூரம் இப்படி பல விஷயங்களில் நாம் அவரிடம் அனேக விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும்.

செல் பேசா விந்தை மனிதர்

இன்றைய காலகட்டங்களில், செல் போன் எவ்வாளவு முக்கியமான விஷயம்? ஆனால் சூப்பர் ஸ்டாரோ செல்போனை உபயோகித்து நாம் பார்த்தது மிக மிக அரிதாக தான். பொது நிகழ்ச்சிகளுக்கு வரும்போது, கையில் லேட்டஸ்ட் செல்போனே ஒன்றை வைத்துக்கொண்டு போஸ் தருவதுதான் கோலிவுட்டின் பாஷன். செல்போன் என்பது தேவை என்ற நிலை தாண்டி இப்போது நம்மை அது அடிமைபடுத்திவிட்டது என்றே கூறலாம். (இரவில் படுக்கும்போது செல்லை சுவிட்ச் ஆப் செய்பவரகளையே நான் அதிசயமகாத்தான் பார்க்கிறேன்...!!)

இப்படிப் பட்ட கால கட்டங்களில், "கூவும் செல்போனின் நச்சரிப்பை அனைத்து கொஞ்சம் சில்வண்டின் சத்தத்தை கேட்போம்" என்று பாடி, அதன்படி அவர் தவறாது நடந்து கொள்வதும் நமக்கு தெரியும்.

உணவுபழக்கங்கள், உடற் பயிற்சிகள்

ஆரோக்கியமான உணவுபழக்கங்களை கூட அவர்களுக்கு கூட அவர் எத்தகைய உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று தான் பின்பற்றி பாடம் போதித்துகொண்டிருக்கிறார்.

இயந்திரமயமாக வாழ்க்கை மாறிவிட்ட இன்றைய சூழ்நிலைகளில் சத்து மிக்க இயற்க்கை உணவுகளான காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை நாம் அறவே தவிர்த்துவிட்ட நிலையில் சூப்பர் ஸ்டாரின் டயட்டில் முக்கிய இடம் பிடிப்பது காய்கறிகள், பழ வகைகளே. (சிவாஜி இருநூறாவது நாள் விழாவில், விவேக்கின் உரை ஞாபகமிருக்கிறதா?)

அது மட்டுமா தினமும் உடற்பயிற்சி செய்கிறார். நீச்சல் அடித்தல், ஸ்கிப்பிங் ஆடுதல் உள்ளிட்ட பல எளிய ஆனால் பயன் தரக்கூடிய உடற்பயிசிகளை செய்கிறார். (தளபதி தினேஷ் அண்மையில் ஒரு தொலைகாட்சி பேட்டியில் இது குறித்து கூறியிருந்தார்.)

சமீபத்தில் நடந்த ரஜினியின் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டில் கூட கேளம்பாக்கம் பண்ணையில் சூப்பர் ஸ்டாருடன் சிறிது நேரம் செலவிடும் வாய்ப்பை பெற்ற ஒருவர், சூப்பர் ஸ்டாரின் உணவு முறைகள் பற்றியும் அவர் செய்யும் உடற்பயிற்சிகள் பற்றியும் வியந்து பேசியிருந்தார்.)

பொறுப்பு மிக்க நடிகர்

தூர்தர்சன் பேட்டியிலேயே அவர் இது குறித்து தெளிவாக கூறியதும் அதன் படியே அவரது வாரிசுகள் அவரவர் விருப்பப்படியே தங்கள் துறையை தேர்ந்தெடுத்துக்கொள்ள அவர் அனுமதித்ததும் தெரிந்ததே. தங்கள் விருப்பங்களை வாரிசுகள் மீது திணிக்கும் பெற்றோர்களுக்கு மத்தியில் சூப்பர் ஸ்டார் தனித்து நிற்கிறார். அது மட்டுமா, தனது மகளின் விருப்பப்படியே அவரது வாழ்க்கை துணியை தேர்ந்தெடுக்க அனுமதித்ததும் அனைவரும் கவனிக்க வேண்டிய, பாராட்ட வேண்டிய விஷயம்.

படப்பிடிப்பு தளங்களில் பொறுப்பு மிக்க நடிகராக அவர் எப்படி நடந்துகொள்கிறார் என்று நடிகை நயன்தாரா கூறியதை நாம் பார்த்தோம்.

படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வருவது, அதற்க்கு முழு ஒத்துழைப்பு தருவது, எந்த வித பந்தாவும் இன்றி யூனிட் ஆட்களிடம் பழகுவது, அனைவரையும் மரியாதையுடன் நடத்துவது... இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.

பொறுப்பு மிக்க குடிமகன்

பொறுப்பு மிக்க குடிமகனாக தமது வருமான வரியை தவறாது கட்டும் முதல் குடிமகன் அவர். (1998 இல் அப்போதைய எதிர்கட்சி தலைவர் ஜெயலலிதாவின் வரி கட்டுவது தொடர்பான குற்றச்சாட்டுக்களை மறுத்த ரஜினி, தாம் தமது வருமான வரியை தவாராது கட்டுவதாகவும், வேண்டுமென்றால் ஜெயலலிதா ஊர்ஜிதம் செய்து கொள்ளலாம் என்றும் கூறினார்.) பாபா தயாரித்த போது தாமே முன்வந்து முன்கூட்டியே வரி கட்டி அனைவரையும் ரஜினி வியப்பிலாழ்த்தியது குறப்பிடத்தக்கது.

ஒதுங்கியிருக்கலாம் உதறியிருக்கலாம் உறங்கிவிடக்கூடாது

எந்த விஷயத்திலும் பற்றிலாமால் அவர் ஒதுங்கியிருப்பார், உதறியிருப்பார். ஆனால் ஒரு போதும் உறங்குவதில்லை. உலக விஷயங்கள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருக்கும் 'encyclopaedia' அவர். ஆனால் தமக்கு இத்துணை விஷயங்கள் தெரியும் என்று அவர் காண்பித்துகொள்ளவே மாட்டார். நிறைகுடம் என்றுமே தளும்பாது அல்லவா?

புத்தகப் பிரியர்

கூடுமானவரை மார்க்கெட்டில் வெளியாகும் தரமான நூல்களை அவர் படித்துவிடுவார். (அமெரிக்காவில் புரட்சி ஏற்படுத்தியுள்ள ஒபாமாவை பற்றிய நூலை அவர் சமீபத்தில் படித்திருக்கவேண்டும் என்பது என் கணிப்பு). நல்ல நூல்களை படிக்கும் பழக்கம் இன்றைய இளைஞர்களிடம் குறைந்துவருவது குறித்து ஒரு பத்திரிகை பேட்டியில் தமது கவலையை வெளிப்படுத்தியிருப்பார். (நண்பர் ஒருவர் அளித்த நூலை நான் ஆறு மாதமாக படித்துகொண்டிருக்கிறேன்!!)

அவர் தினமும் தியானம் செய்வது பற்றி நான் கூற வேண்டியதேயில்லை. நீங்கள் அனைவரும் அறிந்ததே.

"மூன்று மணி நேரம் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன், ஆனால் அந்த மூன்று மணி நேரமும் அவர் அடுத்தவர்கள் பற்றி என்னிடம் புறம் பேசவேயில்லை" என்று கவிஞர் வைரமுத்து சிவாஜி வெள்ளி விழாவில் கூறியது நினைவிருக்கிறதா? நம்மால் இது சாத்தியமா என்று சிறிது எண்ணிப் பார்த்தால் தெரியும் அது எவ்வளவு உயரிய பழக்கம் என்று...

இறுதியாக அவரது இறை பக்தி. தன்னையே இறைவனிடம் ஒப்படைக்கும் பக்குவம் அவரிடம் இருக்கிறது. அதனால் தான் எத்துனை பெரிய சோதனைகளும் அவருக்கு சூரியன் கண்ட பனித்துளி போல விலகிவிடுகின்றன. சந்திரமுக்சி வெள்ளிவிழாவில் இது குறித்து அவர் விரிவாக கூறியிருப்பார்.

சூப்பர் ஸ்டாரின் நற்பண்புகளை இப்படி அடுக்கிகொண்டே போகலாம். அதற்க்கு ஒரு பதிவு போதாது.

நீங்கள் இந்த பதிவில் காணும் புகைப்படம், அருணாசலம் படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் பிறந்த நாள் கொண்டாடிய பொது எடுக்கப்பட்டது (12/12/1996).

அருணாசலம் யூனிட் அவருக்காக ஸ்பெஷலாக வரவழைத்த அந்த கேக்கில் காணப்பட்ட வாசகம் என்ன தெரியுமா?

"To the Man, who is an Institution by Himself"

எவ்வளவு பொருத்தமான வரிகள்....!!!!

[END]

Tuesday, December 9, 2008

சமூக நலப் பணிகளுடன் ரசிகர்கள் கொண்டாடும் சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள்

லங்கையில் தமிழ் சகோதரர்கள் படும் துயரத்தை மனதில் கொண்டு, தமது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்றும், அதற்க்கு பதில் மக்களுக்கு பயன் தரக்கூடிய சமூக நலப் பணிகளில் ஈடுப்படும்படியும் சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களை கேட்டுக்கொண்டது தெரிந்ததே.

இதையடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ரசிகர்கள் ரத்த தான முகாம், கண் சிகிச்சை முகாம் உள்ளிட்ட மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றனர். இதை தவிர ரசிகர்கள் ஆலயங்களில் உலக அமைதிக்காக வரும் (12/12/2008) சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளன்று விஷேஷ வழிபாடுகளும், தத்தமது பகுதிகள் அன்ன தானமும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

மேற்படி ரசிகர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்கள் செய்யும் இத்தகு சமூக நல செயல்களை உங்கள் பார்வைக்கு வைக்க நமது தளம் முயற்சிக்கும்.

நன்றி,

- சுந்தர்
for Onlyrajini.com

…………………………………………………………………………………………………………………

இலவச கண் சிகிச்சை சர்க்கரை நோய் கண்டறியும் முகாம்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 59 வது பிறந்த நாளை முன்னிட்டு, நெல்லை ரஜினிகாந்த் ரத்ததான இயக்கம கண் சிகிச்சை மற்றும் சர்க்கரை நோய் கண்டரியும் முகாம் நடத்தியது. பொதுமக்கள் திரளாக பங்கேற்று பயனைடந்தனர்.

நெல்லை ரஜினிகாந்த் ரத்ததான இயக்கம், திருநெல்வேலி சிட்டி & டவர் லயன்ஸ் கிளப், லிப்ட் பவுண்டேஷன் அமைப்புகள் இணைந்து பாளையங்கோட்டை பர்க்கிட் மாநகரில் இலவச கண் சிகிச்சை மற்றும் சர்க்கரை நோய் கண்டரியும் முகாம் நடத்தியது.

நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக்குழு மருத்துவர்கள் பொது மக்களுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் 200க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.. 11 நபர்களுக்கு இலவசமாக கண்ணாடிகள் வழங்கப்பட்டது. 4 நபர்கள் அறுவை சிகிச்சைக்காக அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த முகாமிற்கு திருநெல்வேலி டவர் லயன்ஸ் கிளப் தலைவர் Ln. S. கஜேந்திரபாபு தலைமை தாங்கினார். சிட்டி லயன்ஸ் சங்கத் தலைவர் Ln. M. ஜெயமணி வரவேற்று பேசினார். லிப்ட் பவுண்டேஷன் நிறுவனர் ஜேமல்ஸ் லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவர் Ln. S.V. ஜானகிராம் அந்தோணி, மனித உரிமைகள் கழக தலைவர் திருமலை முருகன், சிட்டி லயன்ஸ் கிளப் செயலர் கதிரேசன், டவர் லயன்ஸ் கிளப் செயலர் சுதந்திர லெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமினை மனித உரிமைகள் கழக மனில புரவலர் செய்யது நவாஸ் அவர்கள் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்கள். சிட்டி லயன்ஸ் கிளப் ராஜன், டவர் லயன்ஸ் கிளப் ரிச்சர்டு ராஜ ரத்தினம், மாணவரணி ரஜினி மன்ற கண்ணன், மனித கடவுள் ரஜினி முருகன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். ஆசிரியர் ஆவுடையப்பன் நன்றி கூறினார்.

இந்த முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் லிப்ட் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் Ln. T.F. ஜோசப், நெல்லை ரஜினிகாந்த் ரத்த தான இயக்க நிர்வாகி S.A. சிகாமணி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளையொட்டி Rajinifans.com நடத்தும் ரத்த தான முகாம்

சமூக நலப் பணிகளில் முன்னோடியாக திகழும் Rajinifans.com சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளையொட்டி ரத்த தான முகாம் நடுத்துகிறது.

சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளையொட்டி Rajinifans.com ரத்த தான முகாம் நடுத்துகிறது. இந்த முகாம் முழுக்க முழுக்க www.rajinifans.com தனது சொந்த முயற்சியில் நடத்துவது. இதற்காக எந்த வித நிதியுதவியும் யாரிடமும் பெறப்படவில்லை என்பதை அது தெரிவித்துகொள்கிறது.

வருகிற டிசம்பர் 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது.

முகவரி: சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட்டில் உள்ள மவுண்ட் மெடிக்கல் சென்டரில் (முகவரி: 5/66, பட் ரோடு சந்திப்பு, செயின்ட் தாமஸ் மவுண்ட், சென்னை-18).

இந்த முகாமுக்கு டாக்டர் எம்.சச்சிதானந்தன், டாக்டர் சுபாஷிணி ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். முகாமுக்காக Rajinifans.com வடிவமைத்துள்ள பேனர்தான் இங்கே நீங்கள் பார்ப்பது.

உயரிய பாதுகாப்பு மற்றும் சுகாதாரமான முறையில் ரத்த தானம் நடைபெற மருத்துவர் குழு ஏற்பாடு செய்துள்ளது.

தலைவர் பிறந்த நாளை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் www.rajinifans.com முயற்சியில் நீங்களும் கரம் கோர்க்கலாமே…

மேலும் விவரங்களுக்கு:
http://www.rajinifans.com/others/contactus.php

ராம்கி : 9444453694
கோபி: 9894936203
கலிஃபுல்லா: 9443288198
அருள்: 9791892290
கணேஷ்: 9994739007
சந்தோஷ்: 9841752821

[END]


Saturday, December 6, 2008

"வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்" - என்ற சொல் எப்படி வந்தது? - ரஜினி விளக்கம்!!

நேற்றைய பதிவில் துக்ளக் இதழில் ரஜினி எழுதிய கட்டுரையைப் பற்றி கூறுகையில் சில கேள்விகளை வெளியிட்டு அதற்க்கு சூப்பர் ஸ்டார் அருமையான பதிலை ஒரே ஒரு கட்டுரையிலேயே ஜஸ்ட் லைக் தட் கூறியிருப்பார் என்று சொல்லியிருந்தேன்.

http://www.onlyrajini.com/?p=3252

கட்டுரையின் தொடர்ச்சியை இப்போது பார்க்கலாம்.

திருக்குறளும் கீதையும் கலந்து ரஜினி தந்த பாடம்

திருக்குறளை பற்றி உங்களுக்கு தெரியும். ஈரடியால் உலகையே அளந்த குறளை பற்றி கூறிய இடைக்காடர் என்னும் புலவர், "கடுகை துளைத்தேழ் கடலை புகட்டி குறுகத் தரித்த குறள்" என்று கூறினார். அவ்வையோ, கடுகை அல்ல அணுவை என்றார். "அணுவைத் துளைத்தேழ் கடலை புகட்டி குறுகத் தரித்த குறள்" என்றார். அதாவது அணுவை பிளப்பது மற்றும் அதன் மூலம் பெரும் சக்தி உண்டாவது பற்றி நம் புலவர்கள் சங்க காலத்திலேயே கூறிவிட்டார்கள். (Atom fission and energy). ஓகே. மேட்டருக்கு வருவோம். அத்தகைய சிறப்பு பெற்ற குறள் முழுதையும் ஒரே ஒரு கட்டுரையில் சூப்பர் ஸ்டார் தந்திருக்கிறார் என்றால் சும்மாவா?

குறள் மட்டுமா? கீதையும் அதில் அடக்கம். அது தான் மிகப் பெரும் ஆச்சரியம்!

ஒளிந்திருக்கும் பன்ச் டயலாக்குகள்

தவிர நிஜ வாழ்க்கையிலும், சினிமாவிலும் பல்வேறு காலகட்டங்களில் அவரால் உச்சரிக்கப்பட்ட பல வரலாற்று புகழ் பன்ச்கள் (இந்த தொடர் வெளியானதற்கு பல ஆண்டுகள் முன்பே கூட) இந்த கட்டுரையில் ஆங்காங்கே ஒளிந்திருக்கும். அது இன்னும் ஆச்சரியம்!!

  • நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான்; ஆனா கைவிடமாட்டான்.
  • கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது. அப்படி கிடைக்கிறது என்னிக்குமே நிலைக்காது.
  • ஆண்டவன் எல்லாருக்கு எல்லாம் கொடுக்குறதில்லை. ஏதாவது ஒரு குறை வைக்கிறான். ஏன்னா, குறையே இல்லைன்னா, நாம ஆண்டவனையே மறந்துடுவோம்.
  • உலகினில் எதுவும் நிரந்தரமில்லை. உறங்கிடும் வரையில் சுதந்திரமில்லை.
  • உன் வாழ்க்கை உன் கையில்
  • என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களே
  • தமிழக மக்கள் இதயங்கள் இரும்பாலான ஈர இதயங்கள். உள்ளை நுழைவது மிகவும் சிரமம். அப்படி ஒரு முறை நுழைந்துவிட்டால், அவ்வளவு சுலபத்தில் வெளியே வரமுடியாது.
  • நீங்க நமக்கு செஞ்ச துரோகத்தை நாம மன்னிச்சிட்டோம். ஆனா ஏழைங்களுக்கு செஞ்ச துரோகத்தை நாம் மன்னிச்சாலும் மேல இருக்குறவன்....மன்னிக்கவே மாட்டான்.
  • எல்லாம் அவனுக்கு தெரியும். அவன் பார்த்துகிட்டு இருக்கான். (மக்களை நோக்கி) தெய்வம் அவன். (ஹொகேனக்கல் மேடையில் சூப்பர் ஸ்டாரின் உரை ஞாபகமிருக்கிறதா?)

இப்படி அடுக்கி கொண்டே போகலாம். அப்புறம் இன்றும் பிரேக் விட்டுவிட்டு நாளை தான் போட முடியும். அதனால், என்னுடைய முன்னுரையை, இத்துடன் முடித்துகொள்கிறேன்.

இந்த கட்டுரையை படித்துவிட்டு, விடுபட்ட பன்ச்கள் இருந்தால் தயவு செய்து எனக்கு கூறுங்கள்.

இனி சூப்பர் ஸ்டார் எழுதிய அந்த வைர வரிகள். கட்டுரைக்கு தலைப்பை கவனியுங்கள். ஆரம்பமே அசத்தல் தான்.

குறிப்பு: கட்டுரையில் சூப்பர் ஸ்டாரின் பெயர் எந்த வித அடைமொழிகளும் இன்றி ரஜினிகாந்த் என்று மட்டும் தான் இடம்பெற்றது.

தானே சூட்டிக்கொள்ளும் பட்டத்தையே கழுதை வால் போல கூடவே அனைத்து இடங்களிலும் அரவணைத்து செல்லும் நடிகர்களுக்கு மத்தியில் மக்களாக பார்த்து சூட்டிய 'சூப்பர் ஸ்டார்' பட்டத்தை ரஜினி என்றுமே தனக்கு தானே சூடி அழகு பார்த்ததில்லை. நேற்றைய ரசிகர்கர் சந்திப்பு முதல் அவரது சொந்த தயாரிப்பான பாபா பட விளம்பரம் வரை சூப்பர் ஸ்டார் என்கின்றன வார்த்தை எங்குமே இடம்பெறவில்லை. இந்த கட்டுரையும் அதுபோலத்தான்.

…………………………………………………………………………………………………………………

"மக்கள் மனதில் இறைவன் இருக்கிறார்" - ரஜினிகாந்த்

"கஷ்டப்படுகிறவர்களுக்கு, துன்பம் அனுபவித்தவர்களுக்கு ஆண்டவன் ஒரு நாள் உதவாமற்போக மாட்டான். எப்பொழுதுமே கஷ்டப்படட்டும் என்று யாரையும் ஆண்டவன் கை விட்டுவிட மட்டான். ஆரம்பதிலிருந்து கடைசி வரை கஷ்டப்பட்டே வாழ்ந்து செத்தவர்கள் இந்த உலகத்தில் யாரும் கிடையாது. அதே போல, பிறந்த தேதியிலிருந்து இறுதிவரை சந்தோஷத்துடனே வாழ்ந்து மடிந்தவர்களும் கிடையாது. அது தன் இயற்கை என்று சொல்லும்பொது, அதில் பல அம்சங்களும் அடங்கி இருக்கும். கஷ்டம் - சுகம்; பாவம் - புண்ணியம்; நல்லவர்கள் - கெட்டவர்கள்.... என்று பல வகையான அனுபவங்களும் கொண்டதுதான் இயற்கையின் போக்கு. வாழ்க்கையில் கஷ்டதையும் ஒரளவாவது அனுபவித்தால்தான் சுகத்தின் பலன் நமக்கு முழுமையாகக் கிட்டும். நீங்கள் ஓர் ஏர் கண்டிஷ்ண்ட் ரூமிலேயே தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால், அதனுடைய அருமை அவ்வளவாகத் தெரியாது. ஆனால் சிறிது நேரம் வெயிலில் இருந்துவிட்டு, அதன் பிறது ஏ.சி.ரூமுக்குப் போனால், அப்பொழுது அதன் அருமை நன்றாகவே தெரியும்.

ஆகையால்தான், மனிதர்களின் இந்த இயல்பை அறிந்த ஆண்டவன், கஷ்டம், சுகம் இரண்டையுமே வாழ்க்கையில் சேர்த்தே வைத்திருக்கிறான். நமக்கு சுகமான அனுபவங்கள் வரும்போது நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். கஷ்டமான அனுபவங்கள் நேரிட்டால், மிகவும் வெறுத்துப்போய் விடுகிறோம்.

இப்படிப்பட்டவர்களை ஆண்டவனுக்குப் பிடிக்காது என்று நான் நினைக்கிறேன். இதனால் தான் சில பேருக்கு சில நேரங்களில் ஆண்டவனின் அருள் கிட்டுவதில்லையோ என்றுகூட எனக்கு தோன்றுகிறது. சுகத்தை மட்டும் விரும்பி ஏற்கிற மனிதன், கஷ்டம் வரும்போது அதை பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னால், அவன் இறைவனையோ, இயற்கையையோ புரிந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம்.

வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமான விஷயமல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு இன்பம் கிட்டும் பொழுது அது நிலையானது அல்ல என்ற உணர்வு நம்முள் இருந்தால், நாம் அடக்கத்துடன் அந்த இன்பத்தை அனுபவிப்போம். அதே போல், கஷ்டம் வரும்பொழுது அதுவும் நிலையானதல்ல என்று நாம் உணர்ந்து கொண்டால் அந்த கஷ்டத்தின் சுமை தாங்க முடியாமல் அப்படியே நொந்து போய் நொறுங்கிவிட மாட்டோம். வாழ்க்கையில் இரண்டும் கலந்துதால் இருக்கும். அதுதான் நல்லதும் கூட.

ஒரு விஷயத்தை நாம் அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டும். மற்ற கஷ்டங்களோடு ஒப்பிடும்போது பண கஷ்டம் - அதாவது பணம் இல்லை என்கிற கஷ்டம் பெரிய கஷ்டமே இல்லை. சின்ன வயதிலேயே நமக்கு மிகவும் வேண்டியவர்கள் இறந்து போவது, சரியான நேரத்தில் நல்ல இடத்தில் கல்யாணம் செய்து நன்றாக வாழ முடியவில்லை என்கிற நிலை; நமது குழந்தைகள் முறையாக வளரவில்லை என்ற குறை, நமக்கு மிகவும் வேண்டியவர்களிடமே ஏற்பட்டுவிடுகிற மனஸ்தாபங்கள்; நமக்கு மிகவும் பிடித்தவர்களே நம்மை ஏமாற்றி விடுகிற நிலைமை... போன்ற கஷ்டங்கள் நம்மை மிகவும் பாதிக்ககூடியவை. நான்கூட முன்பெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தது உண்டு. பணம் இருந்தால் என்ன துன்பம் வந்தாலும் தாங்கி கொண்டுவிட முடியும் என்று. ஆனால், அப்படி இல்லவே இல்லை என்பதை நாம் உணர்ந்துவிட்டேன். பணம் இல்லையே என்ற கஷ்டம் கொஞ்சம் தான் வேதனையைத் தரும். ஆனால், நான் மேலே குறிப்பிட்ட மாதிரி நிலைமைகள் தான் நமக்கு அதிக வேதனையை கொடுக்ககூடிய கஷ்டங்கள்.

பிரச்சனைகள் வரும்போது - அது பணப் பிரச்சனையோ, அல்லது மன நிலையைப் பாதிக்கக்கூடிய வேறு ஏதாவது பிரச்சினையோ - என்ன சம்பவங்கள் நடந்தாலும், அதனால் உடனே மனம் உடைந்து அந்தக் கஷ்டத்தின் சுமையைத் தாங்க முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டு வாழ்வதில் அர்த்தமில்லை. அந்த கஷ்டத்தை தீர்க்க, உடனடியாக முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும். எப்படி தீர்வு காண முடியும் என்று யோசிக்க வேண்டும். அந்த பிரச்சினை எப்படி தீர்வு காண முடியும் என்று யோசிக்க வேண்டும். அந்த பிரச்சினை எப்படி யோசிக்க வேண்டும். அந்த பிரச்சினை எப்படி உருவானது? ஏன் உருவானது? யாரால் உருவானது? அதில் நம் தவறு என்ன? என்றெல்லாம் தீர ஆராய்ந்தால், பிரச்சினை உருவானதற்கான காரணம் தானாகப் புரிந்துவிடும். தவறு நம்முடையதாக இருந்தால், மன்னிப்புக் கேட்க வேண்டும். மற்றவர்களுடைய்தாக இருந்தால், அதை அவர்களுக்கு புறிய வைக்க வேண்டும். ஒரு பொய் சொன்னால் அதை மறைப்பதற்கு நூறு பொய்கள் சொல்ல வேண்டி வருவது போல - ஒரு கஷ்டத்தை நிவர்த்தி செய்வதில் உடனே கவனம் செலுத்தாவிட்டல், அதைத் தொடர்ந்து மேலும் மேலும் பல கஷ்டங்கள் உருவாகிவிடும்.

ஒன்றை மட்டும் திட்டவட்டமாகச் சொல்கிறேன். ஆண்டவன் எங்கேயும் இல்லை. மக்களுடைய இதயத்தில் தான் - மனதில் தான் இருக்கிறார். நான் எத்தனையோ வெளி நாடுகளைச் சுற்றிப் பார்த்திருக்கிறேன். உலகத்தின் பல பாகங்களையும் சுற்றி வந்திருக்கிறேன். தமிழக மக்களுக்கு இருக்கிற மனித நேயம், கருணை, அந்த மனித இயல்பு வேறு யாருக்கும் எங்கேயும் கிடையாது. அதனால் தான் நம்முடைய தமிழ் நாட்டை 'வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்' என்று சொல்கிறார்கள்.

ஒருவனிடம் திறமை இருந்து, நல்ல எண்ணம், நல்ல மனிதத்தன்மையும் இருந்தது என்று சொன்னால், அவனுடைய மொழி பற்றியோ, ஜாதி பற்றியோ, எதைப் பற்றியும் தமிழக மக்கள் கவலைப்பட மாட்டார்கள். ஆகவே இந்த மாதிரி உயர்ந்த குணம் உள்ள மக்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற வரைமுறை இருக்க வேண்டும் இல்லையா? இவர்களுக்கு ஏதாவது கெடுதல் செஞ்சா, துரோகம் செஞ்சா - அவர்களை ஆண்டவன் தண்டிக்காமல் விடவே மாட்டன். வினை விதைத்தவன் வினை அறுப்பான். இது உறுதி."

- நன்றி : துக்ளக்

[END]

Friday, December 5, 2008

பிரபுதேவாவின் மகன் திடீர் மரணம்; ரஜினி நேரில் சென்று அஞ்சலி

பிரபல நடிகரும் இயக்குனருமான பிரபு தேவா ரம்லத் என்கின்ற பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு விஷால், ரிஷி தேவா, மற்றும் ஆதித் தேவா என மூன்று மகன்கள் உண்டு.

மூத்தவன் விஷாலுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கான்சர் கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சையை அளித்துவந்தார் பிரபு தேவா. அவன் மீது மிகவும் பாசம் வைத்திருந்தார். அண்மையில் சுவிட்சர்லாந்தில் நடந்த வில்லு படத்தின் படப்பிடிப்பிற்கு மகனையும் அழைத்துக்கொண்டு சென்றிருந்தார் பிரபு தேவா. திரும்பி வந்ததும் மகன் சுகவீனமடைந்தான். இதையடுத்து அவனுக்கு தீவிர சிகிச்சையளித்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 3.30 க்கு விஷால் மரணமடைந்தான்.

ரஜினி, கமல் அஞ்சலி

மகனது உடலைப் பார்த்து பிரபு தேவாவும் அவரது மனைவியும் கதறி அழுதனர். ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்தவர்கள் முக்கியப் பிரமுகர்கள், நடிகர் நடிகையர் பிரபு தேவாவின் வீடிற்கு சென்று அவரது மகனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

சிறுவன் விஷால் உடல் நேற்று மாலை 3.00 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

சூப்பர் ஸ்டாரின் தீவிர விசிறி

சிறுவன் விஷால், சூப்பர் ஸ்டாரின் தீவிர விசிறி என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டு நடைபெற்ற பிரபு தேவாவின் சகோதரர் நாகேந்திர பிரசாத்தின் திருமண நிகழ்ச்சிக்கு ரஜினி வந்த போது, ஓடி வந்து பிரியமுடன் அவருடன் புகைப் படமெடுத்து கொண்டான். சிறுவனின் மரணம் ரஜினியை மிகவும் பாதித்தது. ஆகையால் நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, பிரபு தேவாவிற்கு ஆறுதல் கூறினார் ரஜினி.

தங்கள் மகனை இழந்து வாடும் பிரபுதேவாவின் குடும்பத்தாருக்கு நம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். விஷாலின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்வோம்.

[END]

எந்திரனில் கிச்சு கிச்சு மூட்டப்போகும் காமெடிப் பட்டாளம்

திட்டமிட்டபடி, ஸ்மூத்தாக போய் கொண்டிருக்கிறது எந்திரன் படப்பிடிப்பு. சென்னையின் முக்கிய இடங்களில் காதும் காதும் வைத்தாற்போல படப்பிடிப்பு நடந்து வருகிறது. லொக்கேஷன் பற்றி தெரிந்துகொண்டு அங்கு யாரும் செல்வதற்கு முன், படப்பிடிப்பு முடிந்து விடுகிறது.

எனக்கு கிடைத்த தகவல்களை உங்களுக்கு தெரிவிக்கிறேன். உண்மை விபரங்கள் சற்று முன்னர் பின்னர் இருக்கலாம்.

சென்னை சுற்றி நடக்கும் எந்திரன் படப்பிடிப்பு

சென்னையில் கிழக்கு கடற்க்கரை சாலை, அடையாரில் உள்ள ஒரு ப்யூட்டி பார்லர் மற்றும் தி.நகரில். உள்ள ஆலூக்காஸ் ஜூவல்லரி ஆகியவற்றில் எந்திரன் படப்பிடிப்பு நடந்தது. இதையடுத்து, சமீபத்தில் சென்னை கடற்கரை செவாலியே சிவாஜி சிலை அருகே உள்ள டி.ஜி.பி. அலுவலகம் அருகாமையில் செட் போடப்பட்டு ரகசியமாக படப்பிடிப்பு நடந்தது. அடுத்து தண்டையார்பேட்டையில் உள்ள பாரத் பெட்ரோலியம் கிடங்கில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயற்க்கை எழில் கொஞ்சும் டாப்ஸ்லிப்பில் எந்திரன் படப்பிடிப்பு

இதை முடித்துவிட்டு, எந்திரன் யூனிட் டாப்ஸ்லிப் பயணமாகிறது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள ஆனைமலையில் உள்ள ஒரு சுற்றுலா தலம்தான் டாப்ஸ்லிப். மூங்கில் காடுகள், யானைகள மற்றும் பறவைகள் சரணாலயத்துக்கு பெயர் பெற்ற இடம் இது. இயற்க்கை எழில் கொஞ்சும் பசுமையான காடுகள், மர வீடுகள் இதன் தனி அழகு.

மழை பெய்த பிறகு, பசுமை பூத்துக்குலுங்கும் தருணத்தில் டாப்ஸ்லிப் மிகவும் அழகாக இருக்கும்.

தற்போது தமிழகத்தில் பரவலாக பெய்த கன மழையையடுத்து, நீர் நிரம்பி டாப்ஸ்லிப் பகுதியில் இயற்க்கை எழில் கொஞ்சுகிறதாம். எனவே ஷங்கரால் உடனே லொக்கேஷன் ஒ.கே. செய்யப்பட்டுவிட்டது. சென்னை ஷெட்யூல் முடிந்த பிறகு டாப்ஸ்லிப் பயணமாகிறது எந்திரன் யூனிட்.

'அம்மாடியோவ்' - காஸ்ட்யூம் செலவு!!!

சூப்பர் ஸ்டாரையே 'அம்மாடியோவ்' என்று சொல்லவைத்திருக்கிறது படத்திற்கான காஸ்ட்யூம் செலவு. அதற்க்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை மட்டுமே கிட்டத்தட்ட் ஐந்து கோடி ரூபாயாம். ஒரு படமே எடுத்துவிட கூடிய தொகை என்பதால், சூப்பர் ஸ்டார் மிகவும் தயங்கினாராம். இருப்பினும் ஷங்கர் மேல் உள்ள நம்பிக்கையின் காரணமாக சூப்பர் ஸ்டார் 'Go ahead' என்று பச்சைக்கொடி காட்டியதாக தகவல்.

காமெடி செய்யப்போவது யாரு.... நம்ம சூப்பர் ஸ்டாரைப் பாரு...!!

ரசிகர்களிடம் இருக்கும் முக்கிய கேள்வி, எந்திரனில் காமெடியை கையாளப் போவது யார்என்பது தான்...

சூப்பர் ஸ்டாருக்குள் இருக்கும் ஒரு அருமையான காமெடி நடிகரை மறந்துவிட்டீர்களா என்ன? பெரும்பாலான காமெடி காட்சிகளை சூப்பர் ஸ்டாரே கவனித்து கொள்வார். ரோபோவாக நடிக்கும் சூப்பர் ஸ்டாரே நம்மை சிரிக்க வைக்கும் பணியையும் பார்த்துக்கொள்வார் என்று தெரிகிறது. (ப்யூட்டி பார்லர் சீன் ஞாபகம் வருகிறதா? - வேலையைப் பாரும்மா, இது ஒரு ரோபோதான்!!)

இருந்தாலும் எந்திரனுக்கு துணையாக நம்மை கிச்சு கிச்சு மூட்ட மேலும் சில காமெடியன்களை களம் இறக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து, கருணாஸிடம் பேச்சுவார்த்தை நடந்து, ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டார். மனிதர் அட்வான்ஸ் கூட வாங்கியாச்சு. பாபாவுக்கு அடுத்து சூப்பர் ஸ்டாருடன் மீண்டும் இணைகிறார் லொடுக்கு பாண்டி.

கருணாஸை தவிர எந்திரனில் கலகலக்கப் போகும் மற்றொருவர் லொள்ளு சந்தானம். எந்த நேரமும் இவரும் ஒப்பந்தம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. குசேலனில் நம்மை நற நறக்க வைத்தவர் எந்திரனில் கிச்சு கிச்சு மூட்டுவார் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம். பார்க்கலாம்.

குறிப்பு:

சூப்பர் ஸ்டாரைப் பற்றியும் அவரது படங்கள் பற்றியும் உங்களுக்கு சரியான தகவல்கள் தர rajinifans.com, envazhi.com மற்றும் நமது onlyrajini.com இருக்கும்போது பொய்களையே எழுதிக் குவித்து வரும் ரஜினி விரோத தளங்களான கப்ஸா வூட்ஸ், சிஃபி ஆகிய தளங்களை முழுமையாக புறக்கணியுங்கள்.

வலைத்தளம் நடத்துவதன் மூலம் ஏராளமாக சம்பாதிக்கும் மேற்படி தளங்கள் தங்கள் வாசகர்களுக்கு உண்மை செய்திகளையே தரவேண்டும் என்று நினைக்காதது பெரிய சோகம். ஒரு காலத்தில் தரமான செய்திகளை மட்டுமே (நம் எதிர்ப்பு செய்தியாக இருந்தாலும்) அளித்து வந்த சிஃபி தற்போது தரத்தில் மிகவும் கீழே இறங்கி கப்ஸா வூட்ஸுடன் தரமற்ற செய்திகளுக்கு போட்டிபோடுகிறது. மேலும் சூப்பர் ஸ்டார் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை உள்ளபடி தெரிவிக்காமல் தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களையே வெளியிட்டு வக்கிரத்தை காண்பித்து வருகின்றனர். உங்கள் பொன்னான நேரத்தை மேற்படி தளங்களுக்கு சென்று வீணடிக்கவேண்டாம்.

துக்ளக்கின் 'முதல்வர்' செண்டிமென்ட்டும், ரஜினியின் கட்டுரையும்

நம்மில் பலருக்கு கீழ்கண்ட சந்தேகங்கள் அடிக்கடி தோன்றுவது உண்டு:

விடை சிலருக்கு தெரிந்திருக்கலாம். சிலருக்கு தெரியாம லிருக்கலாம். தெரிந்து கொள்ள இதோ ஒரு வாய்ப்பு.

  • நெருக்கடியான காலகட்டங்களில் சூப்பர் ஸ்டாரின் மனநிலை எப்படியிருக்கும்?
  • தமக்கு ஏற்படும் கடும் சோதனையை பற்றி அவர் என்ன நினைப்பார்?
  • அதே போல மிகப் பெரிய வெற்றிகளை அவர் குவிக்கும்போதும் அவர் மன நிலை எப்படி இருக்கும்?
  • புகழுரைகள கேட்க நேரிடும்போது அதை எப்படி அவர் எடுத்துகொள்கிறார் ?
  • வாழ்க்கையில் நாம் படும் கஷ்டங்களைப் பற்றி அவர் பார்வை என்ன?
  • பணக் கஷ்டத்தை மீறி ஏதாவது கஷ்டம் உண்டா?

இவ்வாறு எனக்குள் அடிக்கடி கேட்டுக்கொள்வதுண்டு. அதற்கான விடையை இதோ சூப்பர் ஸ்டாரே தருகிறார்.

அது மட்டுமா...

  • இறைவனை யாருக்கு பிடிக்காது?
  • சுகமும் துக்கமும் வாழ்க்கையில் மாறி மாறி வருவது ஏன்?
  • "வந்தாரை வாழவைக்கும் தமிழகம்" என்று ஏன் கூறுகிறார்கள்?
  • தமிழர்கள் யாருக்கு தங்கள் இதயத்தில் இடம் கொடுப்பார்கள்?

இது போன்ற கேள்விகளுக்கும் தலைவர் சும்மா 'நச்' 'நச்' என்று ஒரு கட்டுரையில் பதிலளித்திருக்கிறார்.

எங்கே... எப்படி?

1996 ஆம் ஆண்டு துவக்கத்தில் - துக்ளக் இதழில் - "அந்த ஐந்து விழாக்கள்" என்னும் தலைப்பில் ரஜினி ஒரு தொடர்கட்டுரை எழுதினார்.

சராசரி மனிதனுக்கு ஏற்படும் கஷ்டங்கள் குறித்த அவரது பார்வை மிகவும் அற்புதம். தவிர மனிதனுக்கு பணக் கஷ்டத்தை விட அதிக வேதனை தரக்கூடியது எதுவென்றும் பட்டியலிட்டிருக்கிறார். பிரச்னைகளை பற்றி மட்டும் அலசாமல் அதற்க்கு தீர்வு சொல்லும் பண்பும் ரஜினிக்கு இருக்கிறது என்று நான் முன்பே சுட்டிக் காட்டியிருந்தேன். இதோ இந்த கட்டுரையிலும் நம் பிரச்னைகளை எப்படி நாம் தீர்த்துகொள்வது என்று கூறியிருக்கிறார். அன்றாடம் ஆயிரத்தெட்டு பிரச்னைகளில் சிக்கித்தவிப்பவர்களுக்கு மிக நல்லதொரு வழியை காட்டியிருக்கிறார் என் குரு ரஜினிகாந்த் அவர்கள். (படியுங்கள்... நீங்களும் அவரை இப்போதே குருவாக ஏற்றுகொள்வீர்கள்).

எனக்கிருக்கும் வியப்பெல்லாம் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பே அவருக்கு இத்தகைய ஒரு முதிர்ச்சி இருந்ததென்றால் இப்போது அவர் எத்துனை பக்குவப்பட்டிருப்பார் என்று எண்ணும்போது உண்மையில் என்னால் வியப்பை அடக்கமுடியவில்லை.

தலைவா, நீ அரியனை ஏற தாமதிக்கும் ஒவ்வொரு கணமும், இந்த நாட்டு மக்களுக்கு பேரிழப்பு....!!

துக்ளக்கும் தமிழக முதல்வர்களும்

சரி, இந்த தொடர் துக்ளக்கில் ஆரம்பித்த வரலாறு உங்களுக்கு தெரியுமா?

துக்ளக்கிற்கு ஒரு சிறப்பு உண்டு. துக்ளக்கில் தொடர் எழுதுபவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுவிடுவார்கள். அப்படி ஒரு ராசி அந்த பத்திரிக்கைக்கு உண்டு.

துக்ளக்கில் தொடர் எழுதி அதற்க்கு பிறகு தமிழக முதல்வரானவர்கள் இருவர்: ஒருவர் எம்.ஜி.ஆர், மற்றொருவர் ஜெயலலிதா. சூப்பர் ஸ்டார் விஷயத்தில் இந்த செண்டிமெண்ட் கொஞ்சம் தாமதமாகிறது என்று நினைக்கிறேன். அவ்வளவுதான்.

இந்த தொடரை சூப்பர் ஸ்டார் தாமாகவே மனமுவந்து எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்க்கு காரணம் முதல்வராகும் ஆசை அல்ல. சோ மீது அவர் கொண்ட பிரியம்.

சோவை நச்சரித்த அவரது ஊழியர்கள்

1995-1996 காலகட்டங்களில் தி.மு.க. - த.மா.கா. கூட்டணியை உருவாக்கி தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்களுள் சோவும் ஒருவர். ஏற்கனவே அவர் ரஜினிக்கு நெருங்கிய நண்பர்தான் என்றாலும், அந்த சூழ்நிலையில் ரஜினியை அடிக்கடி சந்திக்கும் பொன்னான வாய்ப்பை அவர் பெற்றார். ஆகையால் முன்னெப்போதையும்விட அவர்களது நட்பு ஆழமாக மாறியது. இந்த சூழ்நிலையில் சோவை அவரது அலுவலக ஊழியர்கள் "நீங்கள் என் ரஜினியிடம் உங்கள் நட்பை பயன்படுத்தி நம் இதழுக்கு கட்டுரை எழுதித்தருமாறு கேட்கக்கூடாது?" என்று நெருக்க ஆரம்பித்தனர். ஆனால் சோவோ, "எனக்கு அவரிடம் உள்ள நட்பை இப்படி சுயநலத்துக்காக பயன்படுத்த நான் விரும்பவில்லை. அவராக கேட்கட்டும் பார்க்கலாம்," என்று கூறி சமாளித்துவந்தார்.

சோவிடம் ரஜினி கேட்ட வாய்ப்பு

இதற்க்கிடையே ரஜினியாகவே சோவிடம் ஒரு நாள், "என்னிடம் கட்டுரை எழுதித்தருமாறு கேட்கவே மாட்டீர்களா?" என்று கேட்டுவிட்டார். சூப்பர் ஸ்டார் இப்படி சோவிடம் கேட்கும் சமய்த்தில் அவருக்கு இந்த துக்ளக் செண்டிமெண்ட் பற்றியெல்லாம் எதுவும் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

"உங்களிடம் நான் கொண்டுள்ள நட்பை இந்த விடத்தில் பயன்படுத்திக்கொள்ள நான் விரும்பவில்லை. நீங்களாகவே கேட்டால் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். வேறொன்றுமில்லை. தாராளமாக எழுதிக்கொடுங்கள்" என்று சோ கூற, சூப்பர் ஸ்டார் இப்படியாக தொடர் எழுதலானார்.

அந்த தொடரின் ஒரு பாகம் தான் இது. வாழ்க்கை, தனது வெற்றி, தோல்வி, இவற்றை பற்றிய தனது கண்ணோட்டங்களை அதில் சூப்பர் ஸ்டார் சுவைபட கூறியிருந்தார். தவிர தனக்கும் ஜெவுக்கும் மோதல் ஏற்பட்ட முழு காரணங்களையும் சூழ்நிலைகளையும் அதில் விளக்கியிருந்தார். கிட்டத்தட்ட மூன்று மாதத்திற்கு அந்த கட்டுரை தொடர்ந்தது. அந்த கட்டுரையை அப்படியே எடுத்து நாளிதழ்கள் சுவையான் தலைப்புகளிட்டு வெளியிட்டு வந்தன.

கட்டுரை குறித்து சோ எழுதிய முன்னுரையில், "மக்களுக்கு பயன் தரும் கட்டுரைகள் ஜனரஞ்சகமாக இருப்பதில்லை. ஜனரஞ்சகமாக இருக்கும் கட்டுரைகள் மக்களுக்கு பயன் தருவதில்லை. ஆனால் ரஜினி எழுதும் இந்த தொடர் நிச்சயம் ஜனரஞ்சகமாக இருக்கும், உங்களுக்கும் பயன் தரும் விதத்திலும் இருக்கும்!" என்று கூறியிருந்தார்.

சூப்பர் ஸ்டார் எழுதிய அந்த வைர வரிகள்:

கோவிச்சிக்காதீங்க... கண்டிப்பா நாளைக்கு போட்டுடுறேன்... (ஹி...ஹி...!!)

- சுந்தர்

Thursday, December 4, 2008

ரஜினி ஏன் நூல் வெளியீட்டு விழாவிற்கு செல்லவில்லை?

'ரஜினி பேரக் கேட்டாலே' நூலின் பிரதியை சூப்பர் ஸ்டாரிடம் நேரில் அளித்து வாழ்த்து பெறுவதற்காக திரு.எஸ்.பி.முத்துராமனுடன் நூலை எழுதிய டாக்டர் காயத்ரி மற்றும் அவரது கணவர் திரு.ஸ்ரீகாந்த் ஆகியோர் சூப்பர் ஸ்டாரை காண ராகவேந்தரா மண்டபம் சென்றிருந்தனர்.

சூப்பர் ஸ்டாரின் லேட்டஸ்ட் தோற்றம்

எந்திரன் படப்பிடிப்பில் இருக்கும் சூப்பர் ஸ்டார் இப்போது எத்தகைய தோற்றத்தில் இருப்பார் என்று அறிந்து கொள்ளும் என்னும் ஆவல் எனக்கு எழுந்தது. இந்த புகைப்படத்தின் மூலம் அதற்க்கு விடை கிடைத்திருப்பது மகிழ்ச்சி. எத்தகைய தோற்றத்தில் இருந்தாலும் சூப்பர் ஸ்டார் வசீகரித்துவிடுவார் என்பதற்கு இது சாட்சி.

இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு சூப்பர் ஸ்டார் என் போகவில்லை என்று சிலர் கேள்வி எழுப்பினார்கள். இதற்க்கு மட்டுமல்ல ஆங்கில நூல் வெளியீட்டு விழாவிற்கு கூட அவர் செல்லவில்லை.

காரணம், அவர் சென்றால் அவருக்கு முக்கியத்துவம் அதிகரித்து நூலை எழுதிய டாக்டர் காயத்ரிக்கு கிடைக்க வேண்டிய முக்கியத்துவம் கிடைக்காமல் போகலாம். அதுமட்டுமின்றி, தன்னை பற்றிய புகழுரைகளை தானே அமர்ந்து கேட்பதை ரஜினி எப்போதும் விரும்புவதில்லை. அந்த விழாவிற்கு அவர் வந்திருந்தால், வந்திருந்த அனைவரும் ரஜினியை புகழ்ந்து அவரது கவனத்தை ஈர்ப்பதிலேயே தங்கள் உரையை பயன்படுத்தியிருப்பார்கள். அதை தவிர்க்கவே அவர் செல்லவில்லை.

தவிர, இதற்க்கு முன்பு கூட ரஜினியை பற்றிய நூல் ஒன்றை காலம் சென்ற ஜி.கே. மூப்பனார் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டார். அதற்க்கு கூட ரஜினி செல்லவில்லை. தனக்கு தானே புகழ் மாலை சூட அவர் என்றும் விரும்புவதில்லை என்பதற்கு இதுவே சான்று.

இதுவே சூப்பர் ஸ்டாருக்கு பதில் வேறொரு நடிகராக இருந்திருந்தால், தமக்கு தாமே பட்டங்கள் சூட்டிக்கொள்ளும் தலைவர்களைப் போல பல நகைச்சுவை காட்சிகளை இத்தகு வெளியீட்டு விழாவில் அரங்கேற்றியிருப்பர்.

குறிப்பு: பின்னணியில் இருக்கும் ராகவேந்திரர் படத்தை கவனித்தீர்களா? தங்களுக்காக க்ளோசப் ஷாட்டில். (வேறொரு சந்தர்ப்பத்தில் எடுத்தது.)

Rajni impressed

A smiling 'Super Star' Rajnikanth was all praise for Dr Gayathri Srikanth, who along with her husband called on the actor in Chennai after the successful launch of the Tamil version of Rajnikanth's biograph 'Rajni Pera Ketalae'.

The actor made anxious enquiries about the mega event, which saw the release of the book amidst popular celebrities. The couple were accompanied by veteran director S P Muthuraman, who has rendered 25 hits with Rajnikanth playing the hero.

Rajnikanth expressed his confidence that her Tamil book too would rock just like the English version, which was released a few months ago..

[END]

Tuesday, December 2, 2008

ரஜினியின் அரசியல் பிரவேசம்: தமிழக அரசியல் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

சில மாதங்களுக்கு முன்பு, ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து வினோ envazhi.com ல் சில முக்கியஸ்தர்களின் கருத்துக்களை கேட்டு அதை வெளியிட்டிருந்தார். பெரும்பாலானவர்கள், இன்றைய அரசியலுக்கு ரஜினி நிச்சயம் தேவை என்று அதில் கூறியிருந்தனர்.

அதே போல தற்போது கோகுலம் கதிர் என்னும் மாத இதழ் பல அரசியல் தலைவர்களை ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்துக்களை கேட்டு வெளியிட்டிருக்கிறது.

பல்வேறு கட்சித் தலைவர்கள் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து என்ன கருதுகிறார்கள் என்று இதன் மூலம் நமக்கு ஓரளவு தெரிகிறது. கட்டுரைக்கு இந்த இதழ் கொடுத்திருக்கும் முன்னுரையை கவனியுங்கள். கட்டுரையை விட அது சுவாரஸ்யமானது.

[END]

"ரஜினி சம்மதித்தால் அவரை திருமணம் செய்துகொள்ளத் தயார்!!" - பாலிவுட் நடிகை பரபரப்பு அறிவிப்பு

கிணற்றுத் தவளைகளும் சூப்பர் ஸ்டாரும்

தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டாருக்கு எந்தளவு செல்வாக்கு இருக்கிறதோ அந்தளவு வெளிமாநிலங்களிலும் இருக்கிறது. இங்கிருக்கும் கிணற்று தவளைகளை உறுத்தும் ஒரே விஷயம் அதுதான். அந்த உறுத்தலின் வெளிப்பாடுதான் அவருக்கெதிரான அவர்களது அசைவுகள்.

கேரளா, ஆந்திரம், கர்நாடகா, பம்பாய், டில்லி, மற்றும் பல வட மாநிலங்கள், இண்டு இடுக்கில் கூட இருக்கும் அயல்நாடுகள் இப்படி எங்கெங்கு பார்த்தாலும் பறப்பது ஒரே கொடி - ரஜினி கொடிதான்.

சுருக்கமாக சொல்லப்போனால் தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் நிச்சயம் ரஜினிக்கு தனி இடம் உண்டு. அந்தளவு தமிழர்கள் இதயத்தை கட்டி போட்டிருக்கிறார் ரஜினி. அதே சமயம் அந்த இடங்களில் இருக்கும் மற்ற மாநிலத்தவர்களையும் அதே அளவு அவர் வசியப்படுத்தியிருக்கிறார் என்பது தான் ஆச்சரியத்திற்குரிய விஷயம்.

(உடனே குசேலன் தோல்வி எப்படியாம் அது இதென்று புள்ளி விபரங்கள் வேண்டாம். 2008 இங்கிலாந்து பாக்ஸ் ஆபிசில் 'தோல்விப்படம்' என்று முத்திரை குத்தப்பட்ட குசேலன் எப்படி இராண்டாம் இடம் பிடித்தது என்று யோசித்துப் பாருங்கள். மற்றவர்களின் வெற்றி பட வசூல், நம் தோல்வி படம் என்று கூறப்படும் படத்தின் வசூலுக்கு இணையாக இருக்கு. உதாரணத்துக்கு கில்லி வசூல் - 25 கோடி. படு தோல்வி என்று மீடியா எழுதித் தீர்த்த பாபா வசூல் - 25 கோடி.)

நான் ஸ்டாப்பாக போய்கொண்டிருக்கும் எந்திரன்

எந்திரன் படப்பிடிப்பு ஐஸ்வர்யா ராயால் அவ்வப்போது தடைபடுகிறது என்று புளுகு மூட்டைகளை அவிழ்க்கின்றன மீடியாவில் சில விஷம சக்திகள். எந்திரன் படப்பிடிப்பை பொறுத்தவரை திட்டமிட்டபடி எல்லாம் பக்காவாக போய்கொண்டிருக்கிறது. மழையால் செட் பாதிக்கப்பட்டபோது கூட படப்பிடிப்பு நிறுத்தப்படாமல், அலுக்காஸ் ஜூவல்லரியில் அது பாட்டுக்கு நடந்துகொண்டிருந்தது. (மர்மயோகி ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுவதை பொறுக்க முடியாத சில வைத்தெரிச்சல் பேர்வழிகள் இப்படிப்பட்ட வக்கிர செய்திகளை பரப்புகின்றனர்.)

மற்றபடி ஐஸ்வர்யா ராய் எந்திரனில் முழு ஈடுபாட்டுடன் நடித்து வருகிறார். பாலிவூட் ஹிரோயின்களை பொறுத்தவரை சூப்பர் ஸ்டாருடன் நடிப்பதை பெருமையான, பாக்கியமான விஷமாகத்தான் கருதுகிறார்கள். ஐஸ்வர்யா ராய் கொஞ்சம் லேட். அவ்ளவுதான். மற்றபடி அங்கிருக்கும் முன்னணி ஹீரோயின்கள் அனைவரும் சூப்பர் ஸ்டாருடன் ஒரு படத்திலாவது நடிக்க ஆவலுடன் தான் உள்ளனர்.

பாலிவுட் நடிகைகள் மத்தியில் ரஜினிக்கு போட்டி

சமீபத்தில் சென்னை வந்திருந்த பிரியங்கா சோப்ரா, "ஒரே நேரத்தில் ரஜினி மற்றும் ஜேம்ஸ் பாந்து ஆகியோருடன் நடிக்க வாய்ப்பு வந்தால் யாரை தேர்ந்தெடுப்பீர்கள்?" என்ற கேள்விக்கு "ஜேம்ஸ் பாண்டைவிட ரஜினியுடன் நடிப்பதற்கு தான் முக்கியத்துவம் தருவேன்" என்று கூறினார். ஆங்கில செய்தித் தாள் ஒன்றில் வெளியான தகவல் இது. பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர பாளிவூடில் முன்னணி நட்சத்திரம் அவர்.

பிரியங்காவை தொடர்ந்து தற்போது ராக்கி சாவந்த் ரஜினியின் புகழை பாடியிருக்கிறார். ஆனால் இவர் ஒரு படி மேலேயே சென்று, "ரஜினியை அவர் சம்மதித்தால் திருமணம் செய்து கொண்டு இரு ஆண்டுகளாவது குடும்பம் நடத்துவேன்" என்று காமெடி கலந்த சீரியஸாக கூறியிருக்கிறார். (இணைக்கப்பட்ட கடிங்கில் அவரது கேள்வி பதிலை காண்க). மும்பையில் சிவாஜி முதல் நாள் முதல் காட்சிக்கே இவர் வந்து பெரிய அளப்பரையே பண்ணிவிட்டார். பல வட இந்திய சேனல்களில் ரஜினி பற்றி அருமையான பேட்டிகள் அளித்திருக்கிறார்.

இந்த மேற்கூறிய செய்திகளை மிக்ஸ் செய்து வேறு சில விஷயங்களை சேர்த்து இன்றைய மாலை மலரில் தனிச் செய்தியாக போடச் செய்தேன். ரஜினியை பற்றி அவதூறு பரப்பிவரும் சிலருக்கு இதன் மூலம் பதில் சொல்ல முடிந்தது மகிழ்ச்சி.

இன்றைய காலை DC யில் வந்த கேள்வி-பதில் உங்கள் பார்வைக்கு.

Her craze for Rajinikanth
Oh! I adore him and wish I could marry him if he permits. He is a charming person. Though he has got grown up daughters, he still looks so young, handsome and stylish in his movies.

So you have shifted interest from marrying Salman to Rajini?
No no! Salman is different. This is more of a ‘contract marriage’ for one or two years maybe more.

Deccan Chronicle 01/12/08

[END]

Monday, December 1, 2008

"ரஜினி பேரக் கேட்டாலே..." - புத்தக வெளியீட்டு விழாவில் நம் வலைத்தளம் வெளிப்படுத்திய சமூக அக்கறை

டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் எழுதிய "ரஜினி பேரக் கேட்டாலே..." நூலின் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சவேரா ஹோட்டலில் வி.ஐ.பி.க்கள் மற்றும் நட்சத்திரங்கள் புடை சூழ இனிதே நடைபெற்றது.

நாம் வைத்த வேண்டுகோள்

முன்னதாக நேற்று காலை நூலை எழுதிய டாக்டர் காயத்ரிக்கு நாம் ஒரு வேண்டுகோள் வைத்தோம். அதாவது, மும்பை தீவிரவாதம் மற்றும் தமிழக மழை வெள்ளத்தால் உயிர் நீத்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்திவிட்டு நிகழ்ச்சியை ஆரம்பிக்க வேண்டும் என்று. அவர்களும் கண்டிப்பாக அதை நாம் செய்யவேண்டும் என்று உடனே என் கோரிக்கைக்கு இசைந்தார்கள். சொன்னதைபோலவே மாலை மௌன அஞ்சலி செலுத்தவிட்டுதான் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சியை தொகுத்து வழகிய பாஸ்கி, "இன்று காலை onlyrajini.com லிருந்து ஒரு வேண்டுகோள் வந்தது. நிகழ்ச்சி துவங்கும் முன் மும்பை தீவிரவாதம் மற்றும் மழை வெள்ளத்தால் மரணமடைந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தவேண்டும் என்று. தற்போது உயிர் நீத்த சகோதர சகோதரிகளுக்காக நாம் அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்துவோம்" என்று அறிவித்து அதன் படியே அஞ்சலி செலுத்தப்பட்டது.

சமூக அக்கறையை வெளிப்படுத்த நமக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திகொடுத்த டாக்டர் காயத்ரி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

விழாவிற்கு வந்திருந்த பெரும்பாலான வி.ஐ.பி.க்கள் எந்த வித பந்தாவும் இன்றி சகஜமாக நடந்துகொண்டனர். குறிப்பாக நடிகர் ஸ்ரீகாந்த், கீர்த்தி சாவ்லா, சந்தியா ஆகியோர்.

சுட்டிக்காட்டிய எஸ்.பி.எம். அவர்கள்

திரு.எஸ்.பி. முத்துராமன் அவர்கள் பேசும்போது இதை சுட்டிகாட்ட தவறவில்லை. "இங்கு நல்லவற்றுக்கு அடையாளமாக திகழ்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். அவர்கள் சமூக அக்கறை மிக்கவர்கள் என்று இங்கு மற்றொருமுறை நிரூபித்துவிட்டார்கள். அஞ்சலி செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்ட ரசிகர்களுக்கு என் நன்றி."

நம்மை மறக்காது குறிப்பிட்ட டாக்டர் காயத்ரி

இறுதியாக நன்றி உரையாற்றிய டாக்டர் காயத்ரி, "இந்த நூலிற்கு தேவையான புகைப்படங்கள் கொடுத்து உதவிய www.onlyrajini.com வெப்சைட்டை சேர்ந்த சுந்தர் அவர்களுக்கு என் நன்றி." என்று நம்மை மறக்காமல் குறிப்பிட்டார். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

அதே போல், நூலில் புகைப்படங்கள் உள்ள பக்கங்களின் தொகுப்பில் "புகைப்படங்கள் உதவி: www.onlyrajini.com" என்று நம்மை குறிப்பிட்டுள்ள பதிப்பாளர் அஜய் மேகோவுக்கும் என் நன்றி.

விழாவிற்கு நம் envazhi.com வினோவும் வந்திருந்தார். விழாவின் ஹை-லைட்ஸ் மற்றும் விழா பற்றிய விரிவான பதிவு விரைவில் வெளியிடப்படும்.

- சுந்தர்

[Onlyrajini.com is best viewed in Mozilla Firefox. If you encounter any difficulty in viewing our site (or other parts of the site including comments section) in Internet explorer, kindly view in Mozilla Firefox.

Latest version of Mozilla Firefox can be downloaded in the following link.

It is virus-resistant, easy to lead and fastest browser. Tamil fonts display correctly in this browser.]