Monday, January 5, 2009

Titbits 11: "மக்கள் செல்வாக்குள்ள ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வரவேண்டும்!" - சிரஞ்சீவி, "ரஜினி ஒரு அபூர்வ மனிதர்" - லியாண்டர் பயஸ் Etc, etc.,

1) "ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வரவேண்டும்" - சிரஞ்சீவி

தமிழக எல்லைகளில் உள்ள ஆந்திர மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய சிரஞ்சீவி நேற்று விமானம் மூலம் சென்னை வந்துள்ளார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

சிரஞ்சீவி அரசியல் கட்சி நடத்தும் விதத்தில் எனக்கு நிறைய மாற்று கருத்துக்கள் உண்டு. அவர் குறித்த ஏமாற்றங்களும் உண்டு. அது ஒரு புறம் இருக்கட்டும். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று பகிரங்கமாக தனது விருப்பத்தை தெரிவிப்பவர்களில் சிரஞ்சீவியும் ஒருவர்.

தமிழகத்திலும் நம்மை போல நடிகர் ஒருவர் கட்சி துவங்கினால் நன்றாக இருக்கும் என்று அவர் நினைக்கலாம். (அப்ப ஏற்கனவே கட்சி துவக்கியுள்ள நடிகர்கள் ? அவர்களையெல்லாம் யார் கணக்கில் சேர்த்தது..!) மேலும் சூப்பர் ஸ்டார் அவரின் நெருங்கிய நண்பர் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்த சூழ்நிலையில் "தமிழகத்தில் ரஜினிக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. இதை புரிந்துகொண்டு அவர் அரசியலுக்கு வரவேண்டும்." என்ற தமது விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் சிரஞ்சீவி.

2) "சினிமாவிலும் சரி, நிஜத்திலும் சரி ரஜினி ஒரு அபூர்வமான மனிதர்" - டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்

சூப்பர் ஸ்டாரைப் பற்றி இதோ மற்றுமொரு பிரபலத்தின் அட்டகாசமான கருத்து. இன்று வெளியாகியிருக்கும் டைம்ஸ் ஆப் இந்தியாவில் பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் பேட்டியளித்துள்ளார்.

நான் ரஜினியின் பல படங்களை பார்த்திருக்கிறேன். அதில் பல படங்கள் என் "All time favourites". நான் சிறு வயதில் அவரை நேரில் சந்திக்கும் அறிய வாய்ப்பை பெற்றிருக்கிறேன். சினிமாவிலும் சரி, நிஜத்திலும் சரி ரஜினி ஒரு அபூர்வமான மனிதர் என்று தான் நான் கருதுகிறேன்.

கவனிக்க கேள்வியாளர் கேட்டதென்னவோ, ஏதாவது தமிழ் படங்கள் பார்த்திருக்கிறீர்களா என்பது தான். ஆனால் அதற்க்கு அவர் கூறியிருக்கும் பதில் தான் நீங்கள் மேலே படித்தது. தமிழ் சினிமா என்றாலே ரஜினி தான் பெரும்பாலானவர்களுக்கு நினைவுக்கு வருகிறார். இந்த நிலையில் அவரின் செல்வாக்கை அளக்கிறேன் என்று அவரை சிறுமைப்படுத்த முயலும் கைப்புள்ளைகளை என்னவென்று சொல்வது...?

(செய்தி உதவி: மணிகண்டன்)

3) புத்தாண்டை முன்னிட்டு ஸ்டார் தியேட்டரில் முத்து - தூள் கிளப்பிய நம் ரசிகர்கள்

திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள திரையரங்கம் ஸ்டார். இங்கு பெரும்பாலும் இரண்டாம்கட்ட அல்லது மூன்றாம் கட்டமாக ரிலீசாகும்படங்கள் தான் திரையிடப்படும். சில சமயம் பழைய படங்கள் கூட திரையிடுவார்கள். நம் சூப்பர் ஸ்டாரின் பழைய படங்கள் இங்கு அடிக்கடி ரிலீசாகும்.

அப்படி நம் படங்கள் திரையிடப்படும்போது திருவல்லிக்கேணி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நம் ரசிகர்கள் பலர் தவறாது வந்து படங்களை கண்டுகளிப்பர்.

புத்தாண்டையொட்டி இங்கு சூப்பர் ஸ்டாரின் முத்து திரையிடப்பட்டது. 31 ஆம் தேதி இரவுக்காட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. மொத்தம் சுமார் 250 - 300 பேர் இருந்தனர் அரங்கில். படம் ஆரம்பித்து தட்டில் கார்ட் போட்டதிலிருந்து இடைவேளை வரை நம் ரசிர்கள் பலர் ஆட்டம் பட்டம் கொண்டாட்டம் என திரையரங்கை அதகளப்படுத்திவிட்டனர்.

ஸ்க்ரீன் முன்பாக ஓயாமல் மெழுகுவர்த்தி, கற்பூரம் என்று கணக்கிலாமல் ஏற்றி வைத்து, "சூப்பர் ஸ்டார் வாழ்க" "தெய்வமே" "டாக்டர் ரஜினிகாந்த்" என்று கோஷம் போட்டுகொண்டேயிருந்தனர். ஒருவன் ஒருவன் முதலாளி, அம்ற்றும் தில்லானா பாடலின் போது கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்டவர்கள் ஸ்க்ரீன் முன்பாக உற்சாக நடனமாடினர். முக்கிய வசனங்களின் போது விசில் சத்தம் பறந்தது.

சரியாக புத்தாண்டு பிறந்த நேரத்த்தில் அதாவது இரவு 12.01 க்கு ஜெயபாரதி சரத்குமாரிடம் சூப்பர் ஸ்டார் பற்றி "இந்த மண்ணுக்கு சொந்தக்காரனே அவன்தான்டா. இந்த மண்ணை ஆளவேண்டியவனே அவன்தான்டா." என்று கூறும் வசனம் தோன்றியது. தற்செயலாக இருந்தாலும் மொத்தத்தில் புத்தாண்டு கலக்கலாக பிறந்துள்ளது.

படத்தை அன்றிரவு அங்கு பார்த்த நம் நண்பர் ஒருவர் சொன்னது இது.

இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் முத்து திரைப்படம் அடிக்கடி டி.வி.க்களில் ஒளிபரப்பான படம் என்பது தான். சமீபத்தில் கூட இப்படம் சன் டி.வி.யில் ஒளிபரப்பட்டது. அப்படி இருந்தும் மக்களை தியேட்டருக்கு இழுக்க சூப்பர் ஸ்டார் ஒருவரால் மட்டுமே முடியும்.

4) திருமங்கலத்தில் தூள் பறக்கும் காமெடி காட்சிகள்

திருமங்கலத்தில் தினசரி காமெடி கலாட்டா தான். உபயம்: நம் கேப்டன். அவரின் உரையை கேட்டால் வயிறு குலுங்க சிரிக்கலாம். மன அழுத்தம், மன சோர்வு உள்ளிட்ட பல நோய்களுக்கு அது மாமருந்து. போதாகுறைக்கு அண்ணன் சுப்ரீம் ஸ்டார் வேறு களத்தில் உள்ளார். மக்களை கிச்சு கிச்சு மூட்டுவதில் இருவருக்கும் கடும்போட்டி நிலவுகிறது.

உதாரணத்துக்கு கேப்ப்டனும் சுப்ரீம் ஸ்டாரும் கூறிய சில டயலாக்குகளை படியுங்களேன். உங்களுக்கே புரியும்.

கேப்டன்: "பொதுமக்களுக்கு பணம் கொடுத்து எனது பிரசாரத்துக்கு வரவிடாமல் சில கட்சியினர் தடுக்கின்றனர். தே.மு.தி.க வேட்பாளர் தவறு செய்தால் கட்டி வைத்து உதைப்பேன். வாக்காளர்களுக்கு சில கட்சியினர் செல்போன் கொடுத்துவருகின்றனர். அப்படி கொடுத்தாலும் எனது வெற்றியை தடுக்க முடியாது. இந்த தேர்தலுக்கு கிட்டத்தட்ட நூறு கோடிவரை செலவழிக்கிறார்கள். எல்லாம் என் வெற்றியை தடுக்கத் தான். இங்கு ஒரு நடிகர் பிரசாரத்துக்கு வரப் போவதாக அறிந்தேன். (சரத் குமாரை மறைமுகமாக குறிப்பிட்டு). நடிகர்களை எல்லாம் நம்பாதீர்கள். அவர்கள் உங்கள் முன் நடிப்பார்கள்" என்று வீராவேசமாக பேச, "யோவ் அப்போ நீ யாருய்யா" என்று ஒருவர் சவுண்ட் விட, கேப்டன் உடனே கப்சிப்.

அதேபோல், வேறொரு கிராமத்தில் மக்களை பார்த்து, "நீங்கள் யாருக்கு ஒட்டுபோடுவீர்கள்?" என்று ஆவலாக கேட்க, "தி.மு.க.வுக்கு" என்று பாதி கூட்டமும், "அ.தி.மு.க.வுக்கு" என்று மீதி கூட்டமும் கோரசாக காத்த, நொந்தே போய்விட்டார் கேப்டன். (இது அவர் ஆதரவு நாளிதழிலேயே இன்று வந்துள்ள செய்தி!)

சரி அப்படின்னா, இவர் பிரசாரத்துக்கு எதுக்கு கூட்டம் வருதுன்னு கேக்குறீங்களா? அட எல்லாம் அவர் பண்ற காமெடியை ரசிக்கத்தான். இலவசமா காமெடி காட்சி கிடைச்சா நீங்க ரசிக்க மாட்டீங்களா என்ன?

பிரசாரத்துக்கு செல்கையில் தி.மு.க. வின் தேர்தல் அலுவலகம் ஒன்றை பார்த்து வண்டியை நிறுத்தி கேப்டன் சவுண்ட் விட, பதிலுக்கு அவர்கள் கற்களை தூக்க, கேப்டன் ஓட்டம் பிடித்தது தனிக்கதை.

ஒ.கே. அடுத்து சுப்ரீம் ஸ்டார் என்ன சொல்றாருன்னு பார்போம்.

சுப்ரீம் ஸ்டார்: (இவருக்கு இந்த பெயர் எப்படி வந்தது என்று யாராவது கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ்).

எங்கள் இலக்கு பாராளுமன்ற தேர்தல் தான். இதற்காக வரும் ஜனவரி 21 தேதி முதல் ராதிகாவும் நானும் அடுத்தடுத்து சூறாவளி பிரச்சாரம் செய்யவிருக்கிறோம். மற்றவர்கள் பணம் கொடுப்பதை எதிர்க்கும் விஜயகாந்த் அவர் மட்டும் வாக்களர்களுக்கு பணம் கொடுக்கலாமா? இந்த தேர்தல் நியாயமாக நடந்தால் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்.

சுப்ரீம் ஸ்டாரினி : (அதாங்க ராதிகா)

என் கணவருக்கு குடிகாரர் என்ற பெயர் கிடையாது. சட்டசபைக்கு சிலர் குடித்துவிட்டு வருவதுண்டு. இப்படியெல்லாம் நடக்குமா என்று என்னால் நினைத்து கூட பார்க்கமுடியவில்லை. வாக்காளர்கள் எங்களுக்கு வாக்களித்தால் நிச்சயம் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும்.

எப்படி... போட்டி போட்டுகொண்டு கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள் அல்லவா?

இப்படி தினம் தினம் திருமங்கலத்தில் காமெடி திருவிழாதான்.

[END]