………………………………………………………………………………………………………………
கடந்த இரண்டு நாட்களாக நான் தயார் செய்து கொண்டிருந்த இந்த தொகுப்பு, மதியமே தயாராகிவிட்டது. புகைப்படங்களை தயார் செய்ய எனக்கு நேரம் தேவைப்பட்டதால் இரவு போஸ்ட் செய்துகொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். அதற்குள் நான் தயார் செய்து வைத்திருந்த ஒரு செய்திக்கு வேலையே இல்லாமல் போய்விட்டது. ரசிகர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக சிஃபி அந்த செய்தியையே நீக்கியிருப்பதாக Envazhi.com மூலமாக அறிந்தேன். இருப்பினும் நான் தயார் செய்து வைத்திருந்த செய்தியை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். இந்த தொகுப்பில் இரண்டாவதாக நான் அளித்திருக்கும் செய்திதான் அது. அவர்களின் சர்ச்சைக்குரிய டாப் 5 வரிசை பற்றி நான் எதுவும் கூறவில்லை. (காரணம் அதை முதலில் படித்தவுடன் எனக்கு சிரிப்பு தான் வந்தது!) ஹொகேனக்கல் பிரச்னையில் சூப்பர் ஸ்டார் வருத்தம் தெரிவித்ததை மன்னிப்பு கேட்டதாக திரும்ப திரும்ப உள் நோக்கத்துடன் கூறி வருவதைத்தான் நான் கண்டித்திருக்கிறேன்.
- சுந்தர்
…………………………………………………………………………………………………………………
1) ரஜினி அமிதாப் வழி செல்லவேண்டுமா?
ஒருவரை கொல்வதானால் விஷம் வைத்தும் கொல்லலாம். சர்க்கரை கொடுத்தும் கொல்லலாம். ரஜினி விஷயத்தில் சிலர் எழுதுவதும் இப்படியே.
சமீபத்தில் ஒரு வலைத்தளத்தில் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார்கள். கட்டுரை முழுதும் சூப்பரோ சூப்பர். ஆனால் முடிவில் அவர்கள் கூறியது இருக்கிறதே, அது தான் சொதப்பலோ சொதப்பல்.
பொதுவாக இது போன்ற உளவியல் ரீதியாக எழுதப்படும் கட்டுரைகளை படிக்கும்போது நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ரஜினியை ஆகோ ஓஹோவென்று அவர்கள் கட்டுரை முழுதும் புகழ்ந்துவிட்டு இறுதியில் அவருக்கு ஒரு வஞ்சக வலை விரித்திருப்பார்கள். இவர்கள் வலையில் ரஜினி விழவாப் போகிறார்? எதற்கு அலட்டிக்கொள்வானேன் என்று தானே கேட்கிறீர்கள். அவர் விழுந்தால் என்ன அவர் ரசிகர்கள் விழுந்தால் என்ன... எல்லாம் ஒன்று தானே?
அப்படி என்ன தான் எழுதியிருந்தார்கள் முடிவில்? அமிதாப்பை போல ரஜினி வரவேண்டுமாம். அவரைப் போல் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கவேண்டுமாம்.... இது எப்படி இருக்கு?
ரஜினி, அமிதாப்பின் பாதையில் ஏன் போகவேண்டும்?
அமிதாப் ஒரு சிறந்த மனிதர் மற்றும் நடிகர் என்பதில் எனக்கு எந்த மாற்றுகருத்தும் இல்லை. ஆனால், தமது 59 வது வயதிலும் இளம் ஹீரோயின்களோடு டூயட் பாடும் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினி, அமிதாப்பின் பாதையில் ஏன் போகவேண்டும்?
அதற்க்கு அவர் பேசாமால் ஒய்வு பெற்றுவிடலாம். சிவாஜி, அமிதாப் ஆகியோர் செய்தவற்றை ரஜினி நிச்சயம் செய்யக்கூடாது. ரஜினி என்றுமே எம்.ஜி.யார் வழியில் தான் செல்லவேண்டும். கடைசிவரை ஒரு சூப்பர் ஹீரோவாகவே எம்.ஜி.ஆர். நடித்தார். தனது கடைசிப் படத்தில் கூட எம்.ஜி.ஆர். கதாநாயகனாகத்தான் நடித்தார். எனவே சூப்பர் ஸ்டாரும் கடைசிவரை ஹீரோவாகத் தான் நடிக்கவேண்டும். எதிர்காலத்தில் நடித்தது போதும் என்று அவர் நினைத்தால் ஒன்று அரசியலுக்கு வரவேண்டும் அல்லது ஒய்வு பெற்றுவிடவேண்டும். இது தான் நம் விருப்பம்.
ரஜினியை பிடிக்காத சக்திகள் கையிலெடுக்கும் ஆயுதம்
ரஜினியை பிடிக்காத சக்திகள் கையிலெடுக்கும் ஆயுதம் தான் இந்த "அமிதாப் வழி போங்க" என்பது. இந்தியா டுடே ரஜினியை மட்டம் தட்டுவதர்கேன்றே சென்ற ஆண்டு ஒரு சிறப்பிதழ் வெளியிட்டதே ஞாபகமிருக்கிறதா? அதில் அந்த இதழின் சிறப்பாசிரியர் கூட கூறியிருந்தது இது தான். "குழப்பங்களை தவிர்த்து ரஜினி அமிதாப் வழி சென்றால் அவரது எல்லைகள் விரிவடையும்!"
பரம வைரிகள் முதல் நேற்று முளைத்த காளான்கள் வரை ரஜினியின் எதிர்ப்பாளர்கள் அனைவரும் கூறும் ஒரு ஆலோசனையாக்கும் இது. என்ன ஒரு நயவஞ்சக ஆலோசனை...! ஆனால் தலைவர் மிகவும் புத்திசாலி. அவருக்கு தெரியும் எந்த பாதையில் போகவேண்டும், எதில் போனால் மதிப்பு நிலைத்திருக்கும் என்று...!!
2) சிஃபி தூவியுள்ள விஷ விதை! யார் பலனடைய தூவப்பட்டது?
சிஃபி கும்பல் மற்றொரு வக்கிரத்தை அரங்கேற்றியுள்ளது. 2008 ன் டாப் 5 நடிகர்கள் என்ற பெயரில்.
அவர்கள் பட்டியலை முதலில் பார்த்துவிடுவோம். 5) அஜீத் 4) சூர்யா 3) விஜய் 2) ரஜினி 1) கமல்.
இந்த பட்டியலில் உள்ள வரிசை பற்றி நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. அவர்களே கூறியது போல 2008 இல் அந்தந்த நடிகர்களின் படங்கள் பெற்ற வெற்றியை வைத்து இந்த வரிசையை அவர்கள் தயாரித்துள்ளார்களாம். ஓ.கே. மன்னிப்போமாக.
இதில் ரஜினியை பற்றிய செய்தியில் மட்டும் தங்கள் வழக்கமான வக்கிரத்தை அரங்கேற்றியுள்ளது வக்கிர சிஃபி கும்பல். குசேலன் குறித்து அவர்கள் கூறியதை கூட நாம் பொருட்படுத்தவில்லை. ஆனால் அவர்கள் அதற்க்கு பிறகு அவர்கள் தூவியுள்ள விஷ விதை இருக்கிறதே.... அப்பப்பா.... யார் பலனடைய தூவப்பட்டதோ?
முன்னை காட்டிலும் உயர்ந்த ரஜினியின் செல்வாக்கு
ஹொகேனக்கல் விஷயத்தில் ரஜினி கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டதால் அவரது செல்வாக்கு பெருமளவு சரிந்ததாம். தற்போது எந்திரனை சன் பிக்சர்ஸ் வாங்கியதை அடுத்த அவரது செல்வாக்கு மீண்டு திரும்பிவிட்டதாம். இது எப்படி இருக்கு? இதை எழுதிய அரை வேக்காடு யாரு என்று தெரியவில்லை.
தான் வருத்தம் தான் கேட்டதாகவும், மன்னிப்பு கேட்க்கவில்லைஎன்றும், அதை கூட தான் கேட்டதற்கான சூழ்நிலையை சூப்பர் ஸ்டார் தமது ரசிகர் சந்திப்பில் தெளிவாக விளக்கிவிட்டபிறகும் கூட இப்படி "மன்னிப்பு கேட்டார், மன்னிப்பு கேட்டார்" என்று எழுதும் இவர்களை எல்லாம் நிற்க வைத்து.....
என்னைப் பொறுத்தவரை வருத்தப் பிரச்னையில் அவரது செல்வாக்கு பாதிக்கப்பட்டது உண்மை தான் என்றாலும், தமது ரசிகர் சந்திப்பில் நடந்து என்ன என்று அவர் விளக்கிக் கூறிய பின் அவர் மீதுள்ள கறை அகன்று முன்னை காட்டிலும் அவரது செல்வாக்கு உயர்ந்துவிட்டது. உண்மை இப்படியிருக்க எந்திரனை சன் வாங்கியதால் வருத்தப்ரச்னையில் சரிந்துவிட்ட அவரது செல்வாக்கு மீண்டும் உயர்ந்துவிட்டதாம். அடப்பாவிகளா....
இப்படி எழுதுவது ஒரு வகை "Perverted Journalism" ஆகும். அதாவது "வக்கிர இதழியல்". சிஃபி என்றாலே அவர்கள் ரஜினி எதிர்ப்பு சக்திகள், அது ஒரு ரஜினி எதிர்ப்பு வெப்சைட் என்ற அடையாளத்தை நாம் ஏற்படுத்திவிட்டால் போதும். இவர்கள் தாமாக வழிக்கு வருவார்கள்.
இதற்க்கெல்லாம் மூல காரணம் தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவில் தமது வக்கிரத்தை காண்பித்துவரும் அந்த எழுத்தாளர் தான்.
நான் மறுபடியும் மறுபடியும் கூறுகிறேன். சிஃபி, கப்சாவூட்ஸ் போன்ற தளங்களை முற்றிலுமாக புறக்கணியுங்கள். நமது சக்தியை நிரூபியுங்கள். விகடனில் இன்னும் சிலர் தங்கள் சந்தாவை சாக்கு போக்கு சொல்லி தொடர்வது வேதனைக்குரியது. வருத்ததிற்குரியது.
3) விஜயலக்ஷ்மி சுல்தானுக்கு வந்தது எப்படி?
தற்போது சுல்தான் படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடி விஜயலக்ஷ்மி. பிரபல இயக்குனர் அகத்தியனின் மகள் இவர். விஜய் டி.வி.யில் தொகுப்பாளராக அறிமுகமான இவர் பின்னர் நடித்த 'சென்னை 600028' மற்றும் 'அஞ்சாதே' சூப்பர் ஹிட்டாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
விஜயலக்ஷ்மியின் பாத்திரத்துக்கு முதலில் பேசப்பட்டவர் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக திகழும் இலியானா தான். ஆனால், பிசியான முன்னணி நடிகையாக இருக்கும் தனக்கு சௌந்தர்யா ரஜினி விதித்த நிபந்தனைகள் (சம்பளம் மற்றும் எப்போது கூப்பிட்டாலும் வரவேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள்) ஒத்துவராது என்பதால் அவர் படத்திலிருந்து விலகிக்கொண்டார். அதையடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டவர் தான் விஜயலக்ஷ்மி.
எத்தனையோ பேர் இருக்க இவ்விருவரை ஏன் சௌந்தர்யா அணுகினார்? அதற்க்கு காரணம் இருக்கிறது. அனிமேஷன் கேரக்டராக வரும் சூப்பர் ஸ்டாரின் தோற்றத்திற்கு ஜோடியாக இவ்விருவரும் மிகவும் பொருத்தமாக இருப்பார்கள் என்பதால் தான். இவ்விருவரின் உடற்கட்டும், முகமும், கூந்தலும் அனிமேஷன் செய்வதற்கு எளியது. சூப்பர் ஸ்டாரின் கேரக்டரின் உருவ அமைப்புக்கு பொருத்தமாகவும் இருப்பார்கள். இதில் இரண்டாவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள விஜயலக்ஷ்மி நூறு சதவீதம் பொருத்தமான ஜோடி என்றால் மிகையாகாது.
சூப்பர் ஸ்டாரின் தயக்கம்
தனது ஜோடியாக விஜயலக்ஷ்மியை ஏற்க சூப்பர் ஸ்டார் முதலில் தயங்கினார். இருப்பினும் சௌந்தர்யா அனிமேஷன் கேரக்டரின் தன்மையை எடுத்துக் கூறி தனது தந்தையை கன்வின்ஸ் செய்து சம்மதிக்க வைத்தார்.
சூப்பர் ஸ்டாரின் அனிமேஷன் கேரக்டருக்கு ஜோடியாக நடித்தாலும், நிஜமாகவே சூப்பர் ஸ்டாருடன் நடிப்பதால் ("Motion Capture" செய்வதன் பொருட்டு) விஜி மிகவும் சந்தோஷத்தில் உள்ளார். இருக்காத பின்னே? ஒரே படத்தில் உலகம் முழுதும் பரிச்சயமாகும் வாய்ப்பையல்லவா பெற்றிருக்கிறார்.
"ரஜினியுடன் நடிக்க கிடைத்த வாய்ப்பை பெருமையாக கருதுகிறேன்"
சுல்தானில் நடிப்பதற்காக அவர் அதிக நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாகவும் அதன் பொருட்டு அவர் மற்ற படங்களில் நடிக்க சிக்கல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அது குறித்து கூறிய விஜயலக்ஷ்மி, "ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன். படத்தில் ஒப்பந்தம் செய்யும்போதே எப்போது கூப்பிட்டாலும் படப்பிடிப்புக்கு வரவேண்டும் என்று கூறித்தான் ஒப்பந்தம் செய்தார்கள். அதை நான் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன். புதிதாக படங்களை ஒப்புக்கொல்லும்போதும் அதை அவர்களிடம் கூறிவிடுவேன். அதனால் எந்த பிரச்னையும் இல்லை. ரஜினியுடன் நடிக்க எத்தனை நாட்கள் வேண்டுமானால் காத்திருக்க தயார். அதுவே எனக்கு சந்தோஷம்தான்."
விஜி சுல்தானில் இடம் பெற்றது ஒரு பெரிய கதை. அனிமேஷன் படம் என்பதால் சுல்தானில் ஹீரோயினாக யாரையும் ஒப்பந்தம் செய்யும் திட்டம் முதலில் கிடையாது. காட்சிகள் தத்ரூபமாக இருக்கவேண்டும் என்பதால், படத்தை இயக்கம் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது தந்தையிடம் பேசி, அவரது கால்ஷீட் வாங்கி, அவரை நிஜத்தில் நடிக்கவைத்து அதை அப்படியே Capture செய்து அதன் மீது 3D Modelling செய்தார். மேற்படி காட்சிகள் பிரமாதமாக வரவே, ஹீரோயினையும் இதுபோல நிஜத்தில் நடிக்கவைத்து Capture செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இலியானாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று அது சரிப்படாமல் போகவே, அடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டவர்தான் விஜயலக்ஷ்மி. சம்பளம் முதல் அனைத்து நிபந்தனைகளையும் அவர் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். விஜியின் தந்தை அகத்தியன், ரஜினியுடன் தமது மகள் நடிப்பது குறித்து தமது மட்டற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தி மகளை ஆசீர்வதித்தார்.
முன்னணி இடத்தை பிடிக்க விஜயலக்ஷ்மியை வாழ்த்துகிறோம்.
4) கரும்பு கசந்தால் குற்றம் யாரிடம்?
எந்திரனுக்கு எதிராக ஏதாவது செய்திகளை எழுதிக்கொண்டேயிருக்கலாம் என்று வக்கிரத்துடன் காத்திருந்த போணியாகாத சில கட்டுரையாளர்களுக்கு இடி போல வந்தது சன் நெட்வொர்க் எந்திரனை தயாரிக்கும் அந்த செய்தி. வேறொன்று மில்லை இனி வாலை இஷ்டத்துக்கு ஆட்ட முடியாதே என்னும் கவலை தான்.
இருப்பினும், மாடு காணாமல் போனவனுக்கு மணியோசை கேட்டுக் கண்டே இருக்கும் என்னும் கதையாக எந்திரனை சுற்றிய நிகழ்வுகள் அவர்களுக்கு எதிர்மறையாகவே தெரிகிறது போல. எந்திரனை வாங்கியிருக்கும் சன்னை கலவரப்படுத்த - கொஞ்சம் மறைமுகமாக - மேற்படி கட்டுரையாளர் (22/12/08 அன்று வெளியான) டைம்ஸ் ஆப் இந்தியாவின் சென்னை பதிப்பில் முயன்றிருக்கிறார் என்பது தெளிவாக புரிகிறது.
மனம் போன போக்கில்...
எந்திரனை தயாரிக்கும் பொன்னான வாய்ப்பு தவிர்க்க இயலாமல் ஐங்கரனின் கரத்திலிருந்து நழுவிச் சென்றது எனவும் அதில் அவர்களுக்கு வருத்தம் தான் எனவும் நாம் முன்பே குறிப்பிட்டிருந்தோம். ஆனால் நேற்றைய டைம்ஸ் ஆப் இந்தியாவில் கட்டுரை எழுதியிருக்கும் அந்த செய்தியாளர் எந்திரன் கைமாறியது குறித்து ஐங்கரன் தற்போது நிம்மதி பெரு மூச்சு விடுவதாக குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமா, செலவை எக்கச்சக்கமாக இழுத்துவிட்டதாகவும் அதனால் ஐங்கரன் படத்தை கைமாற்றும் என்னத்திற்கு வந்ததாகவும் ஷங்கர் மீது பழி போட்டுள்ளார். ஷங்கர் பற்றியும் அவரின் Grandeur பற்றியும் தெரிந்தேதான் படத்தை தயாரிக்க முன்வந்தது ஐங்கரன். மேலும் படத்தை துவக்கும்போது ஐங்கரன் வெளியிட்ட பத்திரிகை குறிப்பிலேயே படத்தின் அதிக பட்ஜெட் குறித்தும் அதில் பணியாற்றும் ஹாலிவுட் கலைஞர்கள் குறித்தும் பெருமிதத்துடன் குறிப்பிட்டிருந்தது. உண்மை இப்படியிருக்க ஹாலிவூட் கலைஞர்கள் இடம்பெற்றது பற்றியெல்லாம் தன் மனம் போன போக்கில் உளறிக்கொட்டியிருக்கிறார் அந்த எழுத்தாளர்.
ஐங்கரனிலிருந்து எந்திரன் குறித்து இதுவரை யாருமே எதிர்மறையாக கூறாத நிலையில் தமது சொந்த கருத்துக்களை ஐங்கரனில் யாரோ கூறியதாக மேற்படி கட்டுரையாளர் அச்சேற்றியிருக்கிறார்.
மலேசியா மற்றும் சிங்கப்பூரிலேயே பார்த்துவிடுவோம். மற்ற நாடுகளை எங்கே சேர்ப்பது?
அது மட்டுமா, இன்னோர் பெரிய புளுகுமூட்டையை அந்த எழுத்தாளர் கட்டியிருக்கிறார். ரஜினியின் Overseas collection power வெறும் 15 கோடிகள் தானாம். இது எப்படியிருக்கு?
அடப்பாவிகளா.... மலேசியா மற்றும் சிங்கப்பூரிலேயே இந்த தொகையை எங்கள் சிவாஜி ஈட்டியிருக்குமே... அப்படியெனில் எண்ணற்ற மற்ற நாடுகளில் எல்லாம்? என்ன செய்வது... கரும்பு கசக்கிறது என்றால் குற்றம் வாயில் தானே தவிர கரும்பில் அல்லவே....!
ஷங்கரும் அவரது குழுவினரும் விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்ததையெல்லாம் ஒரு குறையாக கூறியிருக்கிறார் மேற்படி எழுத்தாளர். தமிழ் சினிமாவில் குளிப்பதற்க்கே நட்சத்திரங்கள் மினரல் வாட்டர் கேட்கும் காலமய்யா இது. சூப்பர் ஸ்டார் நடிக்கும் ஒரு படத்தின் இயக்குனரும் அவரது குழுவினரும் முதல் வகுப்பில் பயணம் செய்வது ஒரு குற்றமா?
செலவை இழுத்துவிடுவதில் ஷங்கர் மீது நானும் அதிருப்தி கொண்டிருந்த காலம் உண்டு. ஆனால் முடிவில் தயாரிப்பாளர்களுக்கு ஒன்றிற்கு பல மடங்கு லாபத்தை அவர் பெற்றுக்கொடுக்கிறாரே? அதுவல்லவா முக்கியம்? ஷங்கரின் Grandeur மற்றும் Perfectionism படத்திற்கு வலுவை அல்லவா கூட்டுகிறது....!!!
அரைவேக்காடுகள் லிஸ்ட்டில் மற்றோர் சேர்க்கை
இத்துணைக் காலம் சிஃபியில் ரஜினிக்கெதிராக விஷ விதை தூவிக்கொண்டிருந்தவர் தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவிலும் அந்த பணியை செய்துவருகிறார். ஞானி, சாரு நிவேதிதா போன்ற அரைவேக்காடுகள் லிஸ்ட்டில் மேற்படி கட்டுரையாளர் சேர்ந்துவிட்டதை வேறு எப்படி சொல்ல?
[END]