
நாளிதழ்களில் ஆர்.எம்.வீ. அவர்களின் இல்ல திருமண விழா பற்றி விளம்பரம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அப்போதே யூகித்தேன், தலைவர் நிச்சயம் இதில் கலந்துகொள்வார் என்று. ஏன் கணிப்பு தவறவில்லை. ஏனெனில், ஆர்.எம்.வீ. அவர்கள் மீது சூப்பர் ஸ்டார் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் அளவிடமுடியாதது. அவர் இல்ல திருமணம் என்றால் சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பு இல்லாமல் இருக்குமா அல்லது சூப்பர் ஸ்டார் தான் கலந்துகொள்ளாது போய்விடுவாரா?
ஆர்.எம். வீரப்பன் மகன் தங்கராஜ் திருமணம் சென்னை ராஜா முத்தையா மகாலில் இன்று நடந்த போது ரஜினி பங்கேற்று பேசினார். என் மனதில் நீண்ட நாட்களாக உறுத்தி வந்த ஒரு விஷயத்தை பற்றி வெளிப்படையாக தலைவரே தனது மனதில் இருப்பதை கொட்டிவிட்டார்.

பாட்ஷா பட வெள்ளி விழாவில் வெடிகுண்டு கலாச்சாரத்தை பற்றி சூப்பர் ஸ்டார் கண்டிக்கப் போய், அது கடைசியில் எங்கு போய் முடிந்தது என்று உங்களுக்கே தெரியும். அந்த சுழலில் சிக்கி பாதிக்கப்பட்டவர் தான் ஐயா ஆர்.எம்.வீ.
1996 - ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. - தா.மா.கா கூட்டணி அமைத்து அது தேர்தலில் சூப்பர் ஸ்டாரின் மகத்தான ஆதரவுடன் போட்டியிட்டு அபார வெற்றி பெற்று வாகை சூடியபோது, சூப்பர் ஸ்டாரின் பேச்சால் அ.தி.மு.க.விலிருந்தே நீக்கப்பட்ட ஆர்.எம்.வீ. அவர்கள் யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை. கிட்டத்தட்ட அனைவராலும் மறக்கப்பட்டார். தனது வழக்கப்படி, சீட் இல்லாதவர்களுக்கு இதயத்தில் தான் இடமுண்டு என்று கலைஞர் கூறிய சமயத்தில், அவர் கிட்டே பேசி ஒரு எம்.எல்.ஏ. தொகுதியாவது ஆர்.எம்.வீ. அய்யாவுக்கு தலைவர் வாங்கி தந்திருக்கலாம்.
இத்துனை புறக்கணிப்பிலும் சூப்பர் ஸ்டாருடன் ஆர்.எம்.வீ. வைத்திருந்த நல்லுறவு, ஆண்டுகள் கழிந்த போதும் பாதிக்கப்படவேயில்லை. அதற்க்கு பிறகு நடைபெற்ற சூப்பர் ஸ்டாரின் பல பட துவக்க விழாக்களுக்கு சிறப்பு அழைப்பாளராக வருகை தந்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ஆர்.எம்.வி. அவர்கள் குறித்தும், பாட்ஷா படத்தின் பிரமாண்ட வெற்றி குறித்தும் மேற்படி திருமண நிகழ்ச்சியில் பேசியதாவது....
"ரொம்ப நாட்களுக்கு பிறகு இன்று கலைஞரை ஒரே மேடையில் சந்திக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஆர்.எம். வீரப்பன் எனது நீண்ட கால நண்பர். அவருக்கும் எனக்கும் உள்ள நட்பு ஆழமானது. அன்பானது.
என்னால் நிறைய பேர் லாபம் அடைந்து இருக்கிறார்கள். சிலர் நஷ்டம் அடைந்துள்ளனர். அவர்களில் ஆர்.எம். வீரப்பனும் ஒருவர்.
பாட்ஷா பட சர்ச்சையில் உங்களுக்கு இப்படியொரு நிலைமை ஆகிவிட்டதே என்று கேட்டேன். அதற்கு அவர் இது காலத்தின் கட்டாயம் என்றார். ஆத்திக வாதி என்றால் கடவுள் செய்தது என்பார்கள். இவர் நாத்திக வாதியாக இருந்ததால் காலத்தின் கட்டாயம் என்றார்.

ஆர்.எம். வீரப்பன் நண்பராக மட்டுமின்றி வழி காட்டியாகவும் இருக்கிறார். என் மேல் மிகுந்த அன்பு வைத்துள்ளார்.
பாட்ஷா படம் எனக்கு ரொம்ப பேர் வாங்கி கொடுத்தது. அதற்கு முக்கிய காரணம் ஆர்.எம். வீரப்பன். அந்த படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பதில் அக்கறையும் ஈடுபாடும் காட்டினார். அவரது தயாரிப்பில் வந்த மூன்று முகம் படமும் அபாரமாக வெற்றி பெற்றது.
பாட்ஷா படம் மாதிரி மீண்டும் ஒரு படம் எடுக்க வேண்டும் என்று பலர் என்னிடம் சொன்னார்கள். அப்படி எடுத்தால் ஆர்.எம். வீரப்பன்தான் தயாரிக்க வேண்டும் என்றேன். அவரால் தான் அப்படி ஒரு படத்தை எடுக்க முடியும்.
எம்.ஜி. ஆருடன் எப்படி நட்புடன் இருந்தாரோ அதே போல் கலைஞரிடம் இப்போது இருக்கிறார்." இவ்வாறு ரஜினி பேசினார்.

விழாவில் சுவாரஸ்யம்: மேலே உள்ள புகைப்படத்தை சற்று பாருங்கள்.... தற்போதைய முதல்வர் கலைஞரும், அருகே நிற்கும் சூப்பர் ஸ்டாரும், பின்னணியில் (backdrop) முன்னாள் முதல்வர் அமரர் எம்.ஜி.ஆர். அவர்களின் படமும், இடம் பெற்றுள்ள இந்த படத்தை பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
நேற்றைய முதல்வர்; இன்றைய முதல்வர்; நாளைய முதல்வர்!! சரி தானே? (தலைவருக்கு ராஜ களை இப்போவே வந்துடுச்சுப்பா!)
கீழே உள்ள படத்தை பாருங்களேன். முதல்வரின் உதவியாளர் சண்முகநாதன் தலைவரிடம் ஏதோ பேசுவதை... இந்த ஸ்டில் இன்னும் டக்கர் தானே?

[Note: Site Maintenance work is almost completed. Soon we shall meet in our brand new home site Onlysuperstar.com]